Monday, December 7, 2009

“தற்போதைய தமிழ் ஆய்வின் போக்கு மனித சமூகத்திற்கு பயன்படக்கூடிய விதித்தில் நடைபெறவில்லை” - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்



தமிழ் பன்னபாட்டையும் மரபையும் நேசிக்கிற பெண்ணாக என்றைக்கும் எங்கும் வாழ் விரும்புகிறவர் கலாநிதி மனோண்மணி சண்முகதாஸ். ஈழத்தின் வடக்கில் யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வருகை விரிவுரையாளராக கடமையாற்றியவர். தமிழ் பழைய இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியஙகள் வரை தனது ஆய்வுப் பார்வையைச் செலுத்தி வருகிற இவர் பிறமொழி இலக்கியங்களையும் ஆராயந்;து வருபவர். உலகப்பல்கலைக்கழகங்கள் பலவற்றில் இலக்கிய ஆரர்ச்சிகளில் ஈடுபட்டதுடன் யபப்பான் ஹச்சுயின் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருந்திருக்கிறார். தற்போதைய தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டிற்கான தமிழாய்வுகள் இடப்பெறவில்லை எனவும் அற்கான கல்வியளார்கள் நம்மிடம் இல்லை எனவும் கூறுகிற இவருடன் படிகள் இதழுக்காக நேர்காணல் ஒன்றை நிகழத்தியிருந்தேன்.

நேர்காணல் மற்றும் புகைப்படம் :தீபச்செல்வன்

01.பல்கலைக்கழகங்களில் கூடுதலாக பெண்கள் தெரிவு செய்யப்பட்டு கற்கைகளில் ஈடுபடுகிறபோதும் விரிவுரையாளராக அதிகம் ஆண்களே வருகின்றனர். அப்படியிருக்கையில் நீங்கள் ஒரு வருகை விரிவுரையாளராக எப்படி வெளிவர முடிந்தது?

என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய தமிழ்மொழி இலக்கியம் பற்றிய தகுதிப்பாடு யப்பானிலும் யாழ்ப்பாணத்திலும் என்னை வருகை வரிவுரையாளராக்கியது. குறிப்பாக பெண்கள் தங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதற்கு பல்கலைக்கழகங்களில் போதியளவு வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை.

02.உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். அந்த அனுபவம் எப்படியிருக்கிறது? தமிழ் இலக்கியங்கள் பற்றி அந்த நாடுகளின் கருத்து என்னவாக அமைந்திருக்கிறது?

உலகபல்கலைக்கழகங்கள் என்ற வகையில் யப்பான், இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகமாக தமிழ் ஆராய்ச்சிகளில் தொடர்பு கொண்டு வந்திருக்கிறேன் அவ்வாறு தொடர்பு கொண்டபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என்னுடைய ஆய்வுப்பரப்பை விரிவுபடுத்தவும், தொலைநோக்கோடு செயற்படுத்தவும் என்னைத் தூண்டின. தமிழ் இலக்கியங்கள் பற்றிய அந்நாடுகள் கொண்டிருந்த சிறப்பான நோக்கு நன்கு புலப்பட்டது. பல கருத்தரங்குகளிலும், ஆய்வரங்குகளிலும், சர்வதேச மாநாடுகளிலும் அதனை கண்கூடாக காணமுடிந்தது.

03.நீங்களும் உங்கள் துணைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களும் யப்பானிய பேராசிரியர் சுசுமு ஓனோவுடன் சேர்ந்து யப்பானிய தமிழ் உறவு என்ற ஆய்வில் ஈடுபட்டிருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படியிருக்கிறது?

இந்த ‘யப்பானிய தமிழ் உறவு’ பற்றிய ஆய்வு 1983 ம் ஆண்டிலிருந்து 2003 ம் ஆண்டு வரை ஏறக்குறைய 20 ஆண்டுகள் தொடர்ச்;சியாக செய்திருந்தேன். அதிலும் சிறப்பாக முன் பத்து ஆண்டுகள் யப்பானில் தங்கியிருந்து ஆய்வுகளை செய்திருந்தேன். அக்காலகட்டத்தில் அங்கு பல்கலைக்கழகங்களில் யப்பானிய மொழியில் யப்பானிய மாணவர்களுக்கு விரிவுரையாற்றும் வாய்ப்பை பெற்றிருந்தேன். குறிப்பாக இந்த ஆய்வு எனது யப்பானிய மொழிப்புலமையை பெற்றுக்கொள்ள காரணமாக இருந்தது. யப்பானிய பண்டைய இலக்கிய புலமையாளரான பேராசிரியர் சுசுமோவுடன் 20 ஆண்டுகள் செய்த ஆண்டுகள் என்னை சர்வதேச ஆய்வரங்கில் நிறுதியுள்ளது. இதற்கு எனது துணைவர் போராசிரியர் அ.சண்முகதாஸ் பக்கபலமாக இருந்தார்.

04.சங்ககால இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகில் அதிகம் அக்கறை காட்டி வருகிறீர்கள். அதன் சிறப்பை எப்படிக் கருதுகிறீர்கள்?

சங்க இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட முக்கிய காரணம்; பேராசிரியர் கா.கைலாசபதியே எனக்கு முதலில் சங்க இல்கியத்தை கற்பித்தவர் அவர் அதில் தொடர்ந்து ஈடுபடுவதற்குரிய ஆற்றுப்படுத்தலையும் செய்திருந்தார். யப்பானிய தமிழ் உறவு பற்றிய ஆய்வில் சங்க இலக்கியங்களை சான்றாக பயன்படுத்தி போது அதன் மேல் இருந்த அக்கறை மேலும் கூடியது. காலத்தால் பழமையான சங்க இலக்கிங்கள் நவீன இலக்கியங்களின் முதல் ஊற்றாக விளங்கியதென நான் கருதுகிறேன்.


05.உங்கள் ஆய்வு ஈடுபாடுகளுக்கு துணைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸின் ஒத்துழைப்புக்கள் எப்படியிருக்கிறது?

என்னுடைய ஆய்வுகளுக்கு எனது கணவர் தன்னாலான பங்களிப்புக்களை செய்துள்ளார.; எனது யப்பானிய தமிழ் உறவு ஆய்விற்காக யப்பானில் தங்கி நிற்க தீர்மானித்த போது அதற்கும் எனது கணவர் பக்க பலமாக இருந்தார்.

08.யாழ்ப்பாணத்தில் பெண்களது சுதந்திரம் அல்லது அவர்களது உலகம் எப்படியிருக்கிறது?

பெண்களது சுதந்திரம் 1960 களின் பின்னர் விழிப்பு நிலைக்கு ஆளாகியது. தாய் மொழிமூலம் பல்கலைக்கழக கல்வி எனும் சூழ்நிலை உருவாகிபோது பெண்களின் சுதந்திரம் விழிப்பு நிலை அடைந்தது. கலவியின் மூலம் தம்முடைய மரபான கட்டுப்பாடுகளை தளர்த்தி;க்கொள்ளலாம் என நினைத்தார். அதனால் வீடே உலகம் என இருந்த அவர்களது நிலை மாறி வெளி உலகத்திலும் தங்களை இணைத்துகொள்ள முயன்றனர்.

09.உலகத்தில் பல்வேறு சமூகங்களுடன் ஒப்பிடுகின்ற போது யாழ்ப்பாணப் பெண்களின் வாழ்கை மற்றும் வெளிகள் எவ்வாறிருக்கின்றன?

யாழ்ப்பாணப் பெண்களின் வாழ்க்கை அடிமனதில் ஒரு ஆழமான நம்பிக்கையோடு காத்திருக்கிறது. அதனால் மரபுகளை மீறவேண்டும் என்று நினைத்தாலும் மீற விரும்பாமல் அதற்கான காலத்திற்காக காத்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்துப் பெண் ஆணுக்கு சமமான கல்வியைப் பெற வேண்டும் என கடினமான உழைத்துக்கொண்டிருக்கிறாள்.

10.யாழ்ப்பாணத்தில் உங்கள் வாழ்க்கைச் சூழல் வெளிப்படையான கருத்துநிலை அதற்கான வெளிகள் எப்படியிருக்கின்றன?

நான் ஒரு கிராமிய வாழ்க்கையில் வளர்ந்து உருவாகியதால் தொடர்ந்து அந்த வாழ்க்கை வாழவிரும்புகிறேன். யாழப்;பாணத்தில் எனது வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கின்றது. என்னுடைய செயற்பாடுகளையும், தொண்டுகளையும் செய்வதற்கு ஏற்றதாக இருக்கின்றது.

11.ஆண்டாள் காதல் பாடல்களில் மீறல்களை நிகழ்த்தியுள்ளார்? இந்த தொடக்கத்தை பிற்கால இலக்கியங்கள் பின்பற்றியுள்ளன. ஆண்டாளின் துணிச்சலான கவிதைகள் பற்றி குறிப்பிடுங்கள்?

ஆண்டாளின் உணர்வு வித்தியாசமானது சங்க இலக்கிங்களில் கூறப்பட்ட அகபொருள் மரபுகளை புதியதொரு நெநெறியிலே ஆண்டாள் அனுபவித்துள்ளாள். ஆத்மீகமாக கண்ணனை அடைதல் எனும் புதிய நெறி அந்நெறியில் நின்று உணர்வுகளின் ஊடாக தன் அனுபவங்களை தான் விரும்பியவற்றை வெளிப்படுத்தி அதன் நிறைவையும் முடிவுசெய்கிறாள். மரபு வாழ்க்கை ஒன்றை புதிய நெறியில் காட்டியுள்ளாள். அதுவே பக்தி நெறியெனப்படுகிறது.

12.காரைக்காலம்மையாரின் கவிதைகள் எத்தகைய அனுபவத்தை உங்களுக்கு புலப்படுத்துகிறது?

காரைக்கால் அம்மையருடைய கவிதைகள் குடும்ப கட்டமைப்பை மாற்ற நினைக்கின்ற ஆணுடைய பலவீனத்திற்கு ஒரு சமூக அங்கீகாரம் வழங்குவதாக இருக்கின்றது. சங்க இலக்கித்தில் இயற்கையை பாடுகிற மரபை பக்தி என்கிற புதிய உணர்வு நிலைக்கு ஊடாக வெளிப்படுத்தியதுடன் அதனால் வாழ்வில் ஒரு சமநிலையைப் பேண வழிகாட்டுகிறது.

13.ஒளவையார் பற்றிய செய்திகள் குறித்து கூறுங்கள்?

சங்ககாலம் தொடக்கம் விஜயநகர நாயக்கர் காலம் வரைக்கும் பல பெண்பால் புலவர்கள் ஓளவையார் என்ற பெயரில இருந்தமைக்கு பல செய்யுள்கள் சான்றாக இருக்கின்றது. காலத்தின் தேவைக்கேற்ப செய்யுள்களில் கவிதை மரபும் பொருள்மரபும் மாற்றம் பெற்றுள்ளன. எனினும் சமூகத்தை வெளிப்படுத்தும் ஒரு தொலை நோக்கு எல்லோரிடமும் இருந்தை காணமுடிகிறது.

14.பாலியல் ரீதியான தமது எதிர்பார்ப்புக்களையும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களையும் அதன் மீதிருக்கின்ற நெருக்கத்தையும் முரண்பாடுகளையும் தற்காலத்தில் ரஞ்சினி, மாதுமை போன்றோர் துணிச்சலாக எழுதி வருகின்றனர். தமிழில் இவ்வாறான கவிதைகளின் வருகை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இக் கவிதைகள் பற்றிக் கூறுவதாக இருந்தால் பழைய சங்க இலக்கியங்களில் நயத்தக்க நாகரிகத்தோடு பேசப்பட்ட விடயங்கள் தற்போது வெளிப்படையாக கூறப்படுகின்றன. காலத்துக்கேற்ற வகையில் கவிதையின் புலப்பாடு மாறியுள்ளது.

15.போர் தமிழ் மக்களின் கனவுகளையும் இயல்பான வாழ்வையும் தின்றுவிட்டது. போரின் நேரடித்தாக்கம் இருக்கின்றதா?

போர் என்பது சங்ககாலத்தில் இருந்து தமிழ் மக்களின் வாழ்வில் தொடர்புபட்டிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் அதற்கு முகம்கொடுத்து வந்துள்ளார்கள்.

16.ஈழத்தின் போர் இலக்கியங்கள் எத்தகைய வரலாற்று அனுபவங்களை சேகரித்து வைத்திருக்கிறது? அதன் கனதி பற்றி உங்கள் கருத்து என்னவாகவிருக்கிறது?

ஒரு மனிதனுடைய சொந்த அநுபவங்களின் உடனடிப் பதிவாக அமைந்திருக்கின்றது. ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்த இலக்கியங்களுக்கு கணிசமான இடம் ஒதுக்கப்படும்.

17.பெண்களது உரிமைகள் உலகம் வெளிகள் பற்றி பொதுவாக என்ன நினைக்கிறீர்கள்? வௌ;வேறு விதமான குரல்கள் எதிர்பார்ப்புக்கள் பெண் எழுத்துக்களில் வெளிப்படுகிறது போல இருக்கிறதல்லவா?

என்னைப் பொறுத்த வரை பெண்களது உரிமைகள் பற்றிய தெளிவான சிந்தனை எங்களிடம் இல்லை. மேலைத்தேசத்து குரல்களை கேட்டு மறு குரல்கள் கொடுக்கும் எழுத்துக்கள்தான் இப்போது தோன்றியுள்ளன.

18.உங்களின் வளர்ச்சியில் மிகவும் செல்வாக்குச் செலுத்திய பேராசிரியர்களின் நினைவுகள் எப்படியிருக்கின்றன?

பசுமையாக இருக்கின்றன.

19.தமிழ்ச் சமுகத்தின் கருத்துநிலை எதிர் பார்ப்பு தொடர்பாக என்ன கருதுகிறீர்களா? இதற்காக கனதியான வெளிப்பாட்டை முன் வைக்கக்கூடிய கல்வி மான்கள் கருத்தியலாளர்கள் நம்மிடம் தற்போது இருக்கிறார்களா?;

அதை தெளிவாக சொல்லுகிறேன் தற்போது தமிழ்ச்சமூகத்தில் தொலைநோக்கு கொண்ட கல்விமான்களை என்னால் காணமுடியவில்லை.

20.மலையகப் பெண்கவிஞர்களது கவிதைகள் தொடர்பாக வாசிப்பு ஒன்றைச் செய்திருக்கிறீர்கள். ஈழத்துக் கவிதைகளில் மலையகப் பெண் கவிஞர்களது கவிதைகள் எத்தகைய இடத்தை வகிக்கின்றன?

சுருக்கமாகச் சொன்னால் தொல்காப்பியருடைய ஐந்திiணைகளில் ஒன்றான குறிஞ்சி திணையை களமாகக் கொண்ட கவிதைகள் என சொல்லலாம். மலையகப் பெண்கள் இப்போது தங்கள் குரல்களை வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பது ஈழத்து கவிதைப்பரப்புக்கு ஒரு செழுமை கூடுவதாக அமைகிறது.

21.காலனிய பாதிப்பை உடைய மாணவர்கள் தமிழ்பாடத்தை கற்பதை கௌரவ குறைவாக கருதுகின்றனர் போல இருக்கிறது. இந்த மனநிலை எப்படி எமது சமூகத்தை பாதிக்கும் என நினைகிறீர்கள்?

காலணிய பாதிப்புடைய மாணவர்கள் தமிழ் இலக்கியத்தின் ஆற்றலை அறிந்துகொள்ளாத நிலையில், சமூகப்பயன்பாட்டை உணர்ந்து கொள்ளாத நிலையில் தமிழ் பாடத்தை கௌரவக் குறைவாக கருதுவது முட்டாள்த்தனமானது. இவர்களது இந்த முட்டாள்தனம் மனித விழுமியங்களை அறியாத சமூகத்தை உருவாக்குமென நான் கருதுகிறேன்.


22.தமிழ் பாடத்தை பிரத்தியோக வகுப்புகளில் கற்பிப்பவர்கள் வியாபாரத்தனமாக பரீட்சை நோக்கில் கற்பிக்கிறார்கள் என நினைக்கிறேன். இந்த செயற்பாடு என்ன நிலைக்கு கொண்டு செல்லுகிறது?

அண்மைக்காலத்தில் பிரத்தியேக வகுப்புபென்பது வணிகச் செய்பாடாக மாற்றமடைந்ததன் காரணமாக தமிழ்ப் பாடங்களை கற்பிக்கும் சிலரும் ஏனைய பாடங்களை கற்பிக்கும் சிலரும் எதிர்காலத்து தமிழ் மாணவர்களின் கல்வி வளத்தை முளையிலே கிள்ளுகிறார்கள்.

23.தமிழ் கற்பிப்தில் நீங்கள் என்ன அடைவை கண்டிருக்கிறீர்ள்? தமிழை கற்பிப்பதில் நிங்கள் என்ன பிரச்சினைகளை எதிர் கொள்ளுறீர்கள்?

என்னைப் பொறுத்த வரையில் தமிழ் கற்பிப்பதில் எந்தப் பிரச்சனையையும் நான் எதிர்கொள்ளவில்லை. மாணவர்களின் நிலை, தகுதி, ஆர்வம் என்பவற்றை உணர்ந்து என்னுடைய கற்பித்தலை நான் முன்னெடுக்கிறேன். என்னுடைய மாணவர்கள் தமக்கான இலக்கை அடைகிறார்கள்.

24.தமிழாய்வின் போக்கு தற்போது எப்படியிருக்கிறது? தமிழ் சமூகத்தின் மேம்பாட்டிற்கு அவை எந்தளவில் பயனளிக்கின்றன?

