Wednesday, August 5, 2009

பதுங்கு குழியிலிருந்து கொஞ்சம் சொற்கள்...- தீபச்செல்வன்



நேர்கண்டவர்: கௌதமசித்தார்த்தன்
_________
கவிஞர் தீபச்செல்வன் ஈழக்கவிஞர்களில் முக்கியமானவர். தலைக்குமேல் ஷெல் அடிக்கும் போர்ச்சூழலின் வாழ்வியலை அந்த மண்ணோடு இரத்தமும் சதையுமாக அனுபவித்து பதிவாக்கி வருபவர். போர்க்கால வாழ்வில் அமிழ்ந்திருக்கும் யாழ் மக்களின் அவலமும் அழிவும் அறியப்படாத கொலைகளும் நிறைந்த வாழ்வைஇ இலங்கை அரசு நிகழ்த்தி வரும் மிகப் பெரும் இனஅழிப்புக் கொடூரத்தைஇ இரத்தமும் சதையுமாக தனது கவிதைகளில் வெளிப்படுத்தி வருகிறார். மஹ்மூத் தார்வீஸின் கவிதைகளுக்குப்பின் என்னை வெகுவாக ஈர்த்தவை இவரது கவிதைகள்.

இங்கு தமிழ்ச் சூழலில் வெளிவரும் கவிதைகளில் உள்ள வடிவ அமைப்பிலிருந்து முற்றாக மாறி எனக்குள் கவிதைகள் மீது மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தின. அதற்குக் காரணம் அவரது கவிதைகளில் ரத்தமும் சதையுமாக ஓட்டிக் கொண்டிருக்கும் வாழ்வியல் கூறுகள் என்று சொல்ல வேண்டும். இனால், அவை வெறும் வறட்டுக் கூச்சலாக இல்லாமல் கவித்துவம் நிரம்பியதாக மாறியிருக்கின்றன. நவீன ஈழக்கவிதைகளில் எனக்குள் முழுமையாக உள்ளிறங்கின இவரது கவிதைகள்.

கிளி நொச்சி மண்ணின் வாழ்வு, அதனுடைய மணம், ஆன்மா, அதனுடைய வீழ்ச்சி என்று ஓரு தரிசனப் பார்வையை ‘கிளிநொச்சியின் கதை' கட்டுரையில் இவர் வெளிப்படுத்தியிருக்கிறார். கவிதைகள் தவிர, விமர்சனம், ஓவியம், புகைப்படம் என்பவற்றிலும் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார். 'தீபம்' என்கிற பெயரில் வெளிவரும் இவரது வலைப்பதிவும் ஈழத்தின் அவ்வப்போதைய நெருக்கடியான சூழலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
www.deebam.blogspot.com

ஈழத்தின் தற்போதைய சூழல், போரின் தாக்கம், திறந்த வெளிச் சிறைச்சாலைகளான அகதி முகாம்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமிய மக்கள், சிங்கள மக்கள் ஆகியோரின் மனநிலை, விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வான ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம்’ போன்ற முக்கியத்துவம் கொண்ட விடயங்களுக்கு மிக விரிவாகவும் ஆழமாகவும் பதில் சொல்லியுள்ளார். அவருடன் மின்னஞ்சல் வழியாக ஏடுத்த இந்த நேர்காணல் தற்போதைய ஈழம் பற்றிய குழப்பமான சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக அமைகிறது.

1. இப்போது ஈழச்சூழல் எப்படியிருக்கிறது? முகாம்களில் உள்ள தமிழ் மக்களின் நிலைமை, அவர்களது மனநிலைகள்இ முஸ்லீம் மக்களின் மனநிலைகள், மலையகத் தமிழரின் மனநிலைகள் தற்போதுள்ள சூழலில் எப்படியிருக்கின்றன தங்களது எதிர்காலம் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி விரிவாகச் சொல்லுங்கள்.

ஈழம்., மிகவும் பதற்றமாகவும் எந்த சாத்தியங்களுமற்றிருக்கிறது. எல்லா முனைப்புகளும் சிதைக்கப்பட்டு குருட்டுத்தனமான அரசியலில் இருக்கிறது. இலங்கையின் சிங்கள அரசால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. உலகம் தனது நோக்கங்களுக்காக பலியிட்டிருக்கிறது இப்படி கைவிடப்பட்ட சனங்களினால் ஈழம் நிரம்பியிருக்கிறது. அகதி முகாங்களில் பல்வேறு நெருக்கடிகளை அனுபவித்தபடி மக்கள் இருக்கிறார்கள். எந்த வசதியும் சுகந்திரமும் இல்லாமல் குறுகிய இடத்தில் மிக நெருக்கமாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு தினமும் அடையாளங் காணப்பட்டு போராளிகளும் இளைஞர்களும் தனிமைப்படுத்துவதற்காக வேவ்வேறுவேறு முகாங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். பெரு நிலத்தை சேர்ந்த மக்கள் முழுவதையும் இழந்து, எல்லாவற்றையும் பறிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் இருக்கிறார்கள்.

முஸ்லீம் மக்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சகோதர இனம் என்ற வகையிலும் அவர்களுக்கு தமிழ் மக்கள் மீது பற்றிருக்கிறது. போரிற்கு எதிராக கருத்தை பல முஸ்லீம்கள் கொண்டிருக்கிறார்கள். இலங்கை-ஈழப்போர் வெறுமனே தமிழ் மக்களை மட்டும் பாதிக்கிறதாக இல்லை. இங்கு வாழ்கிற எல்லா மக்களையும் பாதிக்கிறது., சுறண்டுகிறது. முஸ்லீம் மக்களுக்கும் தனித்துவமான மக்கள் நலன்கொண்ட தலைமைத்துவம் இல்லை. அவர்களும் சூன்யமான அரசியல் சூழ்நிலையிலும் அச்சங்களிலும் வாழுகிறார்கள். தமிழ் மக்களைப்போலவே நம்பிக்கைகளற்ற நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மலையக தமிழர்களது காலமும் வாழ்வும் இருண்டுதான் இருக்கிறது. உன்மையில் சிறுபான்மை இனம் என்ற வகையில் தமிழ் முஸ்லீம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். மலையகத் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தால் வருமானத்தை ஈட்டித் தருகிற வணிக பிராணிகளாக நடத்தப்படுகிறார்கள். காலம் காலமாக வருகிற அரசுகள் இப்படித்தான் அவர்களை கையாளுகிறது. அவர்களது ஜனநாயகத் தலைவர்கள் சிலரும் யுத்தத்தை ஆதரிப்பவர்களாகவும் அரசாங்கத்திற்கு துணை போகிறவர்களாகவும் இருக்கிறார்கள். எங்களைப்போலவே அவர்களுக்கும் நெடுங்காலமாக உரிமை மறுக்கப்படுகிறது. ஈழப்போராட்டத்தில் மலையத் தமிழர்களின் பங்கு முக்கியமானது. சிங்கள இனக்கலவரங்களால் அவர்களில் பலர் மலையகத்தை விட்டு பெயர்ந்து வட கிழக்கிற்கு வந்திருக்கிறார்கள். சிங்கள அரசாங்கத்தின் இன ஒடுக்கு முறைக்கு எதிராக அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களும் வட கிழக்கை தமது தாயகமாக கொண்டவர்கள்.

