Tuesday, October 6, 2009

இரத்தமும் சதையுமான கனவு அனுபவங்கள் காத்திருப்புக்கள் செலவழிப்புக்கள் ஏமாற்றங்கள்

THE WEEK என்ற இதழில் ஈழத் தமிழ் கவிதைகள் பற்றி கட்டுரை ஒன்றை ஆங்கிலத்தில் எழுதுவதற்காக கவிதா முரளிதரன் சில கேள்விகளை அனுப்பி வைத்தார். அவற்றுக்கான பதில்களை இங்கே இணைத்திருக்கிறேன்.

ஈழ தமிழ் கவிதை மிக வளமான ஒரு பின்னணியை கொண்டிருக்கிறது. போர் சூழலிலிருந்து மிகுந்த செறிவான கவிதைகள் வருகின்றன. என்ன காரணம்?


ஈழத்துக் கவிதைககள் கனதியாக அமைந்திருப்பதற்கு காரணம் போரும் அவலமும் நிறைந்த வாழ்வில் ஈழத்தமிழ் மக்கள் வாழ்ந்தததுதான் காரணமாக இருக்கிறது. இந்த நெருக்டி ஏற்பட்ட பொழுதுதான் ஈழத்துக் கவிதைகள் கவனத்தை பெற்றன. மகாவி, நீலாவணன் போன்றவர்களிடமிருந்து நுஃமான், தா.இராமலிங்கம், சண்முகம் சிவலிங்கம் போன்றவர்களிடமிருந்து இன ஓடுக்கு முறை தொடங்கியபோது வாழ்வு பற்றிய ஏக்கமும் எழுச்சியும் போராட்டமும் புலப்படத் தொடங்கியது. பிறகு அ.யேசுராசா, வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், நிலாந்தன் என்றும் பிறகு கருணாகரன், அமரதாஸ், சித்தாந்தன், தனா.விஸ்ணு போன்றவர்களும் முக்கியமான போர்க் கவிதைகளை எழுதியுள்ளனர். போர் எழுத்துக்கள் எவ்வளவு உணரவையும் வலியையும் நிரப்பி வைத்திருக்கிறது என்பதை சொற்களால் சொல்ல முடியாதிருக்கிறது. பேராடும் மக்களின் வாழ்வு நசிந்து கொண்டிருப்பதை தவிப்பை தாகத்தை அவை பேசுகின்றன. பாலஸ்தீனக் கவிஞர்கள் அனுபவித்ததுபோல எங்கள் கவிஞர்களும் பல்வேறு துன்பங்களையும் அச்சுறுத்தல்களையும் அனுபவித்திருக்கிறார்கள்., அனுபவித்து வருகிறார்கள். போர் எல்லாவற்றையும் அழித்து விடுகிறது. உயிரையும் உடமைகளையும் அடியுடன் இல்லாமல் செய்து விடுகிறது. உயிர்களை இரையாக்குகிற போரை நாங்கள் போராட்டமாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். போர்க்களங்களுக்கு பிள்ளைகளை வழியனுப்பி துயருற்ற எங்கள் தாய்மாரகள் மரணத்திற்கு தங்கள் பிள்ளைகளை ஒப்புக் கொடுத்தார்கள்.


அந்த இரத்தமும் சதையுமான கனவு அனுபவங்கள் காத்திருப்புக்கள் செலவழிப்புக்கள் ஏமாற்றங்கள் எல்லாம் துயரத்திலும் தோல்வியிலும் முடிவடைந்ததுதான் போர்க் கவிதைகளில் குரலாக இருக்கின்றன. ஒரு காலத்தில் போர் அளவிடமுடியாத வெற்றிகளை தமிழர்களுக்கு தந்தபோதும் போர்க்களத்தின் பிணங்கள் கவிஞர்களை துயரத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. சிங்கள அரசுகளின் போக்கில் கொலை வெறித்தனம் இருந்து கொண்டேயிருந்தது. தமிழர்களை களங்களிற்கு தூண்டிக் கொண்டேயிருந்தார்கள். இழப்பு, பிரிவு, பதற்றம் நிறைந்த வாழ்வாக ஈழ மக்களின் வாழ்வு நிகழ்ந்து கொண்டிருந்தது. பற்றமும் முடிவற்ற துயரமும் தான் இந்தக் கவிதைகளில் காணக் கிடக்கின்றன. வளம் அல்லது வளர்ச்சி என மகிழ்ச்சி தருகிறதாக இருப்பதில்லை ஈழக்கவிதைகள். வாசிப்பவர்களை பதற்றத்திற்குள்ளாக இறக்கவிடுகிறது. பரந்து மிகவும் செறிவாக பல்வேறு வகையான நெருக்கடிகள் துன்பங்கள் ஏங்கங்கள் எதிர்ப்பகுள் என்பன நிறைந்து கிடக்கின்றன.