தற்போதைய தமிழ் ஆய்வின் போக்கு மனித சமூகத்திற்கு பயன்படக்கூடிய விதித்தில் நடைபெறவில்லை என்பதே எனது கருத்து. இந்நிலைவ தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டை தடுத்து நிறுத்துகின்றது என்பதில் ஐயமில்லை.

25.நிறைவாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

படிகள் இதழுடாக என்னுடைய கருத்துக்களை தமிழ் வாசகர்களுக்கு எடுத்துரைப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி.

நன்றி: படிகள்

Tuesday, October 6, 2009

இரத்தமும் சதையுமான கனவு அனுபவங்கள் காத்திருப்புக்கள் செலவழிப்புக்கள் ஏமாற்றங்கள்

THE WEEK என்ற இதழில் ஈழத் தமிழ் கவிதைகள் பற்றி கட்டுரை ஒன்றை ஆங்கிலத்தில் எழுதுவதற்காக கவிதா முரளிதரன் சில கேள்விகளை அனுப்பி வைத்தார். அவற்றுக்கான பதில்களை இங்கே இணைத்திருக்கிறேன்.

ஈழ தமிழ் கவிதை மிக வளமான ஒரு பின்னணியை கொண்டிருக்கிறது. போர் சூழலிலிருந்து மிகுந்த செறிவான கவிதைகள் வருகின்றன. என்ன காரணம்?


ஈழத்துக் கவிதைககள் கனதியாக அமைந்திருப்பதற்கு காரணம் போரும் அவலமும் நிறைந்த வாழ்வில் ஈழத்தமிழ் மக்கள் வாழ்ந்தததுதான் காரணமாக இருக்கிறது. இந்த நெருக்டி ஏற்பட்ட பொழுதுதான் ஈழத்துக் கவிதைகள் கவனத்தை பெற்றன. மகாவி, நீலாவணன் போன்றவர்களிடமிருந்து நுஃமான், தா.இராமலிங்கம், சண்முகம் சிவலிங்கம் போன்றவர்களிடமிருந்து இன ஓடுக்கு முறை தொடங்கியபோது வாழ்வு பற்றிய ஏக்கமும் எழுச்சியும் போராட்டமும் புலப்படத் தொடங்கியது. பிறகு அ.யேசுராசா, வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், நிலாந்தன் என்றும் பிறகு கருணாகரன், அமரதாஸ், சித்தாந்தன், தனா.விஸ்ணு போன்றவர்களும் முக்கியமான போர்க் கவிதைகளை எழுதியுள்ளனர். போர் எழுத்துக்கள் எவ்வளவு உணரவையும் வலியையும் நிரப்பி வைத்திருக்கிறது என்பதை சொற்களால் சொல்ல முடியாதிருக்கிறது. பேராடும் மக்களின் வாழ்வு நசிந்து கொண்டிருப்பதை தவிப்பை தாகத்தை அவை பேசுகின்றன. பாலஸ்தீனக் கவிஞர்கள் அனுபவித்ததுபோல எங்கள் கவிஞர்களும் பல்வேறு துன்பங்களையும் அச்சுறுத்தல்களையும் அனுபவித்திருக்கிறார்கள்., அனுபவித்து வருகிறார்கள். போர் எல்லாவற்றையும் அழித்து விடுகிறது. உயிரையும் உடமைகளையும் அடியுடன் இல்லாமல் செய்து விடுகிறது. உயிர்களை இரையாக்குகிற போரை நாங்கள் போராட்டமாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். போர்க்களங்களுக்கு பிள்ளைகளை வழியனுப்பி துயருற்ற எங்கள் தாய்மாரகள் மரணத்திற்கு தங்கள் பிள்ளைகளை ஒப்புக் கொடுத்தார்கள்.


அந்த இரத்தமும் சதையுமான கனவு அனுபவங்கள் காத்திருப்புக்கள் செலவழிப்புக்கள் ஏமாற்றங்கள் எல்லாம் துயரத்திலும் தோல்வியிலும் முடிவடைந்ததுதான் போர்க் கவிதைகளில் குரலாக இருக்கின்றன. ஒரு காலத்தில் போர் அளவிடமுடியாத வெற்றிகளை தமிழர்களுக்கு தந்தபோதும் போர்க்களத்தின் பிணங்கள் கவிஞர்களை துயரத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. சிங்கள அரசுகளின் போக்கில் கொலை வெறித்தனம் இருந்து கொண்டேயிருந்தது. தமிழர்களை களங்களிற்கு தூண்டிக் கொண்டேயிருந்தார்கள். இழப்பு, பிரிவு, பதற்றம் நிறைந்த வாழ்வாக ஈழ மக்களின் வாழ்வு நிகழ்ந்து கொண்டிருந்தது. பற்றமும் முடிவற்ற துயரமும் தான் இந்தக் கவிதைகளில் காணக் கிடக்கின்றன. வளம் அல்லது வளர்ச்சி என மகிழ்ச்சி தருகிறதாக இருப்பதில்லை ஈழக்கவிதைகள். வாசிப்பவர்களை பதற்றத்திற்குள்ளாக இறக்கவிடுகிறது. பரந்து மிகவும் செறிவாக பல்வேறு வகையான நெருக்கடிகள் துன்பங்கள் ஏங்கங்கள் எதிர்ப்பகுள் என்பன நிறைந்து கிடக்கின்றன.


போரின் நசிவுகளிலிருந்து எழுதும் போது எப்படி உணருகிறீர்கள்? போர் உங்கள் வார்த்தைகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?


போர் பலவிதமான அவலத்iதான் தந்து கொண்டிருக்கிறது. போருக்குள் பிறந்து அதற்குள் வளர்ந்து எப்பொழுதும் அதன் காட்சிகளையும் பெயர்வுகளையும் சமர்களையும் மரணங்களையும் பார்த்துக்கொண்டிருநNதுன். அதன் தாக்த்தை எப்படி முழுமையாக சொல்ல முடியும்? ஆனால் எழுதத் தொடங்கியபொழுது ஓரளவு அவற்றை சொல்ல முடிகிறது. நான் சிறிய வயதில் ஆக்கிரமித்து நிற்கும் இராணுவத்தை பார்த்திருக்கிறேன். பிறகு கடுமையான போர் நடந்த பிறகு இராணுவத்திற்கு அஞ்சி அஞ்சி ஓடி இடம்பெயர்ந்திருக்கிறேன். கடைசிப் போரில் எனது அம்மா தங்கை சிக்கியிருந்தபோது நான் இராணுவத்தால் மூடப்பட்ட பகுதியிலேயே தங்கியிருந்தேன். இராணுவத்திற்கு அஞ்சி ஓடும் வாழ்வும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் வாழ்வும் எனக்கு வௌவேறான அனுபவங்களை தந்திருக்கின்றன. இரண்டும் ஆக்கிரமிப்பையும் அவலத்தையும் இழப்பையும் பீதியையும் தான் தருகிறது. இரண்டுமே மரண களமாகத்தான் இருந்தது. எது எவ்வளவு அவலம் தருகிறது என்று சொல்ல முடியாது. போர் பிறகு போருக்கு பின்னால் என இந்த ஆக்கிரமிப்புகள் தொடருகின்றன.


போரின் அனுபவங்கள்தான் சொற்களை உருவாக்குகின்றன. அவற்றின் தாக்த்திற்கு ஏற்ப அவை வலியையும் அனுபவத்தையும் தருகின்றன. இராணுவச் சொற்கள் மிந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. படைநடவடிக்கைக்கு கூறப்படுகிற காரணங்கள் திரட்டப்படுகிற படைகள், இராணுவ உதவிகள், ஆயுதங்கள் போன்றவை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கிராங்களும் நகரங்களும் வானமும் காடுகளும் என்று எல்லாமே போருக்கு இரையாகிறபோது அல்லது சிதைகிறபோது அவை பற்றி சொற்கள் எழுகின்றன. போருக்கு வகுக்கபடுகிற விதிகள், போராட்டத்தை நசுக்கிற சூழ்ச்சி எல்லாமே கொடுமையான அனுபவத்தை தருகின்றன. அவற்றுக்குள் நித்தமு; ஏமாற்றமடைந்து ஒடுங்கியிருக்கிற முடியாமை கொண்ட வாழ்வு சொற்களை பிறப்பிக்கின்றன. போரின் தாக்கம் பல்வேறு விதமான வார்த்தைகளை எழுதத் தூண்டுகிறது.


எழுதுவது தேவையற்ற செயல் என்று அம்மா முதல் நண்பர்கள் வரை சொல்வதாக உங்கள் முன்னுரையில் சொல்லியிருக்கிறீர்கள். எழுத்து உங்களுக்கு ஆறுதலை தருகிறதா?


உண்மைதான் நான் எழுதிக்கொண்டிருப்பது எதுவும் அம்மாவுக்கு தெரியாது. ஆனால் தொடக்கத்தில் சிலவற்றை பார்த்துவிட்டு எழுதுவதை நிறுத்திவிடு என்றே கூறினார். ஆபத்தான உலகம், சூழல் குறித்து அம்மா அச்சமைந்திருந்தார். எனது நண்பர்களும் அப்படித்தான் சொல்லூர்கள். இன்று உங்களுக்கு பதிலளிக்கிற நாளிலும்கூட ஒரு நண்பன் எனக்கு தொலைபேசி எடுத்து சொல்லியிருந்தான். என்னால் ஒரு பொழுதும் எழுதுவதை நிறுத்த முடியவில்லை. போரின் தாக்கத்தையும் அதன் அனுபவத்தையும் சேகரிக்க வேண்டும் என்பதுதான் எனது எழுத்தின் நோக்கமாக இருக்கிறது. அடுத்த நிலையைக்கு கொண்டு செல்லுதல் நம்பிக்கையை ஊட்டுதல் என்பன எனக்கு எப்பொழுதும் முடியாமலிருக்கிறது. ஈழ மக்களுக்கு அடுத்த நிலை அல்லது மகிழ்ச்சியான நிலை என்பது ஒரு பொழுதும் ஏற்பட்டதில்லை. மேலும் மேலும் துன்பம் விளைந்து கொண்டிருக்கிறது. அப்படி அவர்கள் எழுதுவதை நிறுத்தி விடு என்று கூறுகிறபோது அவர்களது அன்பை கண்டு அக்கரையால் ஆறதலடைகிறேன். மீளவும் மீளவும் கண்களில் காண்பவை எழுவதற்கே தூண்டுகின்றன. ஆனால் போரின் விளைவுகள் nhடர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றை எழுதவேண்டும் என நினைக்கிறேன். நித்தமும் அவற்றை காண நேரிடுகிறது.


எழுதும்பொழுது ஆறுதல் என்பது மக்களை நெருங்கியிருப்பதைத்தான் உணர்த்துகிறது. கனவிற்காக போராடிய மக்களது குரலாக இருக்க வேண்டும் எ;னபதுதான் நிம்மதியை தருகிறது. எங்கள் மக்கள போராட்டம சுருங்கி புலிகளது போராட்டமாக மாறியபோதும் மக்கள் அவற்றை நிமித்தி வைத்திருந்தார்ள். ஒத்துழைத்தார்கள். கனவின் மக்களாக இருந்தார்கள். நிம்மதியான வாழ்வும் தேசமும் கிடைக்கும் என காத்திருந்து பல தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். கடைசியில் நினைத்துப் பார்க்க முடியாத அவலத்திற்கு ஆளாகியிருக்கிறாhகள். எதுவும் அற்ற நிரந்தர அகதிகளாக மாறிவிட்டார்கள். அவர்கள் இன்றைய நாட்களில் அனுபவிக்கிற துன்பங்கள் பல்வேறு விதமானவை. மிக நுட்பமாக ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். கடைசிப்போரின் தீவிரமான கால கட்டத்தில் வன்னியை விட்டு வெளியேறியிருந்தேன். இப்பொழுது அந்த மக்கள் அனுபவித்து வருகிற வாழ்வுடன் சேர்ந்திருப்பதுடன், அதற்கு முடியுமான சில வேலைகளை செய்கிறபோது ஆறுதலா இருக்கிறது. அத்துடன் மக்களது வாழ்வின், அவலத்தின் சொற்களையும் அதற்குள் இருந்து எழுத முடிகிறது. எல்லாவிதமான அச்சுறுத்தல்களையும் மீறி ஆபத்தையும் மறந்து வாழ தூண்டுகிறது. அம்மாவுக்கு தூரத்தில் நான் இருப்பதால்தான் இப்படி இருக்க முடிகிறது. எதையும் அம்மா அறிந்து கொள்ளவில்லை. இதன் பொழுது பெறுகிற ஆறுதலை எழுதவும் வெளிப்படுத்தவும் முடியவில்லை.


போர் தவிர்த்த பிற கவிதைகளில் கூட (பதுங்கு குழியில் பிறந்த குழந்தை தொகுப்பில்) வன்முறையின் சாயல்கள் இருப்பது போல எனக்கு தோன்றியது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ன காரணம்?


போர்க்கவிதைகள் காதல் கவிதைகள் வன்முறை சார்ந்த கவிதைகள் எனப் பிரித்து பார்க்க முடியாது. உலகம் வன்முறையைத்தான் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் எப்பொழுதும் ஏமாந்துகொண்டிருக்கிறார்கள். வன்முறையால் தவிக்கிறார்கள். மனமுரண்பாடுகளின் விளைவாகத்தான் வன்முறை ஏற்படுகிறது. இங்கு வன்முறை என பிரித்து தனியே எதைக் கருதுகிறீர்கள் என எனக்குப் புரியவில்லை.
----------------------------------------

Wednesday, August 5, 2009

பதுங்கு குழியிலிருந்து கொஞ்சம் சொற்கள்...- தீபச்செல்வன்



நேர்கண்டவர்: கௌதமசித்தார்த்தன்
_________
கவிஞர் தீபச்செல்வன் ஈழக்கவிஞர்களில் முக்கியமானவர். தலைக்குமேல் ஷெல் அடிக்கும் போர்ச்சூழலின் வாழ்வியலை அந்த மண்ணோடு இரத்தமும் சதையுமாக அனுபவித்து பதிவாக்கி வருபவர். போர்க்கால வாழ்வில் அமிழ்ந்திருக்கும் யாழ் மக்களின் அவலமும் அழிவும் அறியப்படாத கொலைகளும் நிறைந்த வாழ்வைஇ இலங்கை அரசு நிகழ்த்தி வரும் மிகப் பெரும் இனஅழிப்புக் கொடூரத்தைஇ இரத்தமும் சதையுமாக தனது கவிதைகளில் வெளிப்படுத்தி வருகிறார். மஹ்மூத் தார்வீஸின் கவிதைகளுக்குப்பின் என்னை வெகுவாக ஈர்த்தவை இவரது கவிதைகள்.

இங்கு தமிழ்ச் சூழலில் வெளிவரும் கவிதைகளில் உள்ள வடிவ அமைப்பிலிருந்து முற்றாக மாறி எனக்குள் கவிதைகள் மீது மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தின. அதற்குக் காரணம் அவரது கவிதைகளில் ரத்தமும் சதையுமாக ஓட்டிக் கொண்டிருக்கும் வாழ்வியல் கூறுகள் என்று சொல்ல வேண்டும். இனால், அவை வெறும் வறட்டுக் கூச்சலாக இல்லாமல் கவித்துவம் நிரம்பியதாக மாறியிருக்கின்றன. நவீன ஈழக்கவிதைகளில் எனக்குள் முழுமையாக உள்ளிறங்கின இவரது கவிதைகள்.

கிளி நொச்சி மண்ணின் வாழ்வு, அதனுடைய மணம், ஆன்மா, அதனுடைய வீழ்ச்சி என்று ஓரு தரிசனப் பார்வையை ‘கிளிநொச்சியின் கதை' கட்டுரையில் இவர் வெளிப்படுத்தியிருக்கிறார். கவிதைகள் தவிர, விமர்சனம், ஓவியம், புகைப்படம் என்பவற்றிலும் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார். 'தீபம்' என்கிற பெயரில் வெளிவரும் இவரது வலைப்பதிவும் ஈழத்தின் அவ்வப்போதைய நெருக்கடியான சூழலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
www.deebam.blogspot.com

ஈழத்தின் தற்போதைய சூழல், போரின் தாக்கம், திறந்த வெளிச் சிறைச்சாலைகளான அகதி முகாம்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமிய மக்கள், சிங்கள மக்கள் ஆகியோரின் மனநிலை, விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வான ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம்’ போன்ற முக்கியத்துவம் கொண்ட விடயங்களுக்கு மிக விரிவாகவும் ஆழமாகவும் பதில் சொல்லியுள்ளார். அவருடன் மின்னஞ்சல் வழியாக ஏடுத்த இந்த நேர்காணல் தற்போதைய ஈழம் பற்றிய குழப்பமான சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக அமைகிறது.

1. இப்போது ஈழச்சூழல் எப்படியிருக்கிறது? முகாம்களில் உள்ள தமிழ் மக்களின் நிலைமை, அவர்களது மனநிலைகள்இ முஸ்லீம் மக்களின் மனநிலைகள், மலையகத் தமிழரின் மனநிலைகள் தற்போதுள்ள சூழலில் எப்படியிருக்கின்றன தங்களது எதிர்காலம் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி விரிவாகச் சொல்லுங்கள்.

ஈழம்., மிகவும் பதற்றமாகவும் எந்த சாத்தியங்களுமற்றிருக்கிறது. எல்லா முனைப்புகளும் சிதைக்கப்பட்டு குருட்டுத்தனமான அரசியலில் இருக்கிறது. இலங்கையின் சிங்கள அரசால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. உலகம் தனது நோக்கங்களுக்காக பலியிட்டிருக்கிறது இப்படி கைவிடப்பட்ட சனங்களினால் ஈழம் நிரம்பியிருக்கிறது. அகதி முகாங்களில் பல்வேறு நெருக்கடிகளை அனுபவித்தபடி மக்கள் இருக்கிறார்கள். எந்த வசதியும் சுகந்திரமும் இல்லாமல் குறுகிய இடத்தில் மிக நெருக்கமாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு தினமும் அடையாளங் காணப்பட்டு போராளிகளும் இளைஞர்களும் தனிமைப்படுத்துவதற்காக வேவ்வேறுவேறு முகாங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். பெரு நிலத்தை சேர்ந்த மக்கள் முழுவதையும் இழந்து, எல்லாவற்றையும் பறிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் இருக்கிறார்கள்.