இந்த ஒடுக்கப்படுகிற மக்களிடம் எந்த நம்பிக்கையும் இல்லை. வாழ்வு குறித்த கனவு இருளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது. நம்பிக்கை தரக்கூடிய எச் சூழ்நிலையும் இல்லாமல் சூன்யமான எதிர்காலத்தை முகம் கொள்ள வேண்டியிருக்கிறது. சிறுபான்மை இனங்கள் என்ற வகையில் அடக்கப்படுகின்றன., எதிர்த்து போராட வழிகளற்று அடக்கு முறையில் நசிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இனங்களது நலன்கள் பற்றி சிந்திக்க யாருமில்லை என்றே சொல்லக் கூடியதாக இருக்கிறது.

2. தற்போது செயல்படும் ஈழ ஊடகங்களின் (தமிழ் மற்றும் சிங்களம்) போக்கு குறித்துச் சொல்லுங்கள். தமிழீழவிடுதலைப் போராட்டத்துக்காக குரல் கொடுத்த சிங்கள அறிவுஜீவிகள், கலைஞர்கள், முற்போக்காளர்கள், மற்றும் ஊடகங்களின் இப்போதைய பார்வை என்ன?

சிறந்த ஊடகங்கள் திட்டமிட்ட செயல்களினால் இல்லாமல் போய்விட்டன. இலங்கை அரசாங்கம் ஊடகங்கள்மீது கடுமையான தணிக்கைப் போரை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் தணிக்கை செய்து வழங்குகிற செய்திகளைத்தான் இங்கு மற்ற ஊடகங்களில் வெளியிட முடியும். தனது அதிகாரத்திற்கும் நலனிற்கும் குந்தகமில்லாத செய்திகளை வடிவமைத்து அரசு வெளியிடுகிறது. எதிர்க்க முடியாத சூழ்நிலையில் நிறைய ஊடகங்கள் அவற்றையே சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஈழத்தலிருந்து வருகிற இதழ்கள் பேசப்பட வேண்டிய வாழ்வுரிமை அரசியல் குறித்து பேசாமல் பெரும் இடைவெளியுடன் வருகின்றன.

சிங்கள ஊடகங்களில் சில ஊடகங்கள் துணிச்சலாகவுத் நேர்மையாகவும் செய்திகளை வெளியிட்டு வந்திருக்கின்றன. தமிழ் ஊடகங்களில் இபபடியான நேர்மை துணிச்சல் இருந்தது. அரசாங்கம் நிறை ஊடகங்களை அச்சறுத்தி தாக்கி கட்டுப்படுத்தி சிலவற்றை அழித்துமிருக்கிறது. தமிழீ விடுதலைப் புலிகளும் சில ஊடகங்களை தமக்கு சாதகமாக பயன் படுத்தியிருக்கிறார்கள். அவைகளது செய்திகள் சார்பு நிலை கொண்டிருந்தன. இப்பொழுது அநேகமாக சிங்கள ஊடகங்கள் மௌனித்து விட்டன. அரசாங்கத்தின் வெற்றிகளை கொண்டாடுகிற தமிழர் தாயகத்தின் மீதான போரை ஆதரிக்கிற சிங்கள ஊடகங்கள் இருக்கின்றன. சில சிங்கள ஊடகங்கள் இப்பொழுதும் அரசின் அதிகாரத்தை எதிர்த்து உன்மைகளை வெளியிடுகின்றன. சில தமிழ் ஊடகங்களில் தெளிவான பார்வை இல்லை.

பரபரப்பிற்காகவும் வர்த்தக நோக்கத்திற்ககாவும் செய்திகளை கையாளுகிற ஊடகங்கள் மிக ஆபத்தானவை. அப்படியான ஊடகங்கள் இங்கும் இருக்கின்றன. எனினும் மக்கள் எல்லா உன்மைகளையும் அறிவார்கள். தமிழீ விடுதலைப் பேராட்டத்திற்காக – தமிழ் மக்களின் நியாயமான உரிமைக்காக முன்பு குரல் கொடுத்த சிங்கள அறிவுஜீவிகள், கலைஞர்கள், முற்போக்காளர்கள் இப்பொழுது குரல் கொடுப்பதில்லை. உன்மையில் சிங்கள அரசின் இனப்போரிற்கு எதிராக அவர்களிடமிருந்து ஆதவுக் குரல்கள் ஒலித்திருக்க வேண்டும். அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள். சிங்கள மக்களுக்காக தமிழர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஜே.வி.பி பெண் போராளி மின்னம்பேரியை அரசாங்கம் படுகொலை செய்த போது முதலில் தமிழ் மக்களே எதிர்த்து குரல் கொடுத்தார்கள்.

சிங்கள அரசாங்கத்தின் இன அழிப்பிற்கு அப்பாவிச் சிங்களவர்கள் பொறுப்பல்ல என்ற கருத்து தமிழர்களிடம் இருந்தது. ஆனால் இன்று முழுச் சிங்களவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த தமிழ் மக்களதும் தமிழர் தாயகத்தின்மீதும் இலங்கை அரசு போர் செய்து அவர்களுக்கு வெற்றியை பரிசளித்திருக்கிறது. அப்பாவிச் சிங்கள மக்கள் என்ன செய்யக்கூடும் என்று பார்த்தாலும் இந்த ஊடகவியளார்கள் முற்போக்காளார்கள் கலைஞர்கள் குரல் கொடுக்காதிருந்தது பெரும் ஏமாற்றத்தையும் இனப் பிளவையும் ஏற்படுத்துகிறது.

