
1.உண்மையில் கிளீநொச்சியில் நிலவரம் இப்பொழுது எப்படி உள்ளது?
ராணுவம் முன்னேறி வருவதாகவும் புலிகள் பலவீனமடைந்து விட்டதாகவும் சொல்லப்படும் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை?
கிளிநொச்சி நகரத்தை இராணுவம் முற்றுகையிட்டிருக்கிறது. கிளிநொச்சியை வீழ்த்துவதற்காய் இராணுவம் கடுமையான போரில் ஈடுபட்டுவருகிறது. கிளிநொச்சி நகரத்தை விட்டு மக்கள் எல்லோருமே வெளியேறிவிட்டார்கள். இராணுவ நகர்வுகளுக்கு எதிராக போராளிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்துகிறார்கள். இலங்கை அரசு பெரியளவில் இந்தப்போரை தயார்படுத்தி மேற்கொள்கிறது. உலகநாடுகளின் ஆயுத அரசியல் உதவியுடன் பெரும் போர் இங்கு நிகழ்கிறது. இராணுவம் முன்னேறி வருதாக கூறுகிறது. சண்டைகளின் போது இராணுவம் பலத்த இழப்புக்களை சந்திக்க நேரிடுகிறது. போராளிகள் பின்நகர்கிற பகுதிகளில் நுழைந்து கைப்பற்றிவிட்டு முன்னேறுவதாக இராணுவம் கூறுகிறது.
புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள் என்றுதான் எல்லோருமே நினைக்கிறார்கள். புலிகளின் பலம் குறித்து அல்லது பலவீனம் குறித்து யாராலும் மதிப்பிட முடியாது. போரில் போராளிகளின் ஆற்றல் தந்திரம் குறித்து போர்க்கள சூழல்தான் தீர்மானிக்கிறது. கிளிநொச்சியை போர் நெருக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடிதான் புலிகளின் பலத்தை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கிறது. பலநாடுகளின் உதவியுடன் நடக்கிற இந்தப்போரை புலிகள் முகம் கொடுத்து வருவது அவர்களின் பெரும் பலம் என்றே நினைக்கிறேன்.
கிளிநொச்சி கடும் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. அடுத்தாக முல்லைத்தீவு நகரத்தை குறி வைத்து இராணுவம் தாக்குதல்களை தொடங்கியிருக்கிறது. இங்கும் மக்கள் தொடர்ந்து துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.
2.புலிகள் தரப்பு மீண்டும் பலப்பட்டிருப்பதான தோற்றம் உருவாகியுள்ளது. இது உண்மையா?
நான் ஏற்கனவே கூறியதைப்போல புலிகளின்; பலம் குறைகிறது அதிகரிக்கிறது என்பதற்கு அல்லது அதன் மதிப்பீடுகளிற்கு அப்பால் பட்டது. அவர்களை கடும் சமராட இராணுவம் தூண்டிக் கொண்டேயிருக்கிறது. அவர்களும் மக்களும் நிலங்களை இழப்பது அவர்களின் பலத்தை அதிகரிக்கிறது. புலிகள் முன்னெடுக்கிற எதிர்த்தாக்குதல்களை இராணுவம் முகம் கொடுக்க நெருக்கடிப்படுகிறது. அவர்கள் நிலங்களை இழந்து விட்டார்கள் என்பதனால் போர்க்;கள ஆற்றல்களை இழந்து விட்டார்கள் என்று கருதமுடியாது. அவர்கள் மக்களிற்கிடையிலிருந்தே போராட்டத்தை கட்டியெழுப்புகிறார்கள். அதனால் விடுதலை வேண்டுகிற மக்களின் பலமாக அவர்களின் பலம் இருக்கிறது.
3.ராணுவம் மக்கள் பகுதிகளில் குண்டு எறிகிறதா?