முஸ்லீம் மக்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சகோதர இனம் என்ற வகையிலும் அவர்களுக்கு தமிழ் மக்கள் மீது பற்றிருக்கிறது. போரிற்கு எதிராக கருத்தை பல முஸ்லீம்கள் கொண்டிருக்கிறார்கள். இலங்கை-ஈழப்போர் வெறுமனே தமிழ் மக்களை மட்டும் பாதிக்கிறதாக இல்லை. இங்கு வாழ்கிற எல்லா மக்களையும் பாதிக்கிறது., சுறண்டுகிறது. முஸ்லீம் மக்களுக்கும் தனித்துவமான மக்கள் நலன்கொண்ட தலைமைத்துவம் இல்லை. அவர்களும் சூன்யமான அரசியல் சூழ்நிலையிலும் அச்சங்களிலும் வாழுகிறார்கள். தமிழ் மக்களைப்போலவே நம்பிக்கைகளற்ற நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மலையக தமிழர்களது காலமும் வாழ்வும் இருண்டுதான் இருக்கிறது. உன்மையில் சிறுபான்மை இனம் என்ற வகையில் தமிழ் முஸ்லீம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். மலையகத் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தால் வருமானத்தை ஈட்டித் தருகிற வணிக பிராணிகளாக நடத்தப்படுகிறார்கள். காலம் காலமாக வருகிற அரசுகள் இப்படித்தான் அவர்களை கையாளுகிறது. அவர்களது ஜனநாயகத் தலைவர்கள் சிலரும் யுத்தத்தை ஆதரிப்பவர்களாகவும் அரசாங்கத்திற்கு துணை போகிறவர்களாகவும் இருக்கிறார்கள். எங்களைப்போலவே அவர்களுக்கும் நெடுங்காலமாக உரிமை மறுக்கப்படுகிறது. ஈழப்போராட்டத்தில் மலையத் தமிழர்களின் பங்கு முக்கியமானது. சிங்கள இனக்கலவரங்களால் அவர்களில் பலர் மலையகத்தை விட்டு பெயர்ந்து வட கிழக்கிற்கு வந்திருக்கிறார்கள். சிங்கள அரசாங்கத்தின் இன ஒடுக்கு முறைக்கு எதிராக அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களும் வட கிழக்கை தமது தாயகமாக கொண்டவர்கள்.

இந்த ஒடுக்கப்படுகிற மக்களிடம் எந்த நம்பிக்கையும் இல்லை. வாழ்வு குறித்த கனவு இருளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது. நம்பிக்கை தரக்கூடிய எச் சூழ்நிலையும் இல்லாமல் சூன்யமான எதிர்காலத்தை முகம் கொள்ள வேண்டியிருக்கிறது. சிறுபான்மை இனங்கள் என்ற வகையில் அடக்கப்படுகின்றன., எதிர்த்து போராட வழிகளற்று அடக்கு முறையில் நசிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இனங்களது நலன்கள் பற்றி சிந்திக்க யாருமில்லை என்றே சொல்லக் கூடியதாக இருக்கிறது.

2. தற்போது செயல்படும் ஈழ ஊடகங்களின் (தமிழ் மற்றும் சிங்களம்) போக்கு குறித்துச் சொல்லுங்கள். தமிழீழவிடுதலைப் போராட்டத்துக்காக குரல் கொடுத்த சிங்கள அறிவுஜீவிகள், கலைஞர்கள், முற்போக்காளர்கள், மற்றும் ஊடகங்களின் இப்போதைய பார்வை என்ன?

சிறந்த ஊடகங்கள் திட்டமிட்ட செயல்களினால் இல்லாமல் போய்விட்டன. இலங்கை அரசாங்கம் ஊடகங்கள்மீது கடுமையான தணிக்கைப் போரை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் தணிக்கை செய்து வழங்குகிற செய்திகளைத்தான் இங்கு மற்ற ஊடகங்களில் வெளியிட முடியும். தனது அதிகாரத்திற்கும் நலனிற்கும் குந்தகமில்லாத செய்திகளை வடிவமைத்து அரசு வெளியிடுகிறது. எதிர்க்க முடியாத சூழ்நிலையில் நிறைய ஊடகங்கள் அவற்றையே சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஈழத்தலிருந்து வருகிற இதழ்கள் பேசப்பட வேண்டிய வாழ்வுரிமை அரசியல் குறித்து பேசாமல் பெரும் இடைவெளியுடன் வருகின்றன.

சிங்கள ஊடகங்களில் சில ஊடகங்கள் துணிச்சலாகவுத் நேர்மையாகவும் செய்திகளை வெளியிட்டு வந்திருக்கின்றன. தமிழ் ஊடகங்களில் இபபடியான நேர்மை துணிச்சல் இருந்தது. அரசாங்கம் நிறை ஊடகங்களை அச்சறுத்தி தாக்கி கட்டுப்படுத்தி சிலவற்றை அழித்துமிருக்கிறது. தமிழீ விடுதலைப் புலிகளும் சில ஊடகங்களை தமக்கு சாதகமாக பயன் படுத்தியிருக்கிறார்கள். அவைகளது செய்திகள் சார்பு நிலை கொண்டிருந்தன. இப்பொழுது அநேகமாக சிங்கள ஊடகங்கள் மௌனித்து விட்டன. அரசாங்கத்தின் வெற்றிகளை கொண்டாடுகிற தமிழர் தாயகத்தின் மீதான போரை ஆதரிக்கிற சிங்கள ஊடகங்கள் இருக்கின்றன. சில சிங்கள ஊடகங்கள் இப்பொழுதும் அரசின் அதிகாரத்தை எதிர்த்து உன்மைகளை வெளியிடுகின்றன. சில தமிழ் ஊடகங்களில் தெளிவான பார்வை இல்லை.

பரபரப்பிற்காகவும் வர்த்தக நோக்கத்திற்ககாவும் செய்திகளை கையாளுகிற ஊடகங்கள் மிக ஆபத்தானவை. அப்படியான ஊடகங்கள் இங்கும் இருக்கின்றன. எனினும் மக்கள் எல்லா உன்மைகளையும் அறிவார்கள். தமிழீ விடுதலைப் பேராட்டத்திற்காக – தமிழ் மக்களின் நியாயமான உரிமைக்காக முன்பு குரல் கொடுத்த சிங்கள அறிவுஜீவிகள், கலைஞர்கள், முற்போக்காளர்கள் இப்பொழுது குரல் கொடுப்பதில்லை. உன்மையில் சிங்கள அரசின் இனப்போரிற்கு எதிராக அவர்களிடமிருந்து ஆதவுக் குரல்கள் ஒலித்திருக்க வேண்டும். அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள். சிங்கள மக்களுக்காக தமிழர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஜே.வி.பி பெண் போராளி மின்னம்பேரியை அரசாங்கம் படுகொலை செய்த போது முதலில் தமிழ் மக்களே எதிர்த்து குரல் கொடுத்தார்கள்.

சிங்கள அரசாங்கத்தின் இன அழிப்பிற்கு அப்பாவிச் சிங்களவர்கள் பொறுப்பல்ல என்ற கருத்து தமிழர்களிடம் இருந்தது. ஆனால் இன்று முழுச் சிங்களவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த தமிழ் மக்களதும் தமிழர் தாயகத்தின்மீதும் இலங்கை அரசு போர் செய்து அவர்களுக்கு வெற்றியை பரிசளித்திருக்கிறது. அப்பாவிச் சிங்கள மக்கள் என்ன செய்யக்கூடும் என்று பார்த்தாலும் இந்த ஊடகவியளார்கள் முற்போக்காளார்கள் கலைஞர்கள் குரல் கொடுக்காதிருந்தது பெரும் ஏமாற்றத்தையும் இனப் பிளவையும் ஏற்படுத்துகிறது.

3. ஈழத்தில் உள்ள தமிழ் மக்களுக்கான நிலத்தையே இன்னும் தராமல் அதிலெல்லாம் சிங்களவர்களின் குடியேற்றம் நடந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை? இந்தச் சூழலில் வெளியிலிருக்கும் அகதிகளை மறுபடியும் திரும்ப அழைக்கும் சிங்கள அரசின் திட்டம் எத்தகைய தன்மை வாய்ந்தது?

கிழக்கில் சிங்களக் குடியேற்றம் நடக்கிறது. அது தொடர்பாக யாரும் எதிர்க்ககாமல் மெல்ல அது நிகழ்த்தப்படுகிறது. குறிப்பாக திருகோணமலையில் சிங்களக் குடியேற்றம் மிக அதிகமாக நடந்து வருகிறது. வவுனியாயிலும் மன்னாரிலும்கூட மெல்ல சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்படவில்லை ஆனால் சிங்கள இராணுவத்தால் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் மக்களின் நிலங்கள் பறிக்கபர்பட்டு பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து இராணுவம் குடியிருக்கிறது. தெல்லிப்பளை, கட்டுவன், காங்கேசன்துறை, பலாலி போன்ற இடங்களிலும் திருகோணமலையில் சம்பூரிலும் மக்களது நிலங்கள் முற்றாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவிர வீதிகளும் நகரங்களும் இராணுவத்தால் குவிக்கப்பட்டு ட்ராங்கிகளுடன் அச்சுறுத்துகின்றன. இப்படி தமிழர் தாயகம் முற்றாக பறிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் சிங்கள குடியேற்றம் செய்ய வேண்டும் என இனவாத சிங்களக் கட்சிகளான ஹெலஉறுமய மற்றும் ஜே.வி.பி வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. வருகிற காலங்களில் வன்னியில் சிங்கள குடியேற்றங்கள் செய்ப்பட திட்டமிடப்பட்டிருக்கின்றன. வன்னி மக்களை இப்போதைக்கு குடியமர்த்துகிற எண்ணம் அரசாங்கத்திடம் இருப்பதாக தெரியவில்லை. வன்னியிலும் பல இடங்களில் காடுகளை வெட்டி முகாங்களை அமைத்து அங்குதான் மக்களை குடியமர்த்துவதாக அரசு சொல்லியிருக்கிறது. அந்த பகுதிகளில் மேலும் படைகளை குவிக்க 50ஆயிரம் படைகளை புதிகாக இராணுவத்தில் சேர்க்கவிருப்பதாக அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்திருக்கிறது.

வன்னி முற்றிலும் இராணுவ மயமாக்கப்பட இருக்கிறது. அங்கு பாரம்பரியப் பன்பாடு, அடையாளங்கள் அழிக்கப்பட்ட பிறகுதான் முற்றிலும் மாற்றப்பட்ட வன்னியில் குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டும் மீள் குடியமர்த்தப்படவிருக்கிறது. தமிழர்களது பகுதிகள் என்ற அடையாளங்களை அழிக்க சிங்கள அரசு திட்டமிட்டிருக்கிறது. சிங்கள இனத்தை கலந்து குடியிருத்துவதன் மூலம் தமிழர் தாயகத்தை இல்லாமல் செய்து இலங்கையை உருவாக்கிற தந்திரத்துடன் சிங்கள அரசு செயல்படுகிறது. 1990 முதல் கையகப்படுத்தப்பட்டு வந்த யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் இன்னும் குடியேற்றம் செய்யப்படவில்லை என்கிறபோது வன்னியில் மீள் குடியேற்றம் பற்றி மிகுந்த ஏமாற்றம் காத்திருப்பதைபோல இருக்கிறது.

4. உங்களைப் போல இந்த மண்ணின் வெடிகுண்டுகளின் வெப்பத்தில் கனன்று கொண்டு எழுதும் படைப்பாளிகள் மற்றும் அவர்களது படைப்புகளின் தன்மைஇ புலம் பெயர்ந்த மண்ணில் இருந்து கொண்டு எழுதும் படைப்பாளிகள் மற்றும் அவர்களது படைப்புகளின் தன்மையில் எங்கு மாறுபடுகிறது? அல்லது எந்த இணைவு கோட்டில் இணைந்து செல்கிறது என்பது பற்றி விரிவான பார்வையைத் தாருங்கள்.

எங்கள் மண்ணில் வருகிற போர் சார்ந்த படைப்பபுகள் நாங்கள் அனுபவிக்கிற துயரங்களை எங்கள் உணர்வுகளை இரத்தமும் சதையுமாக வெளிப்படுத்துகின்றன. 90களில் நிகழ்ந்த போரை கருணாகரன், நிலாந்தன், அமரதாஸ், சித்தாந்தன், எஸ்.போஸ், முல்லைக்கமால், தாமரைச்செல்வி, பொன்.காந்தன் போன்றவர்களுடன் போராளிப்படைப்பாளிகளான தமிழவள், மலைமகள், உலகமங்கை கப்டன் மலரவன், கப்டன் கஸ்தூரி, மேஜர் பாரதி போன்றவர்களும் முக்கியமாக பதிவு செய்திருக்கிறார்கள். தொன்னுறுகளின் பிறகுதான் போர் மிகவும் உக்கிரமாகியதுடன் பல்வேறு துயரமான அனுபவங்களை ஏற்படுத்தின. அதற்கு முன்பு நிகழ்ந்த இன ஒடுக்கு முறைகளை அ.யேசுராசா, வா.ஐ.ச.ஜெயபாலன், நுஃமான், சேரன், சண்முகம்சிவலிங்கம், நிலாந்தன், சி.சிவசேகரம் போன்றவர்கள் எழுதியிருந்தர்கள்.

தற்போது நடைபெற்ற போரின் பதிவுகளை எழுதுவதற்குகுறிய சூழ்நிலை அந்த படைப்பாளிகளுக்க கிடைக்கவில்லை. அவர்கள் நிராயுதப்பட்டபோது படைப்புகள் பதிவுகளையும் இழந்திருக்கிறார்கள். பல முக்கிய படைப்பாளிகள் இந்த அனுபவங்களை இனி எழுத வேண்டியிருக்கிறது. வரலாற்றில் இந்தத் துயரங்களை நாம் சேமித்து வைக்க வேண்டியுள்ளது. கனவுக்காக நாம் இழந்தவை அனுபவித்தவை எல்லாம் மிகவும் துயரமானவை. ஒவ்வொரு படை நடவடிக்கைகளும் பல்வேறு துயரங்களை தந்திருக்கிறது. கடைசி காலத்தில் மக்களுக்கு எல்லாம் எதிராய் மாறி மேலும் மேலும் துக்கத்தை கொடுத்திருக்கின்றன.

எனக்கு இந்தப்போர் குறித்து எழுத வேண்டியிருந்தது. அதற்கான சிறிய வெளி ஒன்று கிடைத்திருந்தது. இந்தப்போர் என்னை பாதித்த விதங்களை நான் எழுத முற்பட்டேன். போருக்குள்ளும் அதற்கு வெளியிலுமாக அதன் தாக்கங்களை முகம் கொள்ள நேர்ந்தது. குறிப்பாக கடுமையான போர் நடைபெறுவதற்கு முன்பு நான் வன்னியிலிருந்து படிப்பிற்காக வெளியேறியிருந்தேன். அம்மாவும் தங்கையும் வன்னியிலிருந்து போர்க்களத்தின் துயரங்களை நொந்து அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இரவுகள் முழுக்க போர் நடக்கிற மண்ணின் துயரங்களை கனவுகளில் அனுபவித்து ஏக்கங்களுடன் அச்சத்துடன் கழிக்க நேர்ந்தது. மிகச் சமீபமாக போர் நடந்து கொண்டிருந்தது. போர் மண்ணில் என்ன நடக்கிறது இப்போது என்ற அந்தரத்துடன் கழிந்தன பொழுதுகள். என்னால் ஓரளவு இதைக் குறித்து பதிய முடிந்திருக்கிறது.

நுட்பமாக இனத்தை அழிக்கிற சிங்கள காலனியப் ஆதிக்கப் போக்கை இங்கு வருகிற படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. நித்தமும் குண்டுகளும் விமானங்களும் கிராமங்களையும் நகரங்களையும் சிதைப்பதையும் அங்கு சிதைகிற நம்பிக்கையையும் கனவுகளையும் குறித்து இந்த படைப்புகள் பேசுகின்றன. தொடக்கத்தில் போரை எதிர்த்து போராடுதல் என்ற குரல் இருந்தபோதும் பிறகு போரின் தாக்கம், போராடுகிற காலநீட்சி, உலகத்தின் முற்றுகை என்பவற்றால் அந்த தன்மை குறைந்துவிட்டது. எழும்ப முடியாத துயரத்தை இவைகள் தமது கையறுநிலையாக கொண்டிருக்கின்றன.

புலம்பெயர் படைப்புக்கள் மண்ணில் நிகழுகிற போர் குறித்து பேசுகின்றன. போர் தொடங்கியபிறகும் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுதும் போர் ஓய்ந்த சின்ன இடை வெளியிலும் அவர்கள் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். தமது உறவுகள் மக்கள் போரில் சிக்குண்டு தவிப்பதை, மண் பற்றி ஏக்கத்தை, கனவை அவர்கள் உணர்பூர்வமாக தொடக்கத்திலிருந்து எழுதி வந்திருக்கிறார்கள். தற்போதுகூட தமிழ்நதி, த.அகிலன், வ.ஐ.ச.ஜெயபாலன், கற்பகம்யசோதரா, மாதுமை போன்றவர்கள் போர் மண்ணின் துயரங்களை பேசுகிறார்கள். எங்கள் மண்ணில் நடக்கிற போர் ஈழ எல்லையைக் கடந்துபோன எல்லாத் தழிழர்களையும் தவிக்க வைத்துக்கொண்டிருக்கிற புள்ளியில் நாங்கள் இணைந்துதான் கிடக்கிறோம்.