3. ஈழத்தில் உள்ள தமிழ் மக்களுக்கான நிலத்தையே இன்னும் தராமல் அதிலெல்லாம் சிங்களவர்களின் குடியேற்றம் நடந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை? இந்தச் சூழலில் வெளியிலிருக்கும் அகதிகளை மறுபடியும் திரும்ப அழைக்கும் சிங்கள அரசின் திட்டம் எத்தகைய தன்மை வாய்ந்தது?

கிழக்கில் சிங்களக் குடியேற்றம் நடக்கிறது. அது தொடர்பாக யாரும் எதிர்க்ககாமல் மெல்ல அது நிகழ்த்தப்படுகிறது. குறிப்பாக திருகோணமலையில் சிங்களக் குடியேற்றம் மிக அதிகமாக நடந்து வருகிறது. வவுனியாயிலும் மன்னாரிலும்கூட மெல்ல சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்படவில்லை ஆனால் சிங்கள இராணுவத்தால் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் மக்களின் நிலங்கள் பறிக்கபர்பட்டு பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து இராணுவம் குடியிருக்கிறது. தெல்லிப்பளை, கட்டுவன், காங்கேசன்துறை, பலாலி போன்ற இடங்களிலும் திருகோணமலையில் சம்பூரிலும் மக்களது நிலங்கள் முற்றாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவிர வீதிகளும் நகரங்களும் இராணுவத்தால் குவிக்கப்பட்டு ட்ராங்கிகளுடன் அச்சுறுத்துகின்றன. இப்படி தமிழர் தாயகம் முற்றாக பறிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் சிங்கள குடியேற்றம் செய்ய வேண்டும் என இனவாத சிங்களக் கட்சிகளான ஹெலஉறுமய மற்றும் ஜே.வி.பி வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. வருகிற காலங்களில் வன்னியில் சிங்கள குடியேற்றங்கள் செய்ப்பட திட்டமிடப்பட்டிருக்கின்றன. வன்னி மக்களை இப்போதைக்கு குடியமர்த்துகிற எண்ணம் அரசாங்கத்திடம் இருப்பதாக தெரியவில்லை. வன்னியிலும் பல இடங்களில் காடுகளை வெட்டி முகாங்களை அமைத்து அங்குதான் மக்களை குடியமர்த்துவதாக அரசு சொல்லியிருக்கிறது. அந்த பகுதிகளில் மேலும் படைகளை குவிக்க 50ஆயிரம் படைகளை புதிகாக இராணுவத்தில் சேர்க்கவிருப்பதாக அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்திருக்கிறது.

வன்னி முற்றிலும் இராணுவ மயமாக்கப்பட இருக்கிறது. அங்கு பாரம்பரியப் பன்பாடு, அடையாளங்கள் அழிக்கப்பட்ட பிறகுதான் முற்றிலும் மாற்றப்பட்ட வன்னியில் குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டும் மீள் குடியமர்த்தப்படவிருக்கிறது. தமிழர்களது பகுதிகள் என்ற அடையாளங்களை அழிக்க சிங்கள அரசு திட்டமிட்டிருக்கிறது. சிங்கள இனத்தை கலந்து குடியிருத்துவதன் மூலம் தமிழர் தாயகத்தை இல்லாமல் செய்து இலங்கையை உருவாக்கிற தந்திரத்துடன் சிங்கள அரசு செயல்படுகிறது. 1990 முதல் கையகப்படுத்தப்பட்டு வந்த யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் இன்னும் குடியேற்றம் செய்யப்படவில்லை என்கிறபோது வன்னியில் மீள் குடியேற்றம் பற்றி மிகுந்த ஏமாற்றம் காத்திருப்பதைபோல இருக்கிறது.

4. உங்களைப் போல இந்த மண்ணின் வெடிகுண்டுகளின் வெப்பத்தில் கனன்று கொண்டு எழுதும் படைப்பாளிகள் மற்றும் அவர்களது படைப்புகளின் தன்மைஇ புலம் பெயர்ந்த மண்ணில் இருந்து கொண்டு எழுதும் படைப்பாளிகள் மற்றும் அவர்களது படைப்புகளின் தன்மையில் எங்கு மாறுபடுகிறது? அல்லது எந்த இணைவு கோட்டில் இணைந்து செல்கிறது என்பது பற்றி விரிவான பார்வையைத் தாருங்கள்.

எங்கள் மண்ணில் வருகிற போர் சார்ந்த படைப்பபுகள் நாங்கள் அனுபவிக்கிற துயரங்களை எங்கள் உணர்வுகளை இரத்தமும் சதையுமாக வெளிப்படுத்துகின்றன. 90களில் நிகழ்ந்த போரை கருணாகரன், நிலாந்தன், அமரதாஸ், சித்தாந்தன், எஸ்.போஸ், முல்லைக்கமால், தாமரைச்செல்வி, பொன்.காந்தன் போன்றவர்களுடன் போராளிப்படைப்பாளிகளான தமிழவள், மலைமகள், உலகமங்கை கப்டன் மலரவன், கப்டன் கஸ்தூரி, மேஜர் பாரதி போன்றவர்களும் முக்கியமாக பதிவு செய்திருக்கிறார்கள். தொன்னுறுகளின் பிறகுதான் போர் மிகவும் உக்கிரமாகியதுடன் பல்வேறு துயரமான அனுபவங்களை ஏற்படுத்தின. அதற்கு முன்பு நிகழ்ந்த இன ஒடுக்கு முறைகளை அ.யேசுராசா, வா.ஐ.ச.ஜெயபாலன், நுஃமான், சேரன், சண்முகம்சிவலிங்கம், நிலாந்தன், சி.சிவசேகரம் போன்றவர்கள் எழுதியிருந்தர்கள்.