அண்மையில் கிளிநொச்சியில் ஒரு நாளில் ஒன்பது தடவைகள் விமானம் தாக்கியது. இராணுவம் மக்கள் மீது குண்டுகளை கடுமையாக பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. பாடசாலை மாணவர்கள் அப்பாவி மக்கள் குழந்தைகள் தினம் கொல்லப்படுகிறார்கள். புலிகள் மீதுதான் இலங்கை இராணுவம் தாக்குவதாக எப்பொழுதுமே கூறுகிறது. அவர்கள் ஒருபோதும் தமது கொலைகளை ஏற்றக் கொண்டதில்லை. இரக்கமற்ற இந்தத் தாக்குதல்களை யாராலும் தடுக்க முடியாதிருக்கிறது. வாழ்வுக்கு மக்கள் தவிக்கிறார்கள். இந்தப் பகுதிகளில் மக்களை வாழவிடாமல் செய்யவே இப்படி வானிலிருந்தும் முன்னரங்குகளிலில் இருந்தும் இராணுவம் குண்டுகளை எறிந்தும் பொழிந்தும் கொண்டிருக்கிறது.
4.இப்பொழுதுள்ள நிலவரம் குறித்து மக்கள் என்ன கருதுகிறார்கள்?
அரசு போரை திணிக்கும் வரை மக்கள் போரை எதிர்க்க முற்படுகிறார்கள். மக்களிடம் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் துயரங்களிடமிருந்து வாழவும் நம்பிக்கை கொள்ளவும் துணிகிறார்கள். உலகம் அங்கிகரிக்கும் என்ற ஏக்கம் காணப்படுகிறது. மிகவும் நெருக்கடியான காலத்தில் வாழுகிறதாய் கருதுகிறார்கள். இந்த நெருக்கடி சுகந்திரத்தை தரும் என்ற காத்திருப்புடன் இருக்கிறார்கள். ஆனால் இராணுவ தீர்வுகளை அதற்கான முனைப்புக்களை ஒருபோதும் மக்கள் விரும்புவதி;லை. அரசு செய்கிற போரை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்ற கருத்து அவர்களிடம் தெளிவாயிருக்கிறது. முற்றுகையிடுகிற இராணுவத்தை தோற்கடிக்கிற செய்திகளுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.
5.இந்தியா அனுப்பும் நிவாரண உதவிகள் மக்களுக்கு கிடைக்கிறதா?
இந்தியாவின் நிவாரண உதவிகள் மக்களுக்கு இங்கு கிடைக்கிறது. அவை உணவு பங்கிடுகிற சங்கங்கள் ஊடாக பகிர்ந்தளிக்கப்படுகின்றன. உணவுத்தடையால் துயருகிற சூழ்நிலையில் இது மக்களின் பசியை ஓரளவு தீர்க்கிறது. இதற்கு இந்திய மக்களுக்கு ஈழமக்கள் நன்றி கூற வேண்டியிருக்கிறோம்.
6. இந்தியாவிடம் இருந்து என்ன மாதிரியான உதவிகளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்?
நீங்கள் முன்பு கேட்ட கேள்வியின் தொடர்ச்சியாகவே இதற்கு பதிலளிக்க நினைக்கிறேன். உணவுடன் இந்தப்பசி அடங்க முடியாது. முதல்வர் கருணாநிதியிடமும் இதைத்தான் மக்கள் எதிர்பார்கிறார்கள். அரசியல் ரீதியான தீர்வுக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் போரை முடிவுபடுத்தி எமது மக்களின் வாழ்வுரிமைக்கும் அதற்கான நாட்டிற்கு பங்களிக்க வேண்டும் இப்படித்தான் எதிர்பார்ப்பு இருக்கிறது. முதலில் எங்களை தாக்குவதற்கு ஆயுதங்களை வழங்க கூடாது என்ற கோரிக்கை இருக்கிறது. இந்தியாவும் தமிழகமும் முகம் காட்டுகிற போதெல்லாம் இப்படித்தான் மக்கள் எதிர்பார்கிறார்கள். உன்மையில் மக்கள் எதிர்பார்ப்;பதை இந்தியா நிறைவேற்ற வேண்டும். இந்த இடத்தில் இந்தியா பொருளாதார அரசியல் நன்மைகளை கருதி அதற்காக எமது மக்களை பலியிடுகிறது.
7. கிளிநொச்சி மற்றும் புலிகளின் பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரம் எப்படி உள்ளது?
இயல்பான வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. போரின் நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்குள்ளேயே வாழ்கிறார்கள். தொழில் கல்வி நாளாந்த இயக்;கம் குழம்பியபடி போகிறது. எப்பொழுதும் மரணம் வெருட்டுகிற வாழ்வாகவே இருக்கிறது. பாடசாலைகள் அலுவலகங்கள் எதுவும் இயங்க முடியாதிருக்கிறது. போரிடமிருந்து தப்புவதற்கும் அதை எதிர்கொள்ளுவதற்குமாக மக்கள் தயாராக வேண்டியுள்ளது. அடிக்கடி இடப்பெயர்வுகள் விமானத்தாக்குதல்கள் நடைபெறுவதால் துயரங்களில்தான் வாழுகிற சூழல் காணப்படுகிறது.