5. உலக நவீன இலக்கிய அரங்குகளில் போர் சார்ந்த நாடுகளின் படைப்புகளே முக்கியத்துவம் பெறுகின்றன. நவீன மனிதனின் உளவியல் சிக்கல்களும், உடல் மீது திணிக்கப்படும் வன்முறைகளும், வாழ்வியல் வதைகளின் கூறுகளை பல்வேறு பரிமாணங்களில் முன்வைக்கின்றன. தற்போதைய சூழலில் ஈழத்தின் படைப்பு சார்ந்த மொழி இயங்கும் களத்தைப்பற்றியும் அதன் பரிமாணங்கள் பற்றியும் உங்களது கருத்தைச் சொல்லுங்கள்?

இந்தப் போர் வௌ;வேறு விதமான அனுபவத்தை தந்திருக்கிறது. முன்பு நிகழ்ந்த போரைவிட காலம், போர் கொள்ள வேண்டிய முறை, எதிர்கொள்ள முடியாத நெருக்கடி நவீன ஆயுதங்களின் பழக்கம், முழு மண்ணையும் கையகப்படுத்துகிற மனோபாவம், நிலங்களிலிருந்து சனங்களை துரத்தகிற நடவடிக்கை போன்ற அனுபவங்கள் இந்த படைப்புகளில் விரிந்து செல்கின்றன. அந்த அனுபவங்கள் அனுபவங்களுக்குரிய புதிய மொழி ஒன்றை சாத்தியப்படுத்தியிருக்கிறது. போரின் போது மனிதன்மீது பிரயோகிக்கப்படுகிற வதைகளைப் பற்றி மிக நுட்பமாக இந்த படைப்புக்கள் பேசுகிறது. தமிழ்நதியின் கவிதை ஒன்றில் அகதிமுகாமில் மேற்கொள்ளப்படுகிற பெண்களின் உடல் மீதான வதை கூறப்படுகிறபோது “
விசாரணைக்கென அழைத்துச்செல்லப்படும்/ தேவதைகளின் முன்/ முதலில் நீட்டப்படுவன துப்பாக்கிகள்/ பிறகு..../ உளியாய் பிளந்திறங்கும் குறிகள்! ” என வதைகள் கூறப்படுகின்றன.
மண்ணும் வாழ்வியலும் வதைபடுவதை “தொடுவாய்ப் பிரிப்பில் காய்ந்த கோப்பையில்/ மிதக்கிறது இனத்தின் பெருங்கனவு/ ஒரு பெருமிருகம்/ முள்ளிவாய்க்காலை குடிக்க/ திட்டமிடுகிற குருட்டிரவில்/ அறிவிக்கப்பட்ட வலயத்தின் மேலாக/ பற்கள் விழ பெரும்பாம்பு பறக்கிறது” என என்னால் உணர முடிந்தது. த.அகிலன் தனது தம்பியிடம் துப்பாக்கி திணிக்கப்ட்ட வதைப்பை இப்படி சொல்லியிருக்கிறார்.”உன்னிடம்/ திணிக்கப்பட்ட/ துப்பாக்கிகளை நீ/ எந்தப்பக்கமாகப் பிடிப்பாய்/ வாய் வரை வந்த/ கேள்வியை விழுங்கிக்கொண்டு/ மௌனிக்கிறேன். “ இங்கு மண்மீதும் உடல் மீதும் வாழ்வு மீதும் மேற்கொள்ளப்படுகிற வதைப்புகள் பற்றி அறிய முடிகிறது. இந்த அனுபவங்கள் செய்திகள் அதன் தாக்க நிலையில் காலத்திற்குரிய சூழலுக்குரிய மொழியினை தந்திருக்கிறது. எல்லாத் தரப்பக்களாலும் வதைப்பிற்கு உள்ளாக்கிறதை பேசுகின்றன. உன்மையில் ஈழப் படைப்புக்களின் மூலம் இந்த மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்வை அதன்மீது நிகழ்த்த்பட்ட வதைப்பை காண்பீர்கள் என நினைக்கிறேன்.


6. ஐக்கிய நாடுகள் மன்ற மனித உரிமைக்குழுவில் நடந்த வாக்கெடுப்புகள்இ மற்றும் நிறைவேற்றம் செய்த தீர்மானங்கள் குறித்து மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை என்ன?

இலங்கை அரசின் போர் மனநிலைக்கும், தமிழ் இன அழிப்பிற்கும், அதிகாரத்திற்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. அப்படியொரு அங்கீகாரம் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப் பட்டது. தமிழ் மக்களுக்கு எதிரான போரில் இந்த நாடுகள் ஆயுத அரசியல் உதவிகளை செய்திருக்கின்றன. போரை முதலீடு செய்திருக்கிறது. எமது தேசத்தின் வளங்களை குறிவைத்திருக்கின்றன. மனிதாபிமானத்திற்கு கிடைத்த தோல்வியாகவே மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகிறார்கள். அதிகமான நாடுகள் ஆரவாக வாக்களித்துள்ளன. சில நாடுகள் இலங்கை அரசின் போர்க் குற்றத்திற்கு எதிராக வாக்களித்திருக்கிறது.

மனித உரிமை முற்றிலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது உணரப்பட்டிருக்கிறது. கொடும் இன அழிப்பை நிகழ்த்திவிட்டு அந்த நாடுகள் வழங்கிய போர் அரசியலுக்கான அங்கீகாரத்தை இலங்கை அரசு இங்கு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்களுக்கு மட்டும் இந்த மனித உரிமை-மனிதநேய தோல்வி உரியதல்ல உலகத்தலிருக்கிற ஒடுக்கப்படுகிற எல்லா அப்பாவி மக்களுக்கும் கிடைத்த தோல்வியாக பார்க்ப்படுகிறது. உள் நாட்டில் யுத்த வெற்றியை கொண்டாடி தமிழ் மக்களை கொண்டாடும்படி வற்புறுத்துகிற அரசிற்கு இப்படி அங்கீகாரம் அளிப்பது மக்களிடம் மிகவும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

7. 21 ஆம் நூற்றாண்டின் ஹிரோஸிமா-நாகாசாகியான முள்ளி வாய்க்காலில் நடந்த தீராத வரலாற்றுப்புதிர்களின் ஒருசில கண்ணிகளை விடுவித்துக்காட்ட இயலுமா?

அங்கு மிகவும் கொடுமையாக இனப் படுகொலை நடந்திருக்கிறது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் மக்களும் பேதமின்றி அழிக்கப்ட்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிகளை இலங்கை அரசாங்கம் முற்றாக அழித்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள்மீது கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. அங்கு நடைபெற்ற தாக்குதல்களினால் கடைசி மக்கள் பலர் கொல்லப்பட்டிnருக்கிறார்கள். அந்த மக்களுடன் எல்லா கனவுகளும் அங்கு தகர்ந்து போயிருக்கிறது. முழு நம்பிக்கையும் வரலாறும் கனவும் போராட்டமும் எல்லா முனைப்புகளும் அங்கு புதைக்கப்பட்டிருக்கிறது.

அங்கு எந்த அடையாளங்களையும் கண முடியாது. கடைசித்தாக்குதலில் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. அது பற்றிய சரியான விபரங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் ஈழப்போராட்ட வரலாற்றில் மீள முடியாத எழும்ப முடியாத துயரம் முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்திருக்கிறது. அங்கு கொன்றொழிக்கப்பட்ட மக்களை பெருங் கிடங்குகளில் இராணுவம் புதைத்திருக்கிறது. அந்த இடத்தை யாராலும் நெருங்க முடியாது. அது எவராகிலும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்கப்போவதில்லை.

வருகிறவர்களும் தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய வருவதில்லை என்பது பற்றி எல்லோருக்கும் தெரியும். ஜ.நா செயலாளர் பான்கீமுன், விஜய்நம்பியார் முதலியோர் அந்த இடங்களை ரெலிகப்டரில் பார்த்துவிட்டு மனிதர்கள் வாழ்ந்ததிற்கான அடையாளங்கள் எதுவுமில்லை என்று கூறியிருந்தார்கள். அவர்கள் அப்படி கூறியது மிக உன்மையானது. அங்கு இனப் படுகொலையும் வாழ்வழிப்பும் நடந்து கொண்டிருந்தபோது அதற்கு ஒத்து ஆதரவு வழங்கியவர்களும் அவர்கள்தான். குறிப்பாக சிறியரக ஆயுதங்களை பயன்படுத்தி போரிடலாம் என்ற அங்கீகாரத்தை அய்நா சார்பாக அதன் செயளாலர் பான்கீமுன் வழங்கியிருந்தார்.

யாழ்ப்ணத்தில் செம்மணிப புதைகுழிகளில் யாழ்ப்பாண இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்ட போது எழும்பிய எதிர்ப்பு முள்ளி வாய்க்காலில் பெருந்தொகை மக்கள் புதைக்கப்பட்டபோது ஏற்பட முடியாதிருந்தது. தமீழ விடுதலைப் புலிகள் நினைத்திருந்தால் இலங்கை அரசின் இனப்போரை நிறுத்தி ஓரளவு படுகொலைகளை நிறுத்தயிருக்கலாம். அவர்களது நடவடிக்கைள் சிலதும் இந்த இன அழிப்பிற்கு சாதகமாகிப் போயிருக்கிறது. என்றைக்கும தமிழ் மக்களினால் மறக்க முடியாத வடுவாக இருக்கிறது முள்ளி வாய்க்கால் படுகொலை.

8.எதிர்காலச் சந்ததியினரான குழந்தைகளின் வாழ்நிலை என்ன? அவர்களுக்கான கல்விச்சூழல், அகதி முகாம்களில் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது? யுத்த வலயத்திலிருந்து மீண்ட அவர்களின் உளவியல், அகதி முகாம்களின் முட்கம்பிகளில் பெறும் உருமாற்றம் குறித்து விளக்குங்கள்.

குழந்தைகள் வாழ்வதற்கும் எதிர்காலத்திற்கும் எந்த விதத்திலும் பொருத்தமில்லாத சூழ்நிலையில்தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த குழந்தைகள் காணக்கூடாத யுத்த களங்களையும் அதன் மரணக் கொடுமைகளையும் கண்டவர்கள். மனதில் பெரிய அச்சங்களையும் தாக்கங்களையும் கொண்டிருக்கிறார்கள். கால் கை முதலிய அங்கங்களை இழந்திருக்கிறார்கள். யுத்தம் மற்றும் அதிகாரத்திடம் குழந்தைகள் பலி கொள்ளப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். எத்தனையோ குழந்தைகள் செத்து சிதறுகிறபோதும் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். காயங்களுடன் வலிகளுடன் எஞ்சிய குழந்தைகள் சிறையில் முட்கம்பிகளுக்குள் இப்போது வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

எமது மக்கள் இழந்தவற்றில் ஒன்று மாணவர்களது கல்வியும்தான். நிறைய மாணவர்கள் தமது கல்வியை நீண்ட காலமாக கற்க முடியாத நெருக்கடியில் இருந்தார்கள். பள்ளிக்கூடங்களுடன் புத்தகம், பேனா எல்லாவற்றையும் இழந்திருக்கிறார்கள். மாணவர்கள் எங்கோ ஆசிரியர்கள் எங்கோ பள்ளிக்கூடத்தை இழந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். அகதி முகாங்களில் உள்ள பாடசாலைகள் தற்காலிக முகாம் பாடசாலைகளாக இருக்கின்றன. அவைகளால் இயல்பான சூழ்நிலையுடன் ஆரோக்கியமான கல்வியை வழங்க முடியாதிருக்கிறது.

நல்ல கல்வியை பெற முடியாதிருக்கிறதுடன். நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய உளவியல் மீளவும் அச்சுறுத்தலுக்குள்ளும் முற்றுகைக்குள்ளும் வைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தேவையான சூழல் என்றோ தொலைந்து விட்டது. இந்த உலகத்தினுடைய பழி பாவங்களுடன் அரசியல் போர் தந்திரங்களுடன் எவ்வகையிலும் சம்பந்தமில்லாத குழந்தைகள் தமது உலகத்தை இழந்து தவிக்கின்றார்கள். அவர்கள் முட்கம்பிகளால் முற்றுகைக்குளிருந்து வெளியில் இருக்கிற முற்றுகையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது உள்ளம் மிகவும் பாதிப்டைந்திருக்கிறது.


9. அதே போல போரில் மிக மிக முக்கியத்துவம் பெறும் பெண்களின் வாழ்நிலை என்ன? அவர்களுக்கான வாழ்வுச்சூழல், அகதி முகாம்களில் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது? யுத்த வலயத்திலிருந்தும், தங்களது உடல் மீது திணிக்கப்பட்ட வன்முறையிலிருந்தும் மீண்ட அவர்களின் உளவியல், அகதி முகாம்களின் முட்கம்பிகளில் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள்?

பெண்கள் போரில் பல்வேறு பாதிப்புக்களை அனுபவிக்க நேரிடுகிறது. இடம்பெயர்ந்து நாளுக்கு நாள் பொழுதுக்கு பொழுது அலைச்சல் படுகிறபோது தமது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்டுகிறார்கள். ஆனால் ஈழப் பெண்கள் போராளிகளாக போர்க் களங்களிலும் சமர்களில் ஈடு பட்டிருக்கிறார்கள். இங்கு முன்பு ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளும் ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஈழத்துப் பெண்கள் பாதிப்புகளை வெற்றி கொண்டும் இருக்கிறார்கள். சாதாரண பெண்கள் சொற்களில் அடங்காத துயரத்தை அனுபவித்திருககிறார்கள்.

கட்டாயப் போராட்டம் திணிக்கப்பட்ட போது பெண்கள் அனுபவித்த துயரங்கள் மிகவும் கொடுமையானவை. இடம் பெயர்ந்த இடங்களில் உடல் ரிதியான ஒடுக்கு முறைகள் வற்புறுத்தல்கள் வதைகளால் பெண்கள் பாதிப்படைந்திருககிறார்கள். குடும்பச் சுமைகள் பொறுப்புக்கள் குழந்தைகளை காத்துக்கொள்ளுவது இழப்பு என்பன போரில் பெண்களை மிக கடுமையாக வதைத்திருக்கிறது. மனச் சிதைவுகளை எதிர் கொள்ள வேண்டி நேரிட்டதுடன் மக்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டபோது- சரணடைந்தபோது அவர்கள் மிகவும் கேவலமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அந்த கொடுமைகள் வன்மமான பாலியல் துஷ்பிரயோக நோக்கத்துடன் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன.

அகதி முகாங்கள்கூட ஆண் மனோ பாவங்களால் பெண்களை பாதிக்கிறது. சன நெருக்கடியும் இராணுவங்களால் சூழப்பட்ட நிலையும் பெண்களை பாலியல் ரீதியான ஒடுக்கு முறைக்கு தள்ளுகிறது. முகாங்களிலுள்ள பெண்கள் இராணுவத்தால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக அறிய முடிகிறது. இப்படி எல்லா விதத்திலும் போர் தொடங்கி அலைந்து அதன் பிறகும் பெண்கள் வனமுறைகளையும் வதைப்புக்களையும் எதிர்கொள்ளுகிறார்கள்.

10. விடுதலைப் புலிகள் சிங்கள அரசின் பொருளாதார பலத்தை அழித்தார்கள்; சிங்கள அரசு அதை தன் அண்டைநாடுகளின் உதவியுடன் இட்டு நிரப்பிக் கொண்டது. சிங்கள ராணுவம் புலிகளின் ஆட்பலத்தை அழித்தது. புலிகளால் அதை நிரப்பமுடியவில்லை. கொரில்லா யுத்த தந்திரத்தில் ஆரம்பித்த புலிகள் இயக்கம்இ மரபுவழி ராணுவ யுத்தத்திற்கு மாறியதன் விளைவுதான் இந்த வீழ்ச்சி என்று புலிஆதரவாளர்களால் கருத்து சொல்லப்படுகிறது. போர் மற்றும் போரின் முடிவு குறித்த ஈழ மக்கள் கருத்து என்ன? புலிகள் மீண்டும் எழுந்துவரக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளனவா?

விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார வளங்களை அழித்தபோது அதற்கு பதிலாக சிங்கள அரசு தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருந்தது. உயிரை கொடுத்து அபபடியான தாக்குதல்களை தமீழ விடுதலைப் புலிகள் நடத்தியபோது அதற்கு பதிலாகவும் எங்களிடமிருந்து சனங்களின் உயிர்களை அரசு பறித்தது. திருப்பி மக்களை தாக்கி கொன்றொழிப்பதற்கும் இழப்பை ஈடு செய்வதற்கும் உலக நாடுகள் உதவி செய்தன. போரை தடுத்து நிறுத்தவும் அரசாங்கத்தை பலமிழக்க செய்யவும் அப்படியான தாக்குதல்களை புலிகள் மேற்க் கொண்டனர். அதன் மூலம் அரசாங்கத்தின் போரிடுகிற திறன் முதலீடு என்பன பாதிக்கும் என அவர்கள் கருதினார்கள். ஆனால் மீள மீள போரிற்கு முதலீடுகளை செய்து கொண்டு தமிழ் மக்கள்மீது பெரும்போரை செய்யவும் தொடரவும் உலகம் உதவி வழங்கிக் கொண்டேயிருந்தது.