தற்போது நடைபெற்ற போரின் பதிவுகளை எழுதுவதற்குகுறிய சூழ்நிலை அந்த படைப்பாளிகளுக்க கிடைக்கவில்லை. அவர்கள் நிராயுதப்பட்டபோது படைப்புகள் பதிவுகளையும் இழந்திருக்கிறார்கள். பல முக்கிய படைப்பாளிகள் இந்த அனுபவங்களை இனி எழுத வேண்டியிருக்கிறது. வரலாற்றில் இந்தத் துயரங்களை நாம் சேமித்து வைக்க வேண்டியுள்ளது. கனவுக்காக நாம் இழந்தவை அனுபவித்தவை எல்லாம் மிகவும் துயரமானவை. ஒவ்வொரு படை நடவடிக்கைகளும் பல்வேறு துயரங்களை தந்திருக்கிறது. கடைசி காலத்தில் மக்களுக்கு எல்லாம் எதிராய் மாறி மேலும் மேலும் துக்கத்தை கொடுத்திருக்கின்றன.

எனக்கு இந்தப்போர் குறித்து எழுத வேண்டியிருந்தது. அதற்கான சிறிய வெளி ஒன்று கிடைத்திருந்தது. இந்தப்போர் என்னை பாதித்த விதங்களை நான் எழுத முற்பட்டேன். போருக்குள்ளும் அதற்கு வெளியிலுமாக அதன் தாக்கங்களை முகம் கொள்ள நேர்ந்தது. குறிப்பாக கடுமையான போர் நடைபெறுவதற்கு முன்பு நான் வன்னியிலிருந்து படிப்பிற்காக வெளியேறியிருந்தேன். அம்மாவும் தங்கையும் வன்னியிலிருந்து போர்க்களத்தின் துயரங்களை நொந்து அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இரவுகள் முழுக்க போர் நடக்கிற மண்ணின் துயரங்களை கனவுகளில் அனுபவித்து ஏக்கங்களுடன் அச்சத்துடன் கழிக்க நேர்ந்தது. மிகச் சமீபமாக போர் நடந்து கொண்டிருந்தது. போர் மண்ணில் என்ன நடக்கிறது இப்போது என்ற அந்தரத்துடன் கழிந்தன பொழுதுகள். என்னால் ஓரளவு இதைக் குறித்து பதிய முடிந்திருக்கிறது.

நுட்பமாக இனத்தை அழிக்கிற சிங்கள காலனியப் ஆதிக்கப் போக்கை இங்கு வருகிற படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. நித்தமும் குண்டுகளும் விமானங்களும் கிராமங்களையும் நகரங்களையும் சிதைப்பதையும் அங்கு சிதைகிற நம்பிக்கையையும் கனவுகளையும் குறித்து இந்த படைப்புகள் பேசுகின்றன. தொடக்கத்தில் போரை எதிர்த்து போராடுதல் என்ற குரல் இருந்தபோதும் பிறகு போரின் தாக்கம், போராடுகிற காலநீட்சி, உலகத்தின் முற்றுகை என்பவற்றால் அந்த தன்மை குறைந்துவிட்டது. எழும்ப முடியாத துயரத்தை இவைகள் தமது கையறுநிலையாக கொண்டிருக்கின்றன.

புலம்பெயர் படைப்புக்கள் மண்ணில் நிகழுகிற போர் குறித்து பேசுகின்றன. போர் தொடங்கியபிறகும் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுதும் போர் ஓய்ந்த சின்ன இடை வெளியிலும் அவர்கள் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். தமது உறவுகள் மக்கள் போரில் சிக்குண்டு தவிப்பதை, மண் பற்றி ஏக்கத்தை, கனவை அவர்கள் உணர்பூர்வமாக தொடக்கத்திலிருந்து எழுதி வந்திருக்கிறார்கள். தற்போதுகூட தமிழ்நதி, த.அகிலன், வ.ஐ.ச.ஜெயபாலன், கற்பகம்யசோதரா, மாதுமை போன்றவர்கள் போர் மண்ணின் துயரங்களை பேசுகிறார்கள். எங்கள் மண்ணில் நடக்கிற போர் ஈழ எல்லையைக் கடந்துபோன எல்லாத் தழிழர்களையும் தவிக்க வைத்துக்கொண்டிருக்கிற புள்ளியில் நாங்கள் இணைந்துதான் கிடக்கிறோம்.

5. உலக நவீன இலக்கிய அரங்குகளில் போர் சார்ந்த நாடுகளின் படைப்புகளே முக்கியத்துவம் பெறுகின்றன. நவீன மனிதனின் உளவியல் சிக்கல்களும், உடல் மீது திணிக்கப்படும் வன்முறைகளும், வாழ்வியல் வதைகளின் கூறுகளை பல்வேறு பரிமாணங்களில் முன்வைக்கின்றன. தற்போதைய சூழலில் ஈழத்தின் படைப்பு சார்ந்த மொழி இயங்கும் களத்தைப்பற்றியும் அதன் பரிமாணங்கள் பற்றியும் உங்களது கருத்தைச் சொல்லுங்கள்?

இந்தப் போர் வௌ;வேறு விதமான அனுபவத்தை தந்திருக்கிறது. முன்பு நிகழ்ந்த போரைவிட காலம், போர் கொள்ள வேண்டிய முறை, எதிர்கொள்ள முடியாத நெருக்கடி நவீன ஆயுதங்களின் பழக்கம், முழு மண்ணையும் கையகப்படுத்துகிற மனோபாவம், நிலங்களிலிருந்து சனங்களை துரத்தகிற நடவடிக்கை போன்ற அனுபவங்கள் இந்த படைப்புகளில் விரிந்து செல்கின்றன. அந்த அனுபவங்கள் அனுபவங்களுக்குரிய புதிய மொழி ஒன்றை சாத்தியப்படுத்தியிருக்கிறது. போரின் போது மனிதன்மீது பிரயோகிக்கப்படுகிற வதைகளைப் பற்றி மிக நுட்பமாக இந்த படைப்புக்கள் பேசுகிறது. தமிழ்நதியின் கவிதை ஒன்றில் அகதிமுகாமில் மேற்கொள்ளப்படுகிற பெண்களின் உடல் மீதான வதை கூறப்படுகிறபோது “
விசாரணைக்கென அழைத்துச்செல்லப்படும்/ தேவதைகளின் முன்/ முதலில் நீட்டப்படுவன துப்பாக்கிகள்/ பிறகு..../ உளியாய் பிளந்திறங்கும் குறிகள்! ” என வதைகள் கூறப்படுகின்றன.
மண்ணும் வாழ்வியலும் வதைபடுவதை “தொடுவாய்ப் பிரிப்பில் காய்ந்த கோப்பையில்/ மிதக்கிறது இனத்தின் பெருங்கனவு/ ஒரு பெருமிருகம்/ முள்ளிவாய்க்காலை குடிக்க/ திட்டமிடுகிற குருட்டிரவில்/ அறிவிக்கப்பட்ட வலயத்தின் மேலாக/ பற்கள் விழ பெரும்பாம்பு பறக்கிறது” என என்னால் உணர முடிந்தது. த.அகிலன் தனது தம்பியிடம் துப்பாக்கி திணிக்கப்ட்ட வதைப்பை இப்படி சொல்லியிருக்கிறார்.”உன்னிடம்/ திணிக்கப்பட்ட/ துப்பாக்கிகளை நீ/ எந்தப்பக்கமாகப் பிடிப்பாய்/ வாய் வரை வந்த/ கேள்வியை விழுங்கிக்கொண்டு/ மௌனிக்கிறேன். “ இங்கு மண்மீதும் உடல் மீதும் வாழ்வு மீதும் மேற்கொள்ளப்படுகிற வதைப்புகள் பற்றி அறிய முடிகிறது. இந்த அனுபவங்கள் செய்திகள் அதன் தாக்க நிலையில் காலத்திற்குரிய சூழலுக்குரிய மொழியினை தந்திருக்கிறது. எல்லாத் தரப்பக்களாலும் வதைப்பிற்கு உள்ளாக்கிறதை பேசுகின்றன. உன்மையில் ஈழப் படைப்புக்களின் மூலம் இந்த மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்வை அதன்மீது நிகழ்த்த்பட்ட வதைப்பை காண்பீர்கள் என நினைக்கிறேன்.