8. மக்கள் கிளிநொச்சியில் இருந்து வெளியேற விரும்புகிறார்களா?
மக்கள் கிளிநொச்சியைவிட்டு வெளியேற விரும்பவில்லை. ஆனால் வெளியேற்ற இராணுவம் தாக்குதலை கண்மூடித்தனமாக மேற்கொள்ளுகிறது. இங்கு வாழ்வதற்கு எதிரான நெருக்கடிகளை உண்டு பண்ணிவிட்டு தனது பகுதிகளுக்கு வரும்படி அறிவிக்கிறது. சில மக்கள் தாக்குதல்களை தாங்க முடியாது வெளியேறித்தான் இருக்கிறார்கள். எங்கள் மீது குண்டு வீசுகிற இராணுவத்திடம் நாங்கள் போய் அடைக்கலம் கொள்ளுவது எவ்வளவு துயரமானது. அரசு தனது குண்டுகளால் அச்சுறுத்தி மக்களை ஒடுக்குமுறைக்குள்ளே எடுத்துக்கொள்ள முயல்கிறது. வெளியேறிய மக்களின் துன்பங்கள் மிகவும்; கொடுமையானவை.
9.யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள், போர் நடக்கும் பகுதியில் உள்ள தங்கள் உறவினர்களை சென்று சந்திப்பது சாத்தியமா?
அது மிக நெடுநாளாக மறுக்கப்பட்டு வருகிறது. பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் போன்ற இராணுவம் கைப்பற்றியிருக்கிற பகுதிகளில் கடுமையான கிளியறனஸ் நடைமுறையிருக்கிறது. அவர்களின் விசாரணை அச்சுறுத்தல் பயண நெருக்கடிகளால் மக்கள் இந்த பயணங்களை தவிர்த்து வருகிறார்கள். போர் நடக்கிற பகுதிகளின் ஆபத்தாலும் மக்கள் இங்கு வர முடியாதிருக்கிறது. பயணங்களை சிக்கலாக்கி தொடர்புகளையும் தமிழ்ப்பகுதிகளையும் துண்டித்து கொண்டிருக்கிறது இராணுவம்.
10.கொழும்புவுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான புலிகள் பகுதி வழியாக வரும் பேருந்து போக்குவரத்து இப்பொழுது நடைபெறுகிறதா?
அந்தப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டுவிட்டது. ஏ-9 எனப்படும் அந்தப்பாதையில்தான் முதலில் போர் 2006இல் மூண்டது. அப்பொழுது முதல் பாதை மூடப்பட்டிருக்கிறது. அந்தப்பாதையை மீளத் திறப்பதில் தான் சமாதானம் குழம்பியது. அரசு அந்தப்பாதையை இறுதிவரை திறக்க உடன்படவில்லை. அதனால்தான் மக்கள் நிறைய பயண நெருக்கடிகளையும் தடைகளையும் சந்திக்கிறார்கள். அந்தப்பாதையை அண்;டி 2007இல் வன்னிப்போர் தொடங்கியது. இப்பொழுது அந்தப்பாதை முழுவதுமாய் போரிடம் பலியிடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
11. உணவுப் பொருட்கள், மருந்துகள், எரிபொருள், மின்சாரம் தடையின்றி கிடைக்கிறதா? அவற்றின் விலை நிலவரம் எப்படி இருக்கிறது? உதராணமாக கிளிநொச்சியில் ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, காய்கறிகளின் விலை ?