புலிகளின் ஆட் பலத்தை அவ்வளவு வேகமாக அழித்தார்கள் என சொல்ல முடியாது. புதுக்குயிருப்பு ஆனந்தபுரத்தில் மிகவும் கோழைத்தனமாக இராணுவம் போராளிகளை சுற்றி வளைத்து அவர்கள் மீது நஞ்சு வாயுவை பிரயோகித்து 400 போராளிகளை பரிதாபமாக கொன்றது. புலிகளது போரிடுகிற மனோபாவத்தை அரசாங்கம் தனது புலனாய்வு அறிவை கொண்டு அறிந்து புலிகளுக்கு எதிராக எப்படி போரை முன்னெடுக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தது. அதற்காகவே சமாதானத்தையும் அரசு பாவித்திருக்கிறது. சமாதான காலத்தில் புலிகளும் அரசாங்கத்தைப்போல இராணுவ அரச தன்மைகளில் வளர்சிகளை பெறறிருந்தார்கள. ஆனால் அரசாங்கம் புலிகளை எப்படி அழிக்கலாம் என்பது பற்றி ஆராய்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது. புலிகளுக்குள் பிளவுகளையும் ஏற்படுத்தவும் போரிடுகிற மனநிலைகளை குழப்பவும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சமாதானம் முறிக்கப்பட்டு போர் தொடங்கியபோது புலிகள் போரிடுகிற திறனை மீளவும் கண்டடைய சற்று நாட்கள் எடுத்தன. சமாதானம் ஏற்படுத்திய வாழ்க்கைச் சூழ்நிலையிலிருந்து போரிடுகிற சூழ்நிலைக்கு திரும்ப காலம் எடுத்தது. அவர்கள் கொரில்லா நிலையிலிருந்து மாறி இராணுவ தன்மையை அடைந்திருந்தார்கள். இராணுவம் இராணுவ நிலையுடன் புலிகளின் கொரில்லா நிலையை பெற்று தாக்குதலை தொடுத்திருந்தது. குறுக்கு வழிகள் பலவற்றால்தான் அரசாங்கத்தால் புலிகளை வெல்ல முடிந்தது. இந்த வெற்றியின் பின்னால் நிறைய தந்திரங்கள் உதவிகள் அரசியல்கள் முதலீடுகள் இருக்கின்றன. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு இந்த தோல்வி எதிர்பாராமலே நிகழ்ந்து விட்டது.

போர் என்றும் தீராத வடுக்களை தந்து விட்டு போயிருக்கிறது. கனவை சிதைத்து மக்களை மீள முடியாத குருட்டுத் தனமான அரசியில் தள்ளி விட்டுப் போயிருக்கிறது. போர் முடிந்திருப்பதனால் எஞ்சிய மக்களது உயிர்களையாவது மீள பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. உயிர்களை வைத்துக் கொண்டிருபப்பபதை தவிர எல்லாவற்றையும் அகற்றி விட்டிருக்கிறது. போதும் போதும் என்ற மனநிலையை கொடுத்திருக்கிறது. அப்படி தமிழ் மக்கள் ஒரு நிலையை அடைந்து இனி எழும்பிவிடக் கூடாது என்பதுதான் இலங்கை அரசின் திட்டமுமாயிருக்கிறது. எந்தக் காலத்திலும் தமிழர்கள் போருக்கு வர முடியாத மனநிலையுடன் அரசாங்கம் போரை செய்து முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

புலிகள் மீண்டும் எழுந்து வருவதற்கு சாத்தியம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அநேகமான போராளிகள் இராணுவத்தால் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இராணுவத்திடம் அவர்கள் சரணடைந்திருக்கிறார்கள். நிறையப்பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கிழக்கிலும் வன்னியின் காடுகளிலும் சில பேராளிகள் பதுங்கியிருப்பதாக அவர்கள் சொல்லுகிறார்கள. ஒரு புலியாவது எங்கோ இருக்கிறது என்ற செய்தி அரசாங்கத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிறது. பத்மநாதனும், உருத்திரகுமாரனும், தயா மோகனும், பொட்டுஅம்மானும் இருக்கிறார்கள் என்ற செய்தியும் அவர்களது அறிக்கையும் அரசாங்கததிற்கு தலை வலியை கொடுக்கிறது. ஆனால் எழுந்து வருதல் என்ற பலம் பொருந்திய நிலைக்கு அவர்களால் வர முடியும் என்று கூற முடியாது. அவர்கள் சிலவற்றை திட்டமிட்டு செய்தாலும் அது தமிழ் மக்களுக்கு எந்தளவு சாதகமாயிருக்கும் என்று கூற முடியாது. புலிகளதோ தமிழ் மக்களதோ எந்த முனைப்பையும் அரசாங்கம் அழித்து அகற்றவே முயலுகிறது.

11.விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம் ((Provisional Transnational Government of Tamil Eelam) என்று ஒன்றை வி.உருத்திர குமாரன் தலைமையில் அமைத்திருப்பதாக செ.பத்மநாதன் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து உங்களது மற்றும் தமிழீழ மக்கள் கருத்து என்ன?

இந்தச் செய்தி அரசாங்கத்தை மிகவும் பதற்றத்திற்கு உள்ளாக்குக் கூடியது. ஆனால் தமிழ் மக்கள் இதனால் எதையாவது அடைவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்று அரசாங்கம் மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்படியான அறிவிப்புக்கள் தமிழீழம் பற்றிய முனைப்புகள் என்று மீள தொடங்குகிறபோது அரசாங்கத்தை அது குழப்பத்திற்குள்ளாக்குகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எந்தளவு சாத்தியமானது என்பதைப் பற்றி கூறுவது சிரமமானது. ஆனால் எந்த முனைப்பையும் அரசாங்கம் சிதைக்கவே முயற்சி செய்யும். நிலத்தலிருந்து மக்களும் விடுதலைப் புலிகளுமாக மரணங்களில் வாழ்ந்து கொண்டு போராடி ஈழத்தை கோரிக் கொண்டிருந்தார்கள். அளவிட முடியாதுபோன மக்கள் பலியாகியிருந்தார்கள். அப்படியான சூழ்நிலையில்கூட நியாயபூர்வமாக தமிழ் மக்கள்மீது பரிவு காட்டாத உலகம் எதனை ஏற்றுக் கொள்ளும் அதன் மூலம் என்னத்தை சாதிக்க முடியும் தமிழ் மக்களுக்கு என்ன நலன் கிடைக்கும் என்று பார்க்கிறபோது வெறுமைதான் இருக்கிறது.

நிலத்தலிருந்து போராடுகிறபோதுதான் அந்தப் போராட்டத்திற்கு வலிமையிருக்கும். அதனால்தான் புலிகள் கடைசி வரை தங்களை, அழிக்கிற நிமிடம் போராடினார்கள். ஆனால் தமீழ விடுதலைப் புலிகள் கடைசி நாட்களில் மக்களை நடத்திய விதம் மிகவும் துன்பமானது. இராணுவத்தின் தாக்குதல்களுடன் புலிகளின் மீறல்களையும் மக்கள் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. தமிழீழத்திற்காக சொந்த பிள்ளைகளாலேயே துன்பத்திற்குள்ளாக்கிற நிலையில் அந்தக் கனவின் அடிப்படை சிதைந்து போயிருக்கிறது. சிங்கள அரசு மீள முடியாத அடியை முதுகில் விழுத்தியபோது புலிகள் தாங்க முடியாத கசப்பை மக்களுக்கு வழங்கினார்கள். வன்னி மக்களிடம் படு அப்பட்டமாக அந்த கசப்புணர்வு தெரிகிறது. ஈழப்போராட்டத்திற்காக அவர்கள் பல படிகளை முன்னெடுத்தார்கள்., தியாங்களை செய்தார்கள்., எங்கள் சகோதரர்கள் விரும்பி போராட்டதில் ஈடுபட்டார்கள். முக்கியமாக அவர்கள் தமிழ் மக்களுக்குரிய மனிதநேயத்தையாவது மதித்திருக்க வேண்டும்.

எந்த அதிகாரமும் அக்களை அடக்குவதை உணர முடிகிறது. அரசாங்கத்தின் அடக்கமுறையுடன் புலிகளது கசப்பான அனுபவம் எல்லாவற்றையும் மக்களை நிராகரிக்கச் செய்கிறது. எனினும் சூன்யமான அரசியல் இருளில் எமது மக்கள் நிற்கிறார்கள். அவர்களது வாழ்வுரிமை அவர்களுக்கு தேவைப்படுகிறது. புலிகள் தோல்வியடைந்தாலும் அழிந்தாலும் ஈழம் பற்றிய கனவு எமது மக்களிடம் இருந்து கொண்டேயிருக்கும். அங்கு வாழுகிற அவசியம் தேவைப்படுகிறதை உணருகிற நிலை மீள மீள வந்து கொண்டேயிருக்கும்.
_____________
நன்றி:உன்னதம் ஜூலை இதழ்

Tuesday, June 9, 2009

தோல்வியடைந்தது மக்கள்தான்

குமுதம் செய்தி ஆய்விற்காக தளவாய் சுந்தரம் என்னுடன் உரையாடல் ஒன்றை நிகழ்த்தியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்கு பிறகு அவர் நிலமைகளை கேட்டறிய தொடர்பு கொண்டார். நம்பிக்கைகள் தகர்ந்து போய் பீதியும் யுத்தத்தின் வடுக்களும் துயர் தருகிற சூழலில் எமது மக்கள் வெறுமையுடன் இருப்பதை அவருக்கு தெரிவித்தேன்.

1. தளவாய் சுந்தரம்
யுத்தம் மற்றும் யுத்தத்தின் முடிவு பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள்?

தீபச்செல்வன்
யுத்தம் முடிவுக்கு வந்திருப்பது ஒன்றுதான் மக்களுக்கு ஆறுதல்தரக்கூடிய விடயம்;. ஆனால் அதை முடிவுக்கு கொண்டவிதம் கொடுமையான அனுபவங்களைத் தந்திருக்கிறது. குறிப்பாக கடைசித் தாககுதலில் கணக்கிடப்படாத பெரும் எண்ணிக்கையான மக்கள் பலியாகியிருக்கிறர்hகள். யுத்தம் முடிவுக்கு வந்திருப்பதில் இன்னொரு துயரம் ஒளிந்திருக்கிறது. ஈழப்போராட்டம் மற்றும் அதன் கனவுவெளி அழிக்கப்பட்டிருக்கிறது. மீளவும் அதற்காக மக்கள் தலை தூக்கப்போவதில்லை என்ற தோல்வியின் அனுபவ வெளிப்பாடு தரப்பட்டிருக்கிறது. வெறும் இராணுவ வெற்றிகளால் மட்டும் ஒருபோதும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது என்பது யுத்தத்தின் முடிவை கேள்விக்குள்ளாக்கிறது.

தேவையற்ற யுத்தம் ஒன்று நிகழந்திருக்கிறது. அதை இலங்கை அரசு சிங்கள இனவாத போக்குடன் தமிழ்மக்கள்மீது திணித்திருக்கிறது. பெரிய அழிவை கண்ட மக்கள் தற்போது எலலாவற்றையும் வெறுத்து ஒதுங்கியிருகக விரும்புகிறார்கள். பெரும் அழிவுடன் முடிந்த யுத்தம் திரும்பவும் தமிழ் மக்களை மீள முடியாத குருட்டுத்தனமான இருளில் தள்ளி விட்டிருக்கிறது. மக்களை தொடர்ந்தும் துயரங்கள் பீடிக்கின்றன. எதுவும் செய்யவும் பேசவும் திறனற்றுக்கிடக்கிறார்கள் எங்கள் மக்கள். ஆயுதங்கள் ஓயப்போவதில்லை என்பதைப்போல தமிழ் மக்கள்மீதான அடக்குமுறை யுத்தம் முடியப்போவதில்லை எனவும் மக்கள் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார்கள். அத்துடன் கிழக்கில் பதுங்கியிருக்கிற போராளிகள்மீது அறிவிக்கப்படாத தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது.



2. தளவாய் சுந்தரம்
இந்த யுத்தத்தின் இலங்கை அரசுடன் பின்னணியில் சேர்ந்து இயங்கிய வல்லமையுள்ள நாடுகள் பற்றிய குறிப்பிடுங்கள்?

தீபச்செல்வன்
இந்த யுத்தம் விடுதலைப்புலிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல. தமிழ் மக்களுக்கும் எதிரானதுதான். இதில் உலகத்தின் வல்லமையுள்ள நாகள் பல சேர்ந்தியங்கியுள்ளன. அதிலும் இந்தியாவின் ஆதிக்கமும் தலையிடும் ஒத்துழைப்பும் வேவ்வேறு வடிவங்களில் இருந்துள்ளன. பிரபாரனை பழிவாங்கும் நோக்கில் பல்லாயிரம் மக்களை கொன்று அவர்களை அலைத்து துயரப்படுத்தி விட்டது இந்தியா.

பாகிஸ்தான் பகிரங்கமாகவே இலங்கை இராணுவ வெற்றியை தனக்குரியதாக உரிமை கோரியுள்ளது. சீனா, அமரிக்கா, ஜப்பான் போன்ற பல நாடுகள் இந்த யுத்தத்தில் இலங்கை அரசுடன் சேர்ந்தியங்கியுள்ளன. எங்கள் தேசத்தின் நிலம் மற்றும் அதன் வளங்களை சுறண்டுகிற அரசியல் பொருளாதார நோக்கத்துடன் இவை செயல்படுகின்றன. உலக அதிகார நிகழ்ச்சி நிரலுக்கு எமது மக்கள் மற்றும் அவர்களின் கனவு பலியாக்கப்பட்டுள்ளது.


3.தளவாய் சுந்தரம்
இனி ஈழ விடுதலைப் போராட்டம் என்ன ஆகும் என்பது பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

தீபச்செல்வன்
ஈழப்போராட்டத்தை மிகவும் செப்பனிடப்பட்ட கருத்தியலுடன் முன்னெடுக்க வேண்டிய தேவை ஈழச்சமூகத்திற்கு இருந்தது. குறிப்பாக எழுபதுகளின் பிற்பகுதியில் ஈழப்பேராட்டம் தொடங்கியவேளையில் ஈழத்தமிழ் போராளிகளிடம் இருந்த ஒற்றுமை பிறகு இந்திய இலங்கை மற்றும் சருவதேச சதிகளால் சீர்குலைந்துபோனது. அந்த நிகழ்ச்சிநிரலிலுக்கு விடுதலைப்புலிகளது ஆதிக்கம் சாதகமாக இருந்தது. அவர்கள் சகோதரப் போராளிகளை இணைத்து தமிழ் மக்களுக்கான விடுதலையை வென்றெடுத்திருக்க வேண்டும். புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்களும் புலிகளது ஆதிக்கத்தால் இலங்கையரசிற்கு அடிபணிந்து புலிகளுக்கு எதிராக நிற்பதற்காக மக்களுக்கு எதிராகவும் மாறினர்.

பெரிய ஒறறுமையினமையையும் பிழைகளையும் தந்திருந்தபோதும் கடையிசில் புலிகளது இராணுவ பலம் ஓங்கியிருந்தது. அவர்கள் சிலவற்றை திட்டமிடடு நடத்தினார்கள். நடத்துகிற நிலமும் வல்லமையும் அவர்களுக்கு இருந்தது. அதுவும் மீறிய இன்றைய நிலையில் ஈழப்போராட்ம் என்பது குறித்து மக்களிடம் தேக்கம் இருக்கிறதே தவிர, மீளவும் ஒரு எழுச்சிக்கான இடத்தையோ வாய்ப்பையோ இல்லாமல் செய்திருக்கிறது அரசு. ஈழப்போராட்டம் பற்றி குறிப்பாக இந்த மக்ளே தீர்மானிக்க முடியும். அவர்கள் அதற்காக தமது முழுக்குருதியையும் சிந்தியிருக்கிறார்கள். விலையும் பலியும் கொடுத்திருக்கிறார்கள். இப்படியான துயரமான சூழ்நிலையை ஏற்படுத்தி தனது எண்ணத்தை வெறறியாக்கியிருக்கிறது இலங்கை அரசு. பேராட்டத்திற்கான தேவையிருக்கிறபோதும் அதற்கான சூழல் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது.

4.தளவாய் சுந்தரம்
எல்லாம் போதும், போராட்டங்களை கைவிட்டுவிட்டு, இருக்கும் சூழ்நிலையில் அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ளலாம் என மக்கள் கருதுகிறார்களா?

தீபச்செல்வன்
அனுபவித்தவை, அலைந்தவை, இழந்தவை, பலியிட்டவை எல்லாம்போதும் என மக்கள் நினைக்கிறார்கள். அளவுக்கதிமான இழப்புக்களையும் உலகத்தால் கைவிடப்பட்ட நிலமைகளையும் உலகத்தின் சூழ்ச்சிகளையும் பேரவலத்தையும் கண்;ட மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். பேராட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது அதை வாய்வாதத்தினாலும் அரசியலுக்காகவும் தர்க்கத்திற்காகவும் பேசி அதற்கு நீட்சிகளை கற்பிக்கிற மனநிலையில் மக்கள் இல்லை. போராட்டம் மக்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டது. இனி போதும் என்கிற மனநிலையை உருவாக்கிவிட்டது. இராணுவம் முற்றகையிட்ட போதெல்லம் அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று நம்பி மக்கள் ஏமாந்தனர். அதற்காக மீளமீள இழப்புக்கைள மக்கள் சந்தித்தனர். உலகத்தின் சூழ்சசியாலும் இராணுவ அரசியல் ரீதியான ஓத்துழைப்பாலும் புலிகள் தோல்வியை சந்தித்தனர் அவைகளின் விளைவாக மக்கள் தான் பேரிழப்புக்களை கண்டனர்.