6. ஐக்கிய நாடுகள் மன்ற மனித உரிமைக்குழுவில் நடந்த வாக்கெடுப்புகள்இ மற்றும் நிறைவேற்றம் செய்த தீர்மானங்கள் குறித்து மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை என்ன?

இலங்கை அரசின் போர் மனநிலைக்கும், தமிழ் இன அழிப்பிற்கும், அதிகாரத்திற்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. அப்படியொரு அங்கீகாரம் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப் பட்டது. தமிழ் மக்களுக்கு எதிரான போரில் இந்த நாடுகள் ஆயுத அரசியல் உதவிகளை செய்திருக்கின்றன. போரை முதலீடு செய்திருக்கிறது. எமது தேசத்தின் வளங்களை குறிவைத்திருக்கின்றன. மனிதாபிமானத்திற்கு கிடைத்த தோல்வியாகவே மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகிறார்கள். அதிகமான நாடுகள் ஆரவாக வாக்களித்துள்ளன. சில நாடுகள் இலங்கை அரசின் போர்க் குற்றத்திற்கு எதிராக வாக்களித்திருக்கிறது.

மனித உரிமை முற்றிலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது உணரப்பட்டிருக்கிறது. கொடும் இன அழிப்பை நிகழ்த்திவிட்டு அந்த நாடுகள் வழங்கிய போர் அரசியலுக்கான அங்கீகாரத்தை இலங்கை அரசு இங்கு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்களுக்கு மட்டும் இந்த மனித உரிமை-மனிதநேய தோல்வி உரியதல்ல உலகத்தலிருக்கிற ஒடுக்கப்படுகிற எல்லா அப்பாவி மக்களுக்கும் கிடைத்த தோல்வியாக பார்க்ப்படுகிறது. உள் நாட்டில் யுத்த வெற்றியை கொண்டாடி தமிழ் மக்களை கொண்டாடும்படி வற்புறுத்துகிற அரசிற்கு இப்படி அங்கீகாரம் அளிப்பது மக்களிடம் மிகவும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

7. 21 ஆம் நூற்றாண்டின் ஹிரோஸிமா-நாகாசாகியான முள்ளி வாய்க்காலில் நடந்த தீராத வரலாற்றுப்புதிர்களின் ஒருசில கண்ணிகளை விடுவித்துக்காட்ட இயலுமா?

அங்கு மிகவும் கொடுமையாக இனப் படுகொலை நடந்திருக்கிறது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் மக்களும் பேதமின்றி அழிக்கப்ட்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிகளை இலங்கை அரசாங்கம் முற்றாக அழித்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள்மீது கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. அங்கு நடைபெற்ற தாக்குதல்களினால் கடைசி மக்கள் பலர் கொல்லப்பட்டிnருக்கிறார்கள். அந்த மக்களுடன் எல்லா கனவுகளும் அங்கு தகர்ந்து போயிருக்கிறது. முழு நம்பிக்கையும் வரலாறும் கனவும் போராட்டமும் எல்லா முனைப்புகளும் அங்கு புதைக்கப்பட்டிருக்கிறது.

அங்கு எந்த அடையாளங்களையும் கண முடியாது. கடைசித்தாக்குதலில் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. அது பற்றிய சரியான விபரங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் ஈழப்போராட்ட வரலாற்றில் மீள முடியாத எழும்ப முடியாத துயரம் முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்திருக்கிறது. அங்கு கொன்றொழிக்கப்பட்ட மக்களை பெருங் கிடங்குகளில் இராணுவம் புதைத்திருக்கிறது. அந்த இடத்தை யாராலும் நெருங்க முடியாது. அது எவராகிலும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்கப்போவதில்லை.

வருகிறவர்களும் தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய வருவதில்லை என்பது பற்றி எல்லோருக்கும் தெரியும். ஜ.நா செயலாளர் பான்கீமுன், விஜய்நம்பியார் முதலியோர் அந்த இடங்களை ரெலிகப்டரில் பார்த்துவிட்டு மனிதர்கள் வாழ்ந்ததிற்கான அடையாளங்கள் எதுவுமில்லை என்று கூறியிருந்தார்கள். அவர்கள் அப்படி கூறியது மிக உன்மையானது. அங்கு இனப் படுகொலையும் வாழ்வழிப்பும் நடந்து கொண்டிருந்தபோது அதற்கு ஒத்து ஆதரவு வழங்கியவர்களும் அவர்கள்தான். குறிப்பாக சிறியரக ஆயுதங்களை பயன்படுத்தி போரிடலாம் என்ற அங்கீகாரத்தை அய்நா சார்பாக அதன் செயளாலர் பான்கீமுன் வழங்கியிருந்தார்.