தடையுடன்தான் கிடைக்கின்றன. இதைப்பொருளாதாரப்போர் என்று கருதுகிறோம். போராட்ட மனப்பாங்கை சிதைப்பதாற்காய் பொருளாதார நெருக்கடியை அரசு ஏற்படுத்துகிறது. முக்கியமான தேவைகளுக்குரிய உணவு மற்றும் மருந்து மீதான தடை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எரிபொருள் தட்டுபாடாயிருக்கிறது. பெற்றோல் 700ரூபாவுக்கும் மண்ணெண்ணை200ரூபாக்கும் மேலாய் கொடுத்தும் வாங்க முடியாது. மின்சாரம் முற்றாக கிடைப்பதில்லை. பெரும் இழுபறிகளுக்கும் கதறல்களுக்கும் பிறகு குறிப்பிட்டளவு பொருட்கள் வந்தடைகின்றன. அதை முழுமையாக அரசு அனுப்ப அனுமதிப்பதில்லை. அவை வந்து சேர்வதற்கிடையில் மக்கள் கடும் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். இதில் அரசினது போர் திட்டம் இருக்கிறது.
அப்படி வருகிற பொருட்களை பங்கிடுவது பெரும் சிரமானது. அதிக விலையில் அவற்றை மக்கள் வாங்கவும் நேரிடுகிறது. ஒரு கிலோ அரிசி 200ரூபாய்க்கு மேல்தான் வாங்கலாம். சர்க்கரை 400ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ மாவு 150ரூபா, சீனி 400ரூபா ஒரு கிலோ மீன் 1000ரூபா என்றிருக்க மரக்கறிகளும் அதிக விலையில்தான் வாங்கலாம். தோட்டங்கள், வயல்கள், உற்பத்திகள் என்னதான் இருக்கிறது. அவைகளுக்கு அழிவும் நிச்சயமில்லாத தன்மையும் காணப்படுகிறது. இதற்கிடையில் குண்டு மழையில் எப்படித்தான் இவற்றை விலை கொடுத்து வாங்கி சமைத்து சாப்பிடுவது ... இது மிகவும் பயங்கரமானது.
14.பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்படுகிறார்களா? எப்படி என்பதையும் குறிப்பிடுங்கள்?
பேசுகிற உரிமை செய்திகளை அறிகிற உரிமை என்பவற்றை அரசு இங்கு மறுத்திருக்கிறது. தனது ஊடகங்களால் போர் பற்றிய பொய்யான செய்திகளை திணிக்கிறது. ஊடங்கள் மீது செய்தி கருத்துத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கு யாரும் எழுதுவதையோ செய்தி வெளியிடுவதையோ விரும்புவதில்லை. அவர்கள் ஆயுதங்களால் கொலை செய்யப்படுகிறார்கள். பத்திரிகையாளரை அரசு பின் தொடர்ந்து கொண்டு எச்சரிக்கிறது. பத்திரிகைள் இடை நடுவில் நின்றுவிடுகின்றன. இதற்கிடையில் அரச ஊடகங்கள் தமிழ்மக்களுக்கு எதிரான பொய்ச் செய்திகளை வெளியிட்டு செய்திக்கொலை செய்து கொண்டிருக்கிறது.
12.இப்பொழுது அங்கு சண்டை எந்த அளவில் உள்ளது? என்ன நடக்கும் என எதிர்பர்க்கிறீர்கள்?
சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அது எந்த நேரத்திலும் மூளலாம். எப்பொழுதும் நடை பெற்றுக்கொண்டிருக்கும். அதன் முடிவு பற்றி கூற முடியாது. சண்டையை முடிவுக்கு கொண்டு வருவோம் புலிகளை அழித்து முடித்துவிடுவோம் என்று அரசு கூறுவது சாத்தியமற்றது. அது கொடிய போரின் மூலம் ஈழப்போராட்டத்தை நசுக்குகிற கனவுடன் பெருமெடுப்பில் நிற்கிறது. இப்போதைய அரசும், புலிகள் அல்லது ஈழப்போராட்டம் பற்றி தவறாக மதிப்பிடுகிறது. இதுவும் மக்களை பலியெடுக்கிற போரில் மிகுந்த ஈடுபாடு கொண்டு மிகுந்த வெறியுடன் நிற்கிறது. சண்டையில் நம்பிக்கை வைத்திருக்கிற அரசிடம் அதன் மூலம் எதிர்கொள்வது மக்களுக்கும் போராளிகளுக்கும் தவிர்க்;க முடியாதிருக்கிறது. எனினும் இந்தப்போர் அமைதியான வாழ்வை தரும் என்று நம்புகிறோம். போர் முடியவேண்டும் என்ற நிம்மதியாக வாழவேண்டும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்.
இவரின் கனவு நனவாக வேண்டும்.
தளவாய் சுந்தரம்