இனி அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ளலாம் என மக்கள் கருதுகிறார்கள்தான். ஆனால் அப்படியொரு அமைதி திரும்பாமல் தொடர்ந்தும் துயரங்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள். இந்த துயரம் என்றைக்குத் தீரும் என்று யாராலும் அறிய முடியவில்லை. வன்னி மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கும் அமைதியாக வாழ முடியவில்லை. தமது சொந்த மண்ணுக்கு திரும்பினாலும்கூட அமைதிக வாழவார்களா? என்ற கேள்வியிருக்கிறது. ஏனென்றால் மக்கள் இராணுவத்தால் ஆளப்படுகிற வாழ்வை விரும்பவில்லை. அவர்களால் மேற்கொள்ளப்படுகிற அடக்குமுறைகள் மீறல்கள் மிகவும் கொடுமையானவை. அப்படியிருக்க மக்கள் எதிர்பார்க்கிற அமைதியான வாழ்வு சாத்தியங்களற்றிருக்கிறது.

5.தளவாய் சுந்தரம்
விடுதலைப் போராட்டம் தொடரவேண்டும் எனக் கருதுபவர்களில்... ஆயூதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு அரசியல் போராட்டத்துக்கு திரும்பலாம் என கருதுபவர்களும் இருக்கிறார்களா?

தீபச்செல்வன்
விடுதலைப்போராட்டம் தொடரவேண்டும் என்று கருதுபவர்கள் குறிப்பிடதக்க புலம்பெயர் தமிழர்களும் தமிழகத்தமிழர்களும்தான். தமிழகத்தலைவர்கள் சிலர் தொடர்ந்தும் கற்பிக்கிற கற்பிதங்கள் குறித்து மிகவும் அதிருப்தி காணப்படுகிறது. நடந்து முடிந்த இந்தியத்தேர்தலின் அனுபவமும் முள்ளிவாக்காலில் நடந்த கடைச் சமரும் ஈழப்போராட்டம் அதற்கான ஆதரவுத்தளம் பற்றிய மாறுபட்ட அனுபவத்தை தந்திருக்கிறது. தமிழ் மக்கள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட சூழலில் அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்ப்டிருக்கிறார்கள். ஆயதப்போராட்டத்தை முன்னெடுக்க எந்த வாய்ப்புமற்றிருப்பதால் ஜனநாயக ரீதியாக பேராடி அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஈழத்தமிழ் சமூகத்தலிருந்து சிலர் கருகிறார்கள். உண்;மையில் தமக்கு அரசியல் உரிமை தேவை என்ற நிலைப்பாடு மக்களுக்கு இருக்கிறது. வன்னி மக்களிடம் மிகுந்த தற்போதைய நெருக்கடிகளின் காரணமாக அதன் வெளிப்பாடு தெரியாமல் இருந்தாலும் மற்ற மக்களிடம் அப்படியிருக்கிறது.

ஆனால் தமிழ் மக்களுக்கான நல்ல ஜனநயாக தலைமைத்துவத்தையோ போராட்ட முனைப்பையோ சிங்கள அரசு விரும்பவில்லை. புலிகளின் சருவதேச விவகார பொறுப்பாளர் கே.பத்மநாதன் மற்றும் மட்டக்களப்பு அரசியல் துறைப்பொறுப்பாளர் தயாமோகன் முதலியோர் அரசியல் நீரோட்டத்தில் இணைய விரும்பியது குறித்த அறிவிப்பை இலங்கையின் பாதுகாப்பு செயளாலர் கோத்தாபாயராஜபக்ஷ நிராகரித்துள்ளார். இதனோடு தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்பிக்களை நாடாளமன்றத்தலிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். தமிழ் மக்களுக்காக பிரக்ஞை பூர்வமாக செயல்படக்கூடிய ஜனநாகத்தையோ அரசியல் தலைமையையே சிங்கள அரசு விரும்பவில்லை. சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ், கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசபிள்ளை சந்திரகாந்தன், தேசிய நல்லிணக்கதுறை அமைச்சர் முரளிதரன் போன்றவர்கள் மாதிரி தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவர்களை தமிழ்மக்களின் ஜனநாயக முனைப்புக்களாக காட்டுகிறது. தமிழ்மக்களை தனது அதிகாரம் ஆட்சி என்பவற்றுக்குள்ளாக வைத்திருந்து எந்த அரசியல் உரிமைகளையும் வழங்காமல் இழுத்தடிப்பதற்குத்தான் இப்படியான ஜனநாயகம்தான் இங்கு காணப்படுகிறது.

6.தளவாய் சுந்தரம்
விடுதலைப்புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்துள்ளது தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை எந்த வகையில் பாதித்துள்ளது? வழக்கம் போல் மக்கள் அன்றாட வேலைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்களா? அல்லது அதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதா?

தீபச்செல்வன்
விடுதலைப்புலிகளுக்கு விமர்சனமற்ற முறையில் பெரிய ஆதரவு இருந்தது. அதே வேளை எதிர்ப்பும் இருந்தது. குறிப்பாக ஆதரவானவர்களிடம் புலிகளின் தேர்ல்வி பாதிப்பை ஏற்படுத்தியது. விடுதலைப்புலிகளுடன் அங்கு பல்லாயிரம் மக்களும் இருந்ததால் கடைசிச்சமர் மற்றும் தோல்வி என்பன அநேகமான மக்களது அன்றாட வாழ்க்கையை பாதித்தது. ஆனால் மக்கள் எதையும் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். எல்லோருக்குள்ளும் பெரியளவிலான துக்கம் இருந்ததை உணர முடிகிறது. விமர்சனங்களுக்கப்பால் புலிகள் இராணுவ பலத்தால் உயர்ந்திருந்ததால் அவர்களுக்கு பெரிய ஆதரவு இருந்தது. அவர்கள் ஊடாகத்தான் ஈழம் காண முடியும் என்ற நம்பிக்கையை இந்த தோல்வி வழகிவிட்டது.

7.தளவாய் சுந்தரம்
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணம் குறித்த மர்மம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

தீபச்செல்வன்
தலைவரது மரணம் குறித்து மாறுபட்ட யெ;திகள் வந்தன. அவரது மரணத்தை உறுதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தனது தேசிய தொலைக்காட்சியில் அவரது சடலம் என ஒன்றை ஒளிபரப்பியது. அது பொம்மைத்தனமானதாகவும் அசைவில் யதார்த்தமற்றும் இருந்தது. அதைப் பார்த்த மக்கள் அதை பிரபாரகரன் என்று ஏற்கவில்லை. பின்னர் கருணாஅம்மானும் தயாமாஸ்டரும் சடலத்தை இனங்காட்டும் காட்சியை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதில் சடலம் வித்தியசமாக இருந்தது. அது அவரது சடலம் என கூறக்கூடிய மாதிரியிருந்தது. முதலில் பிரபாகரன் மரணிக்கவில்லை எனக்கூறிய பத்மநாதன் பின்னர் அவர் மரணித்ததை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இப்படி தலைவர் பிரபாகரனின் மரணத்தில் மாறுபட்ட நிலையும் மர்மமும் இருக்கிறது. அது தொடர்ந்து நீடித்தபடியிருக்கிறது. பிரபாகரனின் மரணம் பற்றி கதைத்தவர்களை இராணுவம் கைது செய்து கொண்டு போயுள்ளது. அத்துடன் முதியவர் ஒருவர் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படியிருக்க இதைப்பற்றி இன்னும் மக்கள் என்ன கதைக்கிறார்கள் என்று வெளிப்படையாக அறிய முடியாதிருக்கிறது.

8.தளவாய் சுந்தரம்
வடக்கில் தேர்தல் நடத்துவதற்கான வேலைகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன? அதுபற்றி...

தீபச்செல்வன்
வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் மாநகரசபைத்தேர்தல் நiபெறவிருக்கிறது. அவை ஒரு சுகந்திரமான ஜனநாயகத்தை ஏற்படுத்தக்கூடிய தேர்தலாக இருக்கும் என்று கூற முடியாது. அப்படித்தானே தேர்தல்கள் அங்கும் நடக்கின்றன. இங்கும் அப்படித்தான் சமூக பிரனக்ஞை உள்ள ஒருவர் தேர்தலில் நிறகப்போதுமில்லை அப்படி நின்றால் அவர் வெல்லப்போதுமில்லை. தேர்தலிலும் ஜனநாயகத்திலும் துவக்குத்தான் ஆளுகிறது. முடிவு செய்யப்பட்ட சபைக்கான தேர்தல்தான் நடக்கப்போகிறது. பல வருடங்களின் பின்னார் வடக்கில் மாநகர சபைத்தேர்தல் என அரசு அறிவித்த போதும் இது மக்களை எந்த வித்திலும் கவனப்படுத்தவில்லை. அவர்கள் இந்த தேர்தல் குறித்து எதுவும் அலட்டவும் இல்லை.


9.தளவாய் சுந்தரம்
யுத்த வலயத்தில் இருந்து வருகை தந்து அகதிமுகாம்களில் உள்ள மக்களின் நிலமை எப்படியிருக்கிறது.

தீபச்செல்வன்
அவர்கள் விலங்குகளைப்போல அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். முற்றிலும் எந்தச் சுகந்திரமும் அற்றிருக்கிறார்கள். இடவசதியில்லாமல் மக்கள் குறுகிய இடத்தில் நெருங்கியிருக்கிறார்கள். ஐம்பதுபேர் இருக்கக்கூடிய இடத்தில் நுர்று பேர் இருக்கிறார்கள். நோய் முதலிய நெருக்கடிகளை அனுபவிக்pறார்கள். உழைப்பு வருமானம் முதலியவற்றை இழந்து தேவையான பொருட்களை வாங்க முடியாமலும் விரும்பிய உணவை சாப்பிட முடியாமலும் எதுவரை இந்த நிலை என வெறுமையுடன் இருக்கிறார்கள்.

10.தளவாய் சுந்தரம்
அகதி முகாம்களில் இருப்பவர்களுடன் வெளியேயுள்ளவர்கள் தொடர்புகொள்ள முடியுமா?

தீபச்செல்வன்
தொடக்கத்தில் மிகவும் சிக்கலாக இருந்தது. தற்போது குறிப்பட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரங்களுக்குள் சந்திக்க முடிகிறது. அவ்வளுதான்., சோதனைகள் மிக இறுக்கமாக இருக்கும். தொலைபேசி வதமிகள் செய்து கொடுக்கப்பட்டள்ளன என்று கூறப்பட்டபோதும் அப்படி எந்த வசதியும் இல்லை. நிறைய மக்கள் உயிருடன் இருக்கிறார்கள், இல்லை என்ற செய்திகளை பிள்ளைகள் பெற்றோர் உறவினர்கள் என்று தமது உறவுகளுக்கு தெரிவிக்க வழியற்றிருககிறார்கள். பல குடும்பங்கள் பல்வேறு முகாம்களில் பிரிந்து வாழ்கிறார்கள்.

11.தளவாய் சுந்தரம்
புலிகள் மீண்டும் எழுந்துவர சாத்தியப்பாடுகள் உள்ளதா?

தீபச்செல்வன்
புலிகள் மீண்டு வருவதற்கான சாத்தியப்பாடுகள் கொஞ்சமும் இல்லை. கிழக்கிலும் வடக்கிலும் சில போராளிகள் மறைந்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அண்மையில் மட்டகளப்பு மாவட்ட அரசியல் தலைவர் தயாமோகன் பிபிசிக்கு பேட்டியளித்திருந்தார். போராளிகள் சிலர் எஞ்சியிருப்பினும் முன்னர் போல வெளிப்பட சாத்தியமில்லை. அதற்கான அடிப்படைகளை அழித்து மேலும் தேடியழித்துக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு. அதற்கு உலகளவில் தொடர்ந்து முழுமையான ஆதரவு இருக்கிறது. அதற்கேற்ப இலங்கை-ஈழச் சூழல் மாற்றி அமைக்கப்பட்டுக் கொண்டிருககிறது.

12.தளவாய் சுந்தரம்
போர் நடந்து முடிந்த பகுதிகளைப் பார்க்க மற்றவர்கள் (மக்கள்) செல்ல முடியுமா?

தீபச்செல்வன்
போர் நடந்து முடிந்த இப்பொழுது பார்க்க முடியாது என்பது பிரச்சினை இல்லை எப்போது பார்க்க முடியும் என்பதுதான் பிரச்சினை. மக்கள் சென்று பார்வையிடுவதற்கு எந்த அனுமதியும் கிடையாது. மூடுமந்திரங்காளக அந்த பகுதிகள் இருக்கின்றன. மனிதநேய அமைப்பு என்று வருகிறவர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. மனிதாபிமானத்தை கருதி வந்த ஐநா செயளாலர் பர்கீமூனாலும் மற்றும் விஜய் சம்பியாராலும் சுகந்திரமாக பார்வையிட முடியவில்லை. அவை பெரும் அடையாள அழிபபுகளுக்கம் மாற்றங்களுக்கும் அப்பால்தான் வேறு நிறத்துடன் காணமுடியும் என நினைக்கிறேன்.

உரையாடியவர்:தளவாய்சுந்தம்

Thursday, January 8, 2009

“குழந்தைகளின் புன்னகைகளை நிலங்களின் அடியில் புதைத்து வைத்துவிட்டு நாம் நசுங்கிய எதிர்காலத்தோடு அமர்ந்திருக்கிறோம்” - தீபச்செல்வன்

நேர் கண்டவர்: சித்திராங்கன்

கவிஞர் தீபச்செல்வன் ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக அறியப்பட்டு வருகிறார். ஈழத்தின் போர்ச்சூழலில் வாழ்ந்து கொண்டு அந்த வாழ்வை இந்த மண்ணோடு மண்ணாக அநுபவித்து பதிவாக்கி வருபவர். தீபம் இணைய இதழின் மூலம் தன்னை தமிழ்ச்சூழலில் அடையாளப்படுத்தி வருபவர். இவரின் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ என்ற கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிவர உள்ளது.

தற்கால போர்க்கால வாழ்வில் அமிழ்ந்திருக்கும் மக்களின் அவலமும் அழிவும் நிறைந்த வாழ்வை, இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது நிகழ்த்தி வரும் மிகப் பெரும் இனஅழிப்புக் கொடூரத்தை, தமிழ் மக்களின் அடையாள அழிப்பை, திறந்த வெளிச்சிறைச்சாலையில் வாழும் யாழ் மக்களின் அச்சமும் அறியப்படாத கொலைகளும் பலவீனமும் நிறைந்த வாழ்வை, இரத்தமும் சதையுமாக தனது கவிதைகளில் வெளிப்படுத்தி வருகிறார்.

‘கிளிநொச்சி’, ‘யாழ் நகரம்’,’முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி’, ‘கிணற்றினுள் இறங்கிய கிராமம்’, ‘குழந்தைகளை இழுத்துச்செல்லும் பாம்புகள்’, ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’, ஆகிய கவிதைகள் முக்கியமானவை. ஈழத்தின் பத்திரிகை சஞ்சிகைகள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. தமிழின் அதிகமான இணைய சஞ்சிகைகளில் எழுதி வருபவர்.

இவரின் தீபம் இணைய இதழில் ‘கீறல் பட்ட முகங்கள்’, ‘பல்லி அறை’, ஆகிய தளங்களில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. கவிதைகள் தவிர, விமர்சனம், பத்தி எழுத்து, ஓவியம், என்பவற்றிலும் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார். அவருடன் மின்னஞ்சல் ஊடாக ஒர் உரையாடலை நிகழ்த்தினோம்.

01.சித்திராங்கன்:

எங்கள் அடையாளம் இருப்பு தொடர்ந்தும் களவாடப்படுவதாக நான் உணர்கிறேன். இதன் பின்னணியில் உங்களின் சில கவிதைகள் அமைந்துள்ளன. எங்கள் கிராமங்கள் மட்டுமல்லாமல் எங்கள் வாழ்வும் எங்கள் அடையாளமும் அழிக்கப்பட்டு வருகின்றது. இது பற்றிய உங்கள் கருத்து யாது ?

தீபச்செல்வன்:

எங்களுடையவை எல்லாமே களவாடப்பட்டு வருகின்றன. நாம் அறியாதபடி களவாடப்படுகின்றன. அடையாளம் இருப்பு என்பதற்கப்பால் மனிதர்களும் மனங்களும் களவாடப்படுகின்றன. அதிகாரம் எல்லாவற்றையும் நன்கு திட்டமிட்டு பெரியளவில் களவாடிக் கொண்டிருக்கிறது. இனத்தின் இருப்பு கனவு எல்லாவற்றையும் சிதைத்து விடுகிற பசியில் இந்தக் களவு நடைபெறுகிறது. எல்லோரும் அறிந்திருக்க எல்லோரும் சேர்ந்து எல்லாவற்றையும் களவாடுகிறார்கள்.

அதனடியில் எல்லாமே அழிகின்றன. உண்மையில் கிராமம் ஒன்று அழிகிறபோது அங்கான நமதாயிருந்த வாழ்வும் விட்டுவந்த சுவடுகளும் அழிக்கப்படுகின்றன. நாம் கிராமங்களை இழக்கிற வலியில் வாழ்வும் அடையாளமும் அவசரமாக பிடுங்கியியெடுக்கப்படுகிறது. உலகத்திடம் ஆயுதங்களிடம் அதிகாரத்திடம் நம்முடையவை எல்லாமே இரையாகின்றன. அதனை அல்லது அதன் பின்னணிகளை எழுதுகிற பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது. மிகவும் ஆத்திரமாக எழுதவேண்டியிருக்கிறது.

02.சித்திராங்கன்:

இலங்கை அரசு வன்னிநிலப்பரப்பில் நிகழ்த்தி வரும் யுத்தத்தினால் மக்கள் எவ்வாறான அவலங்களை எதிர்கொள்கிறார்கள்.?