யாழ்ப்ணத்தில் செம்மணிப புதைகுழிகளில் யாழ்ப்பாண இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்ட போது எழும்பிய எதிர்ப்பு முள்ளி வாய்க்காலில் பெருந்தொகை மக்கள் புதைக்கப்பட்டபோது ஏற்பட முடியாதிருந்தது. தமீழ விடுதலைப் புலிகள் நினைத்திருந்தால் இலங்கை அரசின் இனப்போரை நிறுத்தி ஓரளவு படுகொலைகளை நிறுத்தயிருக்கலாம். அவர்களது நடவடிக்கைள் சிலதும் இந்த இன அழிப்பிற்கு சாதகமாகிப் போயிருக்கிறது. என்றைக்கும தமிழ் மக்களினால் மறக்க முடியாத வடுவாக இருக்கிறது முள்ளி வாய்க்கால் படுகொலை.

8.எதிர்காலச் சந்ததியினரான குழந்தைகளின் வாழ்நிலை என்ன? அவர்களுக்கான கல்விச்சூழல், அகதி முகாம்களில் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது? யுத்த வலயத்திலிருந்து மீண்ட அவர்களின் உளவியல், அகதி முகாம்களின் முட்கம்பிகளில் பெறும் உருமாற்றம் குறித்து விளக்குங்கள்.

குழந்தைகள் வாழ்வதற்கும் எதிர்காலத்திற்கும் எந்த விதத்திலும் பொருத்தமில்லாத சூழ்நிலையில்தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த குழந்தைகள் காணக்கூடாத யுத்த களங்களையும் அதன் மரணக் கொடுமைகளையும் கண்டவர்கள். மனதில் பெரிய அச்சங்களையும் தாக்கங்களையும் கொண்டிருக்கிறார்கள். கால் கை முதலிய அங்கங்களை இழந்திருக்கிறார்கள். யுத்தம் மற்றும் அதிகாரத்திடம் குழந்தைகள் பலி கொள்ளப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். எத்தனையோ குழந்தைகள் செத்து சிதறுகிறபோதும் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். காயங்களுடன் வலிகளுடன் எஞ்சிய குழந்தைகள் சிறையில் முட்கம்பிகளுக்குள் இப்போது வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

எமது மக்கள் இழந்தவற்றில் ஒன்று மாணவர்களது கல்வியும்தான். நிறைய மாணவர்கள் தமது கல்வியை நீண்ட காலமாக கற்க முடியாத நெருக்கடியில் இருந்தார்கள். பள்ளிக்கூடங்களுடன் புத்தகம், பேனா எல்லாவற்றையும் இழந்திருக்கிறார்கள். மாணவர்கள் எங்கோ ஆசிரியர்கள் எங்கோ பள்ளிக்கூடத்தை இழந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். அகதி முகாங்களில் உள்ள பாடசாலைகள் தற்காலிக முகாம் பாடசாலைகளாக இருக்கின்றன. அவைகளால் இயல்பான சூழ்நிலையுடன் ஆரோக்கியமான கல்வியை வழங்க முடியாதிருக்கிறது.

நல்ல கல்வியை பெற முடியாதிருக்கிறதுடன். நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய உளவியல் மீளவும் அச்சுறுத்தலுக்குள்ளும் முற்றுகைக்குள்ளும் வைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தேவையான சூழல் என்றோ தொலைந்து விட்டது. இந்த உலகத்தினுடைய பழி பாவங்களுடன் அரசியல் போர் தந்திரங்களுடன் எவ்வகையிலும் சம்பந்தமில்லாத குழந்தைகள் தமது உலகத்தை இழந்து தவிக்கின்றார்கள். அவர்கள் முட்கம்பிகளால் முற்றுகைக்குளிருந்து வெளியில் இருக்கிற முற்றுகையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது உள்ளம் மிகவும் பாதிப்டைந்திருக்கிறது.


9. அதே போல போரில் மிக மிக முக்கியத்துவம் பெறும் பெண்களின் வாழ்நிலை என்ன? அவர்களுக்கான வாழ்வுச்சூழல், அகதி முகாம்களில் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது? யுத்த வலயத்திலிருந்தும், தங்களது உடல் மீது திணிக்கப்பட்ட வன்முறையிலிருந்தும் மீண்ட அவர்களின் உளவியல், அகதி முகாம்களின் முட்கம்பிகளில் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள்?

பெண்கள் போரில் பல்வேறு பாதிப்புக்களை அனுபவிக்க நேரிடுகிறது. இடம்பெயர்ந்து நாளுக்கு நாள் பொழுதுக்கு பொழுது அலைச்சல் படுகிறபோது தமது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்டுகிறார்கள். ஆனால் ஈழப் பெண்கள் போராளிகளாக போர்க் களங்களிலும் சமர்களில் ஈடு பட்டிருக்கிறார்கள். இங்கு முன்பு ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளும் ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஈழத்துப் பெண்கள் பாதிப்புகளை வெற்றி கொண்டும் இருக்கிறார்கள். சாதாரண பெண்கள் சொற்களில் அடங்காத துயரத்தை அனுபவித்திருககிறார்கள்.

கட்டாயப் போராட்டம் திணிக்கப்பட்ட போது பெண்கள் அனுபவித்த துயரங்கள் மிகவும் கொடுமையானவை. இடம் பெயர்ந்த இடங்களில் உடல் ரிதியான ஒடுக்கு முறைகள் வற்புறுத்தல்கள் வதைகளால் பெண்கள் பாதிப்படைந்திருககிறார்கள். குடும்பச் சுமைகள் பொறுப்புக்கள் குழந்தைகளை காத்துக்கொள்ளுவது இழப்பு என்பன போரில் பெண்களை மிக கடுமையாக வதைத்திருக்கிறது. மனச் சிதைவுகளை எதிர் கொள்ள வேண்டி நேரிட்டதுடன் மக்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டபோது- சரணடைந்தபோது அவர்கள் மிகவும் கேவலமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அந்த கொடுமைகள் வன்மமான பாலியல் துஷ்பிரயோக நோக்கத்துடன் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன.

அகதி முகாங்கள்கூட ஆண் மனோ பாவங்களால் பெண்களை பாதிக்கிறது. சன நெருக்கடியும் இராணுவங்களால் சூழப்பட்ட நிலையும் பெண்களை பாலியல் ரீதியான ஒடுக்கு முறைக்கு தள்ளுகிறது. முகாங்களிலுள்ள பெண்கள் இராணுவத்தால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக அறிய முடிகிறது. இப்படி எல்லா விதத்திலும் போர் தொடங்கி அலைந்து அதன் பிறகும் பெண்கள் வனமுறைகளையும் வதைப்புக்களையும் எதிர்கொள்ளுகிறார்கள்.

10. விடுதலைப் புலிகள் சிங்கள அரசின் பொருளாதார பலத்தை அழித்தார்கள்; சிங்கள அரசு அதை தன் அண்டைநாடுகளின் உதவியுடன் இட்டு நிரப்பிக் கொண்டது. சிங்கள ராணுவம் புலிகளின் ஆட்பலத்தை அழித்தது. புலிகளால் அதை நிரப்பமுடியவில்லை. கொரில்லா யுத்த தந்திரத்தில் ஆரம்பித்த புலிகள் இயக்கம்இ மரபுவழி ராணுவ யுத்தத்திற்கு மாறியதன் விளைவுதான் இந்த வீழ்ச்சி என்று புலிஆதரவாளர்களால் கருத்து சொல்லப்படுகிறது. போர் மற்றும் போரின் முடிவு குறித்த ஈழ மக்கள் கருத்து என்ன? புலிகள் மீண்டும் எழுந்துவரக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளனவா?

விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார வளங்களை அழித்தபோது அதற்கு பதிலாக சிங்கள அரசு தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருந்தது. உயிரை கொடுத்து அபபடியான தாக்குதல்களை தமீழ விடுதலைப் புலிகள் நடத்தியபோது அதற்கு பதிலாகவும் எங்களிடமிருந்து சனங்களின் உயிர்களை அரசு பறித்தது. திருப்பி மக்களை தாக்கி கொன்றொழிப்பதற்கும் இழப்பை ஈடு செய்வதற்கும் உலக நாடுகள் உதவி செய்தன. போரை தடுத்து நிறுத்தவும் அரசாங்கத்தை பலமிழக்க செய்யவும் அப்படியான தாக்குதல்களை புலிகள் மேற்க் கொண்டனர். அதன் மூலம் அரசாங்கத்தின் போரிடுகிற திறன் முதலீடு என்பன பாதிக்கும் என அவர்கள் கருதினார்கள். ஆனால் மீள மீள போரிற்கு முதலீடுகளை செய்து கொண்டு தமிழ் மக்கள்மீது பெரும்போரை செய்யவும் தொடரவும் உலகம் உதவி வழங்கிக் கொண்டேயிருந்தது.

புலிகளின் ஆட் பலத்தை அவ்வளவு வேகமாக அழித்தார்கள் என சொல்ல முடியாது. புதுக்குயிருப்பு ஆனந்தபுரத்தில் மிகவும் கோழைத்தனமாக இராணுவம் போராளிகளை சுற்றி வளைத்து அவர்கள் மீது நஞ்சு வாயுவை பிரயோகித்து 400 போராளிகளை பரிதாபமாக கொன்றது. புலிகளது போரிடுகிற மனோபாவத்தை அரசாங்கம் தனது புலனாய்வு அறிவை கொண்டு அறிந்து புலிகளுக்கு எதிராக எப்படி போரை முன்னெடுக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தது. அதற்காகவே சமாதானத்தையும் அரசு பாவித்திருக்கிறது. சமாதான காலத்தில் புலிகளும் அரசாங்கத்தைப்போல இராணுவ அரச தன்மைகளில் வளர்சிகளை பெறறிருந்தார்கள. ஆனால் அரசாங்கம் புலிகளை எப்படி அழிக்கலாம் என்பது பற்றி ஆராய்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது. புலிகளுக்குள் பிளவுகளையும் ஏற்படுத்தவும் போரிடுகிற மனநிலைகளை குழப்பவும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சமாதானம் முறிக்கப்பட்டு போர் தொடங்கியபோது புலிகள் போரிடுகிற திறனை மீளவும் கண்டடைய சற்று நாட்கள் எடுத்தன. சமாதானம் ஏற்படுத்திய வாழ்க்கைச் சூழ்நிலையிலிருந்து போரிடுகிற சூழ்நிலைக்கு திரும்ப காலம் எடுத்தது. அவர்கள் கொரில்லா நிலையிலிருந்து மாறி இராணுவ தன்மையை அடைந்திருந்தார்கள். இராணுவம் இராணுவ நிலையுடன் புலிகளின் கொரில்லா நிலையை பெற்று தாக்குதலை தொடுத்திருந்தது. குறுக்கு வழிகள் பலவற்றால்தான் அரசாங்கத்தால் புலிகளை வெல்ல முடிந்தது. இந்த வெற்றியின் பின்னால் நிறைய தந்திரங்கள் உதவிகள் அரசியல்கள் முதலீடுகள் இருக்கின்றன. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு இந்த தோல்வி எதிர்பாராமலே நிகழ்ந்து விட்டது.

போர் என்றும் தீராத வடுக்களை தந்து விட்டு போயிருக்கிறது. கனவை சிதைத்து மக்களை மீள முடியாத குருட்டுத் தனமான அரசியில் தள்ளி விட்டுப் போயிருக்கிறது. போர் முடிந்திருப்பதனால் எஞ்சிய மக்களது உயிர்களையாவது மீள பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. உயிர்களை வைத்துக் கொண்டிருபப்பபதை தவிர எல்லாவற்றையும் அகற்றி விட்டிருக்கிறது. போதும் போதும் என்ற மனநிலையை கொடுத்திருக்கிறது. அப்படி தமிழ் மக்கள் ஒரு நிலையை அடைந்து இனி எழும்பிவிடக் கூடாது என்பதுதான் இலங்கை அரசின் திட்டமுமாயிருக்கிறது. எந்தக் காலத்திலும் தமிழர்கள் போருக்கு வர முடியாத மனநிலையுடன் அரசாங்கம் போரை செய்து முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

புலிகள் மீண்டும் எழுந்து வருவதற்கு சாத்தியம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அநேகமான போராளிகள் இராணுவத்தால் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இராணுவத்திடம் அவர்கள் சரணடைந்திருக்கிறார்கள். நிறையப்பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கிழக்கிலும் வன்னியின் காடுகளிலும் சில பேராளிகள் பதுங்கியிருப்பதாக அவர்கள் சொல்லுகிறார்கள. ஒரு புலியாவது எங்கோ இருக்கிறது என்ற செய்தி அரசாங்கத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிறது. பத்மநாதனும், உருத்திரகுமாரனும், தயா மோகனும், பொட்டுஅம்மானும் இருக்கிறார்கள் என்ற செய்தியும் அவர்களது அறிக்கையும் அரசாங்கததிற்கு தலை வலியை கொடுக்கிறது. ஆனால் எழுந்து வருதல் என்ற பலம் பொருந்திய நிலைக்கு அவர்களால் வர முடியும் என்று கூற முடியாது. அவர்கள் சிலவற்றை திட்டமிட்டு செய்தாலும் அது தமிழ் மக்களுக்கு எந்தளவு சாதகமாயிருக்கும் என்று கூற முடியாது. புலிகளதோ தமிழ் மக்களதோ எந்த முனைப்பையும் அரசாங்கம் அழித்து அகற்றவே முயலுகிறது.