தீபச்செல்வன்:

வன்னியில் உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடக்கிறது. தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களை சுமக்கிறார்கள். வன்னி மண்ணை கையப்படுத்த வேண்டும் என்ற மண் வெறியில் அரசு நிற்கிறது. உணவு மருந்து வாழிடம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு அஞ்சியபடி இங்கு ஒரு வாழ்க்கை நடக்கிறது. குழந்தைகள் பெண்கள் மாணவர்கள் என்று மக்கள் எல்லோருமே அரச நோக்கங்களால் பலிவாங்கப்படுகிறார்கள். தமிழ் மக்களின் கனவையும் விடுதலை உணர்வையும் அழிக்கிற திட்டத்துடன் விடாப்பிடியான போரை நடத்துகிறது.

வன்னியில் போர் தருகிற அவலங்களுக்கு முகம் கொடுத்தபடி அலைந்தபடி தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். வாழிடங்களை ஒடுக்கி அவகாசங்களாலும் தடைகளாலும் அரசு மிரட்டிக் கொண்டிருக்கிறது. பெரியளவில் சூழுகிற இந்த அவலங்களிலிருந்து வாழ்வுக்கான போராட்டத்தை மிகவும் துணிவுடன் நம்பிக்கையுடன் மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நிலங்களை அபகரித்துக்கொண்டு ஆயுதங்களால் எச்சரித்துக்கொண்டு அடிமைப்படுத்த முனைகிறது அரசு. வன்னியின் போர்த்துயரம் உலகம் எங்கிலும் வாழுகிற மனிதர்களை கடுமையாக வதைக்கிறது. ஈழத்துக்கு பொறுக்க முடியாத சோகத்தை வலியை வரலாற்று துயரத்தை வன்னியில் பல முனைகளில் பல கோணங்களில் அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப்போர் ஒட்டு மொத்த ஈழமக்களது கனவுகளையும் குறிவைத்து அதனை அழிக்க நடக்கிறது என்பதிலிருந்து இது வன்னியை கடந்து எல்லாரையும் துயர் படுத்துகிற ஒரு பெரிய அவலமாயிருக்கிறது.

03.சித்திராங்கன்:

உங்களின் ‘பல்லி அறை’ தளத்திலுள்ள கவிதைகள் தொடர்பாக ‘மனதுக்குள் கிடந்து நெளிகின்ற அந்த வலிகளை நெருக்கடிகளை வடித்திருக்கிறேன்’ என்றும் ‘அறைக்கு உள்ளும் வெளியும் காணும் மனிதர்கள் பற்றியவை’ என்றும் கூறியிருக்கிறீர்கள். இக்கவிதைகளில் அகம் பேசப்படுகிறது என்று நினைக்கிறேன். அக்கவிதைகள் பற்றிக் கூறுங்கள் ?

தீபச்செல்வன்:

உண்மைதான் மனிதர்களை விலத்திச் செல்லுகிறபோதிருக்கும் புரிதல்களில் மனம் துடித்துக்கொண்டேயிருக்கிறது. எத்தனை மனிதர்கள் அவர்களுக்கு எத்தனை முகங்கள் சிலவேளை வந்து விடுகிற நமது தவறான புரிதல்கள் முரண்பாடுகள் எல்லாமே மனதை அலைத்துக் கொண்டிருக்கிறது. அறைகளில் ஏற்படுகிற மனிதர்களுடனான முரண்பாடுகள் வெளியில் அலைய வைக்கின்றன. வெளியில் எச்சரிக்கின்ற மனிதர்களால் அறைகளில் பதுங்கி வாழுகிற நிர்பந்தம் இரண்டுக்கும் இடையிலாக சொற்களை தவிர எனக்கு எதுவும் ஆறுதலாய்படவில்லை.

போர்க்கவிதைகள் மட்டுமே எழுதுகிறேன் என்று நிறையப்பேர் கூறுகிறார்கள். போர் மனிதர்களை அலையவைக்கிறது. ஆனால் மனிதர்களின் புரிதல்களின் குழப்பங்களால் மனிதர்கள் அகத்தில் துடிக்கிறார்கள். அந்த குழப்பம் புரிதலின்மை பலிவாங்குகிற மனது மற்றவர் பற்றிய கருத்து இவற்றிலிருந்தே போர் உற்பத்தியாகிறது. நமக்கிடையில் எரிந்து கொண்டிருக்கிற இந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடுவது எப்படி என்று முயன்று கொண்டிருக்கிறேன். மனிதர்களாக நாம் வாழுகிறோமா? மனித குணங்கள் மிகவும் ஆபத்தை தருகின்றன. பக்கத்தில் இருப்பபவரை முதலில் புரிவது நேசிப்பதை சாத்தியப்படுத்த வேண்டும். பல்லியறையில் அதற்கான அலைச்சலை எழுத முற்படுகிறேன்.

04.சித்திராங்கன்:

‘செலவு’ என்ற கவிதையும் முக்கியமானது. பலர் தாங்கள் வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதாகத் தெரியவில்லையே. பல வேளைகளில் முகமூடிகளைப் போட்டு தங்களை மூடிவிடுகிறார்களே?

தீபச்செல்வன்:

அது வெளியில் சந்தித்த ஒரு சிறுவனை பற்றி எழுதியது. அவன் எனக்கு கூறிய செலவு விபரம் பற்றி இருக்கிறது. அவனின் வார்ததைகளில் வாழ்வின் பொறுப்பும் சமூக அனுபவமும் இருந்தன. எனினும் அவன் இன்னும் சற்று வளர அவனை உள்ளிளுக்கிற இந்த சமூகத்தின் போக்குகள் குறித்துத்தான் நாம் சிந்திக்க வேண்டும். அவன் பின்னர் பார்க்கிற கணக்குகள் நம்மைப்போலாகி விடுகின்றன. எவ்வளவுதான் அனுபவமும் துயரமும் இருந்தாலும் சிலவேளை பாதை பிழைத்து விடுகிறது. ஆனால் சிறுவர்களது அந்த அனுவபங்கள் குறிப்புகள் எமக்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றன. வாழ்வை உணர்த்துகின்றன.

05.சித்திராங்கன்:

‘கிளிநொச்சி’ என்ற கவிதையில் ‘நானும் பிரகாசும் மெலிந்து விட்டோம்…..’ என்றவாறான மொழிக் கையாளுகை கவிதையாக அல்லாமல் கதையாகக்கூட விரியக்கூடிய அனுபவங்களைக் கொண்டிருக்கிறதே..?

தீபச்செல்வன்:

கிளிநொச்சியின் வாழ்வு அதன் பங்கு அது மீதான கவனம் எல்லாவற்றையும் பேசுதல் மிக முக்கியமானதாக இந்த நகரத்தில் வாழுகிறவன் என்ற அடிப்படையில் எனக்கு இருக்கிறது. சமாதானம் இதற்கு ஏற்படுத்திய கதிகளை அப்படியே எழுத வேண்டும் போலிருந்தது. 2006மற்றும் 2007களில் இருந்த சூழல் மிகவும் துன்பமானது. கிளிநொச்சி சமாதானத்திடமிருந்து போரிற்கு பழக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பதுங்குகுழியிலிருந்து நிறைய நாளுக்கு பிறகு பிரகாஷ் என்ற நண்பனை கண்டு மீளவும் அதற்குள் அடங்க நேர்ந்த பிறகு எழுதியது. அது அவன் மீதான சொற்களாயிருக்க கதையாக விரிவதுபோல உங்களுக்கு படுகிறது.

06.சித்திராங்கன்:

‘ஒரு கமரா ஒளித்துக்கொண்டிருக்கிறது’ கவிதையில் ‘பதுங்குகுழிச் சனங்கள்’ என்ற புதிய சொற்சேர்க்கை வருகிறது. இது வாழ்வனுபவத்தின் வழியானதா? படைப்பனுபவத்தின் வழியானதா?

தீபச்செல்வன்:

எனக்கு நெருக்கமான கமராப்போராளி அன்பழகன் வீரமரணம் எய்தியபொழுது அதை எழுதியிருந்தேன். போராளிகள் சனங்களிடமிருந்துதானே உருவாகிறார்கள். அவர்கள் சனங்களாக களத்தில் முகம் கொடுக்கிறார்கள். அன்பழகனுக்கும் சனங்கள்மீது தீராத பற்றிருந்தது. சனங்கள் வாழுகிற சூழலால் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். நமது சனங்கள் கடந்த முப்பது வருடங்களால் பதுங்குகுழிகளில்தானே வாழுகிறார்கள். அதற்குள் எமது வாழ்வு வடிவமைக்கப்பட்டதாயிருக்கிறது அதற்குள் முடிகிறது திட்டமிடப்படுகிறது. எனவே பதுங்குகுழிச்சனங்களாக நாம் வாழ்து கொண்டே இருக்கிறோம். அதனால்தான் எமது அடையாளம் மிஞ்சியிருக்கிறது.

அந்த குழியிலிருந்து மீள்வதற்கான மனதுடன் போகிறவர்களாக அன்பழகன் போன்ற போராளிகளை கருதுகிறேன். நமது அடையாளத்திற்காக அவன் கமராவையும் துப்பாக்கியையும் எடுத்திருந்தான். அவற்றை அவர்கள் தூக்கியின் பின்னணியில் பதுங்கு குழிச்சனங்களின் வாழ்வுக்கனவு கண்ணீர் போன்றன இருக்கிறது எனவே அது வாழ்வனுபவத்திலிருந்து வந்திருக்கிறது.

07.சித்திராங்கன்:

படைப்புக்களில் வட்டாரத்தன்மை, எம்மை எமது வாழ்வை, எமது அடையாளத்தை, பதிவு செய்வதாக அமைகின்றது. இது வரவேற்கத்தக்கது. ஆனால் உலகு நோக்கிய பொதுமைப்பட்ட படைப்புக்கள் என்று வருகின்றபோது ஓர் அளவுக்கு அப்பால் இவற்றை எடுத்துச் சென்ற படைப்புக்கள் மிகக் குறைவு. இந்த இடைவெளிகளை நாம் எப்படிக் கடக்கலாம்?

தீபச்செல்வன்:

இன்று பொதுமைப்பட்ட மொழியால் எழுதப்பட வேண்டிய தேவையும் இருக்கிறது. வட்டாரத்தன்மையுடன் எழுதுவது பொதுமைக்கு உலகளவிலான கருத்தாடலுக்கு சிக்கலானது என்றில்லை. அங்கு குறித்த வாழ்வின் அடையாளத்தின் தனித்துவம் கொண்டு பேசப்படுகிறது. மொழிபெயர்பில் இது சிக்கலைத்தரலாம். அவற்றுக்கு மாற்றான சொற்கள் வேற்று மொழியில் இல்லாதிருக்கும். தமிழ்நாட்டில் எமது சில வழக்காற்று சொற்களை புரிவதில் சிக்கலிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டு வழக்காறுகளை நாம் ஓரளவு புரிந்து வைத்திருக்கிறோம்.

எனினும் அங்கு அநேகமானவர்கள் பொதுமைப்பட்ட மொழியினை கையாளுகிறார்கள். நமக்கும் அப்படியொரு பாதிப்பு அல்லது எழுத்து பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் வட்டாரம் சார்ந்த எழுத்துக்கள் பொதுமைப்பட்ட எழுத்துக்கள் என்பன சூழல் மனநிலை தேவை முதலியவற்றை பொறுத்து நம்மிடம் இயல்பாக வருகின்றன.

08.சித்திராங்கன்:

‘நொருங்கிக் கிடக்கும் கடதாசிச் சைக்கிள்கள்’ கவிதையில் காணாமற்போன பிள்ளைகளின் அன்னையர் துயர் சொல்லப்படுகிறது. இது ஆஜென்ரீனாவிலும் சரி, இலங்கையிலும் சரி, ஒரு பொதுமைக்குள் வந்து விடுகின்றன. இவ்வாறான படைப்புக்கள் தேசம் கடந்த பிரச்சனைகளாக விரிகின்றன. இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

தீபச்செல்வன்:

அதிகாரங்கள் உலகில் எங்கும் தனக்குரிய வகையில்தான் இயங்குகிறது. அர்ஜன்ரீனாவில் இடம்பெற்ற அந்த செய்தியை வாசிக்கும்பொழுது எங்கள் நகரங்களில் கடத்தப்படுகிற சைக்கிள்கள் பற்றிய ஆதங்கம் ஏற்பட்டது. அங்கு தமது பிள்ளைகளை மீட்க அன்னையர்கள் கடதாசிச் சைக்கிளை வைத்து போராட்டம் நடத்தினாhர்கள். அந்த அன்னையர்களில் பலர் பிறகு காணாமல் போயிருந்தார்கள்.

இதே மாதிரி இங்கும் நிலமையிருக்கிறது. நம்மைப்போலவே அர்ஜன்ரீனா போன்ற நாடுகளில் உள்ளவர்களும் அதிகாரங்களினால் கொண்டு செல்லப்படுகிறார்கள். அச்சுறுத்தப்படுகிற நமது நகரங்களிலும் கடதாசிச் சைக்கிள்களில் செல்கிறவர்கள் சாம்பலாகிப்போகிறார்கள். அந்த பயங்கரத்திலும் நான் வாழுகிறேன். எனது சைக்கிளும் நொருங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் கருதுவதுபோல அதிகாரங்கள் உலகெங்கிலும் நம்மை விரட்டி வருகிறது என்பது பொதுமைப்பட்டதாயிருக்கிறது.

09.சித்திராங்கன்:

இந்தப் போரின் வலியும் மக்களின் துயர் நிறைந்த வாழ்வும் உங்களின் அதிகமான கவிதைகளில் பதிவு பெற்றுள்ளன. ஒரே பொருளில் அமைந்த அனுபவங்களை மீண்டும் மீண்டும் வித்தியாசமாக படைப்பாக்குவதில் உள்ள அனுபவ வெளிகள் பற்றிக் கூறுங்கள் ?

தீபச்செல்வன்:

போர் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. போர் பற்றி எழுதுவதில் தொடர்ந்து எழுவது எனக்கு சிக்கலாக படவில்லை. ஆனால் நிறையப்பேர் இப்படித்தான் கேட்கிறார்கள். அதிலும் முப்பது வருடமாக தொடருகிற போர் பற்றி எழுதியிருக்கிறார்கள் எனவே அதிலிருந்து வித்தியாசமாக எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. கடந்த தசாப்தத்தில் அதாவது ஈழத்தின் மூன்றாவது கட்ட போரின் பொழுது கருணாகரன், நிலாந்தன் போன்றவர்கள் அதனை எழுதியவிதம் என்னை பாதித்தது.

ஆனால் தற்போதைய போர் காலம் சூழல் என்பவற்றிற்கு ஏற்ப குரூரமடைந்திருக்கிறது. எங்கள் இனத்தை அழித்துவிட எங்கள் நகரங்களை கைப்பற்றிவிட அது வகுத்திருக்கிற வியூகங்கள் மிகவும் வித்தியாசமாயிருக்கிறது. முன்னைய போர்களிடமிருந்து அது வேறு வியூகங்களை வகுத்திருக்கிறது. பல முனைகளில் ஒரு நகரத்தை முற்றுகையிடுகிற படைகள் போலவே அவை இருக்கின்றன. இந்தப்போர் மக்களையும் உணர்வுகளையும் நுட்பமாக அழித்துக்கொள்ள முயலுகிறது. அதன் தீவிரத்தை மக்கள் நன்கு உணருகிறார்கள். போரின் கொடுமைகள் என்னை பல முனைகளில் பாதிக்கிறது. அதை எழுதும்போது கடந்தகாலங்களிலிருந்து வேறுபட்டெழுத முடிகிறது.

10.சித்திராங்கன்:

தற்கால யாழ்ப்பாணத்து நெருக்கடி மிகுந்த வாழ்வைப் பதிவு செய்தவற்றுள் முன்னர் ‘முரண்வெளி’ யில் வெளிவந்த (மூன்றாவது மனிதனிலும் வந்தது) ‘யாழ்ப்பாண நாட்குறிப்பு’ எனக்கு முக்கியமாகப் படுகிறது. அது கவிதையோ கதையோ அல்லாத வடிவம். இப்போ உங்களின் கவிதைகளும் முக்கியமானவை. இவற்றை விட உங்கள் வாசிப்பில் வேறு படைப்புக்கள் ஏதாவது அகப்பட்டதா?

தீபச்செல்வன்:

மிகவும் நெருக்கடியான யாழ்நகரத்தின் காலத்தில் ஹரிகரசர்மாவின் யாழ்ப்பாண நாட்குறிப்பு எழுதப்பட்டது. அந்த நெருக்கடி இன்றும் தொடருகிறது. மிக முக்கியமானதொரு பதிவு என்னையும் பாதித்திருந்தது. 2006இல் போர் மீள தொடங்கியபொழுது எழுத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நிறைப்பேர் எழுதுவதை கைவிட்டார்கள். இது ஈழம் எங்கும் நிகழத்தொடங்கின. ஆனால் யாழ்ப்பாணத்தின் மரணவீதிகளை பின் தொடருகிற அச்சுறுத்தல்களை எழுதியவர்களில் சிலரே குறிப்பிடக் கூடியவர்கள். சித்தாந்தன், ஹரிகரசர்மா, துவாரகன், த.அஜந்தகுமார், வினோதரன், த.ஜெயசீலன் போன்றவர்கள் உணர்வுபூர்வமாக எழுதினார்கள்.

இதே நிலமை வன்னியிலும் காணப்பட்டது. அங்கு எழுத்துச் சூழல் சற்று பாதிப்புற்றுள்ளது. வன்னியின் போர் மற்றும் அரசியற் சூழல் குறித்தான எழுத்துகள் பெரியளவில் எழுதப்படவில்லை. கருணாகரன், பொன்காந்தன், த.அகிலன் போன்றவர்களுடன் போராளிகளான ராணிமைந்தன், வெற்றிச்செல்வி, கு.வீரா, செந்தோழன், த.ஜெயசீலன் போன்றவர்கள் எழுதினார்கள்.