11.விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம் ((Provisional Transnational Government of Tamil Eelam) என்று ஒன்றை வி.உருத்திர குமாரன் தலைமையில் அமைத்திருப்பதாக செ.பத்மநாதன் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து உங்களது மற்றும் தமிழீழ மக்கள் கருத்து என்ன?

இந்தச் செய்தி அரசாங்கத்தை மிகவும் பதற்றத்திற்கு உள்ளாக்குக் கூடியது. ஆனால் தமிழ் மக்கள் இதனால் எதையாவது அடைவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்று அரசாங்கம் மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்படியான அறிவிப்புக்கள் தமிழீழம் பற்றிய முனைப்புகள் என்று மீள தொடங்குகிறபோது அரசாங்கத்தை அது குழப்பத்திற்குள்ளாக்குகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எந்தளவு சாத்தியமானது என்பதைப் பற்றி கூறுவது சிரமமானது. ஆனால் எந்த முனைப்பையும் அரசாங்கம் சிதைக்கவே முயற்சி செய்யும். நிலத்தலிருந்து மக்களும் விடுதலைப் புலிகளுமாக மரணங்களில் வாழ்ந்து கொண்டு போராடி ஈழத்தை கோரிக் கொண்டிருந்தார்கள். அளவிட முடியாதுபோன மக்கள் பலியாகியிருந்தார்கள். அப்படியான சூழ்நிலையில்கூட நியாயபூர்வமாக தமிழ் மக்கள்மீது பரிவு காட்டாத உலகம் எதனை ஏற்றுக் கொள்ளும் அதன் மூலம் என்னத்தை சாதிக்க முடியும் தமிழ் மக்களுக்கு என்ன நலன் கிடைக்கும் என்று பார்க்கிறபோது வெறுமைதான் இருக்கிறது.

நிலத்தலிருந்து போராடுகிறபோதுதான் அந்தப் போராட்டத்திற்கு வலிமையிருக்கும். அதனால்தான் புலிகள் கடைசி வரை தங்களை, அழிக்கிற நிமிடம் போராடினார்கள். ஆனால் தமீழ விடுதலைப் புலிகள் கடைசி நாட்களில் மக்களை நடத்திய விதம் மிகவும் துன்பமானது. இராணுவத்தின் தாக்குதல்களுடன் புலிகளின் மீறல்களையும் மக்கள் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. தமிழீழத்திற்காக சொந்த பிள்ளைகளாலேயே துன்பத்திற்குள்ளாக்கிற நிலையில் அந்தக் கனவின் அடிப்படை சிதைந்து போயிருக்கிறது. சிங்கள அரசு மீள முடியாத அடியை முதுகில் விழுத்தியபோது புலிகள் தாங்க முடியாத கசப்பை மக்களுக்கு வழங்கினார்கள். வன்னி மக்களிடம் படு அப்பட்டமாக அந்த கசப்புணர்வு தெரிகிறது. ஈழப்போராட்டத்திற்காக அவர்கள் பல படிகளை முன்னெடுத்தார்கள்., தியாங்களை செய்தார்கள்., எங்கள் சகோதரர்கள் விரும்பி போராட்டதில் ஈடுபட்டார்கள். முக்கியமாக அவர்கள் தமிழ் மக்களுக்குரிய மனிதநேயத்தையாவது மதித்திருக்க வேண்டும்.

எந்த அதிகாரமும் அக்களை அடக்குவதை உணர முடிகிறது. அரசாங்கத்தின் அடக்கமுறையுடன் புலிகளது கசப்பான அனுபவம் எல்லாவற்றையும் மக்களை நிராகரிக்கச் செய்கிறது. எனினும் சூன்யமான அரசியல் இருளில் எமது மக்கள் நிற்கிறார்கள். அவர்களது வாழ்வுரிமை அவர்களுக்கு தேவைப்படுகிறது. புலிகள் தோல்வியடைந்தாலும் அழிந்தாலும் ஈழம் பற்றிய கனவு எமது மக்களிடம் இருந்து கொண்டேயிருக்கும். அங்கு வாழுகிற அவசியம் தேவைப்படுகிறதை உணருகிற நிலை மீள மீள வந்து கொண்டேயிருக்கும்.
_____________
நன்றி:உன்னதம் ஜூலை இதழ்

போரும் வாழ்வும்

வலைப்பதிவு பட்டியல்

உன்னதத்திற்கு வழங்கிய நேர்காணல்

-----------------------------------

நிந்தவூர் ஷிப்லிக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த
உரையாடலை வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தமிழ் பத்திரிகையான தினகரன் தணிக்கை செய்து உரையாடலை வெளியிட்டுள்ளது. இது எமது உரையாடலை திசை திருப்ப நடந்த செயலாகும்.
குறிப்பாக தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்தி வருகின்ற அடக்குமுறைகள் யுத்தத்திற்காக அரசு வெலவழிக்கும் பணங்கள் முஸ்லீம்கள் அப்பாவி சிங்கள மக்கள் முதலியோர் பாதிக்கப்படுவது முதலிவை பற்றி பேசிய பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் கேவலமான நடவடிக்கை. இது மாதிரியான செயல்கள் ஊடக சுகந்திரத்திற்கும் உன்மைக்கும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையாகும்.

தீபச்செல்வன்

சித்திராங்கனுக்கு வழங்கிய நேர்காணல்

தளவாய்சுந்தரத்திற்கு வழங்கிய நேர்காணல்