கிழக்கிலும் இந்த நிலமை ஏற்பட்டது. அங்கு முன்பிருந்த எழுத்துச் சூழல் சுருங்கத்தொடங்கியது. அலறி, மலர்ச்செல்வன் போன்றவர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

11.சித்திராங்கன்:

இந்த நெருக்கடிகளைப் பதிவு செய்வதில் ஓவியம், புகைப்படம், குறும்படம் ஆகியன பற்றி கூறுவீர்களா ?

தீபச்செல்வன்:

படைப்புத்துறை மிகவும் பாதிப்புற்றிருக்கிறது. எழுத்து சுருங்கியிருந்தாலும் ஓரளவு நெருக்கடிகளை பேச முடிகிறது. கருத்தாடல்களும் இடம்பெறுகிறது. ஆனால் புகைப்படம், குறும்படம் முதலிய துறைகள் சற்று பாதிக்கப்பட்டுள்ளன. ஓவியத்துறையின் வளர்ச்சி திருப்தி தருகிறது. சனாதனன், நிலாந்தன், ஆசை.ராசையா, சஞ்ஜித், கோ.கைலாசநாதன், க.செல்வன், விஜிதன் ரமேஸ் போராளி நவீனன் போன்றவர்களின் ஓவியங்கள் சமகாலத்தின் நெருக்கடிகளை பிரதிபலிக்கிறது. வன்னியில் நெருக்கடிகளை பிரதிபலிக்கிற புகைப்படங்கள் கலைஞர்களாலும் போராளிக்கலைஞர்களாலும் பிடிக்கப்படுகின்றன. இன்று உலகளவில் வன்னிப்புகைப்படங்கள் கவனத்தை ஏற்படுத்துகின்றன.

ஈழத்தின் குறும்படங்கள் நெருக்கடிகளை பிரதிபலிக்கிறது. ஈழத்துக்குறிய தனித்துவமான இயல்புகளுடன் அவை வருகின்றன. தற்போதைய ஈழத்து குறும்படங்களில் முல்லை.யேசுதாசனது படங்கள் முக்கியமானவை. துடுப்பு, ஒரு நாட்க் குறிப்பு, கனவு போன்ற அவரது படங்கள் தனித்துவமான இயல்புடையது. போராளிகளான நிமலா, திலகன், நவநீதன் போன்றவர்களின் படங்களும் சமகால நெருக்கடிகளை பேசுகின்றன. போராளி நிமலாவின் வேலி என்ற பெண்ணியம் சம்பந்தமான குறும்படம் என்னை மிகவும் பாதித்திருந்தது.

ரதிதரனின் வெட்டை, கால்கள் முதலியனவும் மிக அண்மையில் வந்த குறும்படங்கள். அவையும் கவனத்தை பெற்றிருந்தது. ஆனால் மீளவும் போர் காரணமாக இந்தத்துறை மிகவும் பாதிப்புற்றுள்ளது.

12.சித்திராங்கன்:

கவிதைகளில் பன்முகத்தன்மையை எல்லாக் கட்டங்களிலும் உங்களால் பேண முடிகிறதா?

தீபச்செல்வன்:

இப்படித்தான் எழுத வேண்டும் என்று நினைப்பதில்லை. எழுதுகிற சூழல் மனம் நெருக்கடிப்படுகிற நேரம் இடம் என்பவைதான் அவற்றை தீர்மானக்கிறது. என்னால் எழுத முடிகிற மாதிரி நான் எழுதுகிறேன். வலிந்து கொள்ளவதில்லை. மொழியை சரியாக கையாள வேண்டும் என்ற கவனம் இருக்கிறது. கூடுதலாக போர் பற்றி தொடர்ந்து எழுகிறபோது சொற்கள் போர் மூள்கிற இடங்கள் பற்றி அவதானித்து எழுதுகிறேன். எந்நேரமும் அது அச்சுறுத்திக் கொண்டிருக்க அதனிலிருந்து பெறப்படுகிற அனுபவங்களை அப்படியே எழுதிகொண்டிருக்கிறேன்.

13.சித்திராங்கன்:

பின்நவீனத்துவம் எங்கள் சூழலில் எங்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூற ஏற்றதொரு கோட்பாடாக உணர்கிறேன். அல்லது குறியீடுஇ மற்றும் சர்ரியலிச உத்திகள் பயன்படும் என்று நினைக்கிறேன். இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

தீபச்செல்வன்:

பின்நவீனத்துவ எழுத்துக்களை வாசிக்கிற பொழுது அதன் தாக்கம் நமது எழுத்தில் நுழைந்து விட்டது. மனிதர்கள் கருத்துக்களால் தேடப்படுகிற அடக்குமுறைச் சூழலில் பின்நவீனத்துவ எழுத்து மெல்லிய உரையாடலுக்கு இடம் தருகிறது. அதைப்போலகுறீட்டுப் பாங்குகளும் எழுதும்போது வருகின்றன. சாரியலிச உத்திகளும் வருவதை சுட்டிக் காட்டப்படுவதை உணருகிறேன்.

சேலைக்கிளி கூறியதுபோல கோட்பாடுகளுக்காக நாம் கவிதைகளை எழுதுவதில்லை. எழுதுகிற கவிதைகளில் வாழ்வின் கோட்பாடுகளும் சூழ்நிலைகளும் வந்து விடுகின்றன. வாழ்வு பதுங்குவது போல பின் நவீனத்து எழுத்து புழக்கம் ஏற்பட்டிருக்கிறது. எல்லாமே குறியீடுகளாகிவிட்டன. வாழ்வை தீவிரமாக சித்திரிக்குமளவில் எழுத்து பெருத்து நிற்கிறது.

14.சித்திராங்கன்:

தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஈழத்துச் சஞ்சிகைகளின் பங்களிப்புக் குறித்து ஏதாவது கூற முடியுமா ?

தீபச்செல்வன்:

ஏற்கனவே வெளிவந்த சில சஞ்சிகைகள் இன்னும் தம்மை எவ்விதத்திலும் வளர்க்காத விதத்தில் வருவது சங்கடமாயிருக்கிறது. சில சஞ்சிகைகள் தனியாள் அதிகாரத்திள் வருகிறது. அரசினது அச்சுறுத்தல் தணிக்கை என்பனவற்றால் சிலது இடைவெளிகளுடன் வருகின்றன. எனினும் மறுகா, கலைமுகம், வெளிச்சம், பெருவெளி, தாயகம் போன்றவை தொடர்ந்து வருகின்றன. மூன்றாவது மனிதன், சரிநிகர், தெரிதல் போன்றவை நின்று போனது எழுத்தை பாதிக்கிறது. மல்லிகை, ஞானம் என்பவை வளர்ச்சியற்று தமது தனியாள் கொள்கைகளுள் முடங்கியிருக்கின்றன. பெருவெளி போன்றவை முஸ்லீம் தமிழ் எழுத்தை உரையாடல்களை மேற்கொள்ளுகிறது. அனுராதபுரம் வஸீம்அக்கரம் தொடங்கியிருக்கும் படிகள் இதழ் நேர்தியுடன் வருகிறது.

நிறையவற்றில் எழுதப்பட வேண்டிய விடயங்கள் இல்லாதிருக்க அவைகளில் இடைவெளிகள் இருக்கின்றன. அச்சுறுத்தல்கள் அவை மீது தொடருகின்றன. சஞ்சிகைச் சூழலும் சற்று பாதிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

15.சித்திராங்கன்:

இணையத்தள சஞ்சிகைகளின் வரவும், அதில் பங்களிப்புச் செய்யும் வாசகப் பரப்பும் தற்போது அதிகரித்துள்ளது. ஈழத்தை விடப் புலம்பெயர் இலக்கியப் பரப்பில் அவை நன்கு பேசப்படுகின்றன. இவ்வாறான சஞ்சிகைகளின் பங்களிப்புக் குறித்து தாங்கள் கருதுவது யாது ?

தீபச்செல்வன்:

இணையதள சஞ்சிகைள் வாசிப்புப்பரப்பை விரித்திருக்கிறது. உலகம் எங்கிலும் நமது வாசிப்பு மிக எளிதாக நடைபெறுகிறது. ஈழத்து எழுத்துக்களை பொறுத்தவரை புலம்பெயர் சூழலுக்கு உடனுக்குடன் கொண்டு செல்கிறது. இங்கு இணையத்தளங்கள் இணையதள சஞ்சிகைள் என்று எல்லாமே இதை இலகு படுத்துகிறது. தனியாள் தளங்களின் பிரவேசம் முதலியனவும் கருத்தாடல்களை விரிக்கிறது.

ஈழத்தை பொறுத்தவரை இணையதளத்தில் வாசிப்பது என்பது சற்று நெருக்கடியானது. ஆனால் உலக அளவில், புலம்பெயர் சூழலுடன் எழுத்தை கொண்டு செல்ல உதவுகிறது. அச்சுநிலைப்பட்ட சஞ்சிகைகளை வாசிக்கும் போது ஏற்படுகிற வசதி, வாசிப்பு இலகு இணைய சஞ்சிகைகளில் இல்லாதிருக்கின்றன.

16.சித்திராங்கன்:

‘எப்போதாவது வரும் வாகனங்களை விலத்தி விட்டு நெல்மணிகளை கோழிகள் பொறுக்கிக் கொண்டிருக்கின்றன’ இவ்வாறான கட்புல அனுபவங்களை உங்கள் கவிதைகளில் பதிவு செய்யும்போதுஇ அல்லது பதிவு செய்தபின்னர் உங்கள் உணர்வுகள் எவ்வாறானவை?

தீபச்செல்வன்:

மனம் குழம்பாத சூழலில் ஒன்றிவிடத் துடிக்கிறது. நாங்கள் இயற்கையின் அசைவுகளை கண்டு எழுதுகிற சூழல் எங்கே இருக்கிறது. எங்கள் பேனாக்களும் கடதாசிகளும் இன்று கணனிகளும் இணையங்களும் குருதியை தவிர பயங்கரங்களை தவிர அச்ச மூட்டுகிற இரவைதவிர எதை எழுதுகின்றன. காலம் எம்மை இப்படித்தானே எழுதத் தூண்டுகின்றன.

கிளிநொச்சிக்கு பக்கத்திலிருக்கும் முறிப்புக்கிராமம் போரின்றி அச்சுறுத்தலின்றி இருந்த நாட்களில் இங்கு அடிக்கடி சைக்கிளில் சென்று வருவேன். மிகவும் ஆறுதலாயிருக்கும். அது போலான காட்சிகளுடன் அக்கராயன், ஸ்கந்தபுரம், கோணாவில் போன்ற கிராமங்களும் இருந்தன. அந்த வனப்புகனை நாம் இழந்து விட்டோம். அந்த கிராமங்களில் அந்த காட்சிகளை காணுகிறபோது அதனுடன் வாழுகிறபோது அவற்றை எழுதுகிறபோது பெரு நிம்மதி கிடைத்திருந்தது.

17.சித்திராங்கன்:

கலை இலக்கியத்தில் மட்டுமல்லாது எல்லாப்பக்கங்களிலும் ‘பொறுப்புணர்வு’ என்பது இல்லாது போய்விட்டதே?

தீபச்செல்வன்:

பொறுப்புணர்வற்ற தன்மை எங்கும் காணப்படுகிறது. அவரவர் தமது கடமைகளை சரியாக செய்தால் யாருக்கும் அசௌகரியங்கள் ஏற்படாது. இலக்கியத்திலும் பொறுப்பற்ற எழுத்துக்கள் படைப்புக்கள் இருக்கின்றன. பொறுப்பற்ற மனிதர்களை தினமும் சந்திக்கிறோம். பிரச்சினைகளும் குழப்பங்களால் அதனால் தோன்றுகிறது. சிலர் தமது கடமைகளை சரிர செய்கிறதை காணுகிறோம் அதனுடாய் கடப்பதற்கு எவ்வளவு இலகுவாயிருக்கிறது.

18.சித்திராங்கன்:

‘இலங்கையில் ஒரு சிங்களத்தாய் துடித்தழுகிறாள். ஈழத்தில் ஒரு தமிழ்த்தாய் துடித்தழுகிறாள்’ என ‘போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்’ கவிதையில் எழுதியிருக்கிறீர்கள். இந்த அழுகைகள் ஏன் தொடர்கின்றன?

தீபச்செல்வன்:

போர் குழந்தைகளை பறியெடுக்கையில் தாய்மார் தானே அழ வேண்டியிருக்கிறது. அம்மாக்களைத்தான் யுத்தம் கடுமையாக வதைக்கிறது. மாதுமைகவிதையில் வருவதுபோல உலக துயரங்களை அம்மாக்கள் ஒற்றுமையாக சுமக்கின்றனர். ஈழத்தில் சிங்கள இனவாத அரசுகளின் போர் வெறியால் இரண்டு நாடுகளின் அம்மாக்களும் அழுகிறார்கள். இந்த அழுகைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இலங்கை ஈழம் என்ற இரண்டுநாடுகளிடையான போர் என்று கருதுகிறேன். இந்தப்போர் கிராமங்களை சிதைப்பதையும் உடல்களால் எறியப்பட்டிருப்பதையும் தந்துகொண்டிருக்கிறது.

அரசு ஈழத்தில் புகுந்து மண்மீதான பேராசை கொண்டு நிற்கிறது. அது அதற்காக போர் தொடுக்கிறது. ஆனால் நாம் வாழ்வுக்காக போராடுகிறோம். போராளிகளின் தாக்குதல்களின் பின்னால் நிம்மதியை தேடுகிற வாழ்வுக்காக ஏங்குகிற உணர்வு இருக்கிறது. சனங்களின் ஏக்கம் இருக்கிறது. வாழ்வுக்கான பெரும் கனவு இருக்கிறது. எங்களை அடிமையாக்கி எங்கள் வாழ்வை அழித்து வாழ்விடத்தை அழித்து மண்ணை அள்ளுகிற கனவுடன் இலங்கை அரசு இருக்கிறதால் இந்த அழுகை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

19.சித்திராங்கன்:

இந்த யுத்தத்தின் தீவிரத்தை அறிந்தும் கூட எந்த ஒரு நாடும் பாராமுகமாக இருப்பதற்கு ஏதேனும் விசேட காரணங்கள் இருக்கக் கூடுமா?

தீபச்செல்வன்:

கை உயர்ந்த நாடுகள் அல்லது நாட்டு அரசுகள் எல்லாமே தங்களுடைய பொருளாதார நலன்களில் தான் கவனம் செலுத்துகின்றன. மனிதர்கள் அல்லது மனிதநேயம் குறித்து அவைகளுக்கு அக்கறை இல்லை. மக்களுக்கு தேவைப்படுகிற விடுதலை இல்லாமலிருக்க கொளுத்த அதிகார சிந்தனைதான் இருக்கிறது. அவைகள் தமது அரசியல் பொருளாதார நலன்களை விட்டு ஈழத்தமிழர் விடயத்தியில் உன்மையான அகக்றையுடன் செயல்பட தயாரில்லை. அவர்கள் இந்த விடயத்தில் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவதுபோல எங்களுக்கு எதிரான செயல்களில் இலங்கையரசுடன் பின்னிருப்பதுதான் மேலும் துயரத்தை தருகிறது.

இந்தியா ஈழத்தமிழர் விடயத்தில் தலையிட்டு வாழ்வுரிமையை பெற்றுத் தரும் என்று தமிழ் மக்கள் இன்னும் நம்பிக்கொண்ருக்கிறார்கள். ஆனால் எந்த மாற்றமுமற்று அதே கதியில் இந்தியா இலங்கையுடன் கை சேர்த்தபடியிருக்கிறது.

இந்தியா முதல் அமெரிக்க, யப்பான் என்று எல்லா நாடுகளுமே தமிழர்களுக்கு எதிராக இப்படி செயல்படுகின்றன. இந்த நாடுகளின் பயங்கர ஆயுதங்களுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதன் பொருளாதார கணக்குகள் எம்மிடம் தீர்க்கப்படுகின்றன. எனவே அந்த நாடுகளிடம் நாம் என்ன ஆதரவை எதிர்பார்க முடியும்? அவர்கள் எமக்காக என்ன நலனை செய்ய முன்வருவார்கள்? அவர்களது வாழ்வும் கணக்கும் ஈழத்தில் நடக்கிற போரிலேயே தங்கியிருக்கிறது. பலிகொள்ளப்படுகிற எங்களில்தான் அது அபிவிருத்தி செய்யப்படுகிறது. ஈழத்தை அடிமைகொள்ள அலைகிற இலங்கை அரசைப்போல உலகத்தையே இந்த நாடுகள் அடிமை கொள்ள அலைகின்றன.
---------------------------------------------------------------------------------------
24.12.2008
வழிமூலம்: கலகம் இணைய இதழ்.

போரும் வாழ்வும்

வலைப்பதிவு பட்டியல்

உன்னதத்திற்கு வழங்கிய நேர்காணல்

-----------------------------------

நிந்தவூர் ஷிப்லிக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த
உரையாடலை வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தமிழ் பத்திரிகையான தினகரன் தணிக்கை செய்து உரையாடலை வெளியிட்டுள்ளது. இது எமது உரையாடலை திசை திருப்ப நடந்த செயலாகும்.
குறிப்பாக தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்தி வருகின்ற அடக்குமுறைகள் யுத்தத்திற்காக அரசு வெலவழிக்கும் பணங்கள் முஸ்லீம்கள் அப்பாவி சிங்கள மக்கள் முதலியோர் பாதிக்கப்படுவது முதலிவை பற்றி பேசிய பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் கேவலமான நடவடிக்கை. இது மாதிரியான செயல்கள் ஊடக சுகந்திரத்திற்கும் உன்மைக்கும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையாகும்.

தீபச்செல்வன்

சித்திராங்கனுக்கு வழங்கிய நேர்காணல்

தளவாய்சுந்தரத்திற்கு வழங்கிய நேர்காணல்