போரின் நசிவுகளிலிருந்து எழுதும் போது எப்படி உணருகிறீர்கள்? போர் உங்கள் வார்த்தைகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?


போர் பலவிதமான அவலத்iதான் தந்து கொண்டிருக்கிறது. போருக்குள் பிறந்து அதற்குள் வளர்ந்து எப்பொழுதும் அதன் காட்சிகளையும் பெயர்வுகளையும் சமர்களையும் மரணங்களையும் பார்த்துக்கொண்டிருநNதுன். அதன் தாக்த்தை எப்படி முழுமையாக சொல்ல முடியும்? ஆனால் எழுதத் தொடங்கியபொழுது ஓரளவு அவற்றை சொல்ல முடிகிறது. நான் சிறிய வயதில் ஆக்கிரமித்து நிற்கும் இராணுவத்தை பார்த்திருக்கிறேன். பிறகு கடுமையான போர் நடந்த பிறகு இராணுவத்திற்கு அஞ்சி அஞ்சி ஓடி இடம்பெயர்ந்திருக்கிறேன். கடைசிப் போரில் எனது அம்மா தங்கை சிக்கியிருந்தபோது நான் இராணுவத்தால் மூடப்பட்ட பகுதியிலேயே தங்கியிருந்தேன். இராணுவத்திற்கு அஞ்சி ஓடும் வாழ்வும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் வாழ்வும் எனக்கு வௌவேறான அனுபவங்களை தந்திருக்கின்றன. இரண்டும் ஆக்கிரமிப்பையும் அவலத்தையும் இழப்பையும் பீதியையும் தான் தருகிறது. இரண்டுமே மரண களமாகத்தான் இருந்தது. எது எவ்வளவு அவலம் தருகிறது என்று சொல்ல முடியாது. போர் பிறகு போருக்கு பின்னால் என இந்த ஆக்கிரமிப்புகள் தொடருகின்றன.


போரின் அனுபவங்கள்தான் சொற்களை உருவாக்குகின்றன. அவற்றின் தாக்த்திற்கு ஏற்ப அவை வலியையும் அனுபவத்தையும் தருகின்றன. இராணுவச் சொற்கள் மிந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. படைநடவடிக்கைக்கு கூறப்படுகிற காரணங்கள் திரட்டப்படுகிற படைகள், இராணுவ உதவிகள், ஆயுதங்கள் போன்றவை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கிராங்களும் நகரங்களும் வானமும் காடுகளும் என்று எல்லாமே போருக்கு இரையாகிறபோது அல்லது சிதைகிறபோது அவை பற்றி சொற்கள் எழுகின்றன. போருக்கு வகுக்கபடுகிற விதிகள், போராட்டத்தை நசுக்கிற சூழ்ச்சி எல்லாமே கொடுமையான அனுபவத்தை தருகின்றன. அவற்றுக்குள் நித்தமு; ஏமாற்றமடைந்து ஒடுங்கியிருக்கிற முடியாமை கொண்ட வாழ்வு சொற்களை பிறப்பிக்கின்றன. போரின் தாக்கம் பல்வேறு விதமான வார்த்தைகளை எழுதத் தூண்டுகிறது.


எழுதுவது தேவையற்ற செயல் என்று அம்மா முதல் நண்பர்கள் வரை சொல்வதாக உங்கள் முன்னுரையில் சொல்லியிருக்கிறீர்கள். எழுத்து உங்களுக்கு ஆறுதலை தருகிறதா?


உண்மைதான் நான் எழுதிக்கொண்டிருப்பது எதுவும் அம்மாவுக்கு தெரியாது. ஆனால் தொடக்கத்தில் சிலவற்றை பார்த்துவிட்டு எழுதுவதை நிறுத்திவிடு என்றே கூறினார். ஆபத்தான உலகம், சூழல் குறித்து அம்மா அச்சமைந்திருந்தார். எனது நண்பர்களும் அப்படித்தான் சொல்லூர்கள். இன்று உங்களுக்கு பதிலளிக்கிற நாளிலும்கூட ஒரு நண்பன் எனக்கு தொலைபேசி எடுத்து சொல்லியிருந்தான். என்னால் ஒரு பொழுதும் எழுதுவதை நிறுத்த முடியவில்லை. போரின் தாக்கத்தையும் அதன் அனுபவத்தையும் சேகரிக்க வேண்டும் என்பதுதான் எனது எழுத்தின் நோக்கமாக இருக்கிறது. அடுத்த நிலையைக்கு கொண்டு செல்லுதல் நம்பிக்கையை ஊட்டுதல் என்பன எனக்கு எப்பொழுதும் முடியாமலிருக்கிறது. ஈழ மக்களுக்கு அடுத்த நிலை அல்லது மகிழ்ச்சியான நிலை என்பது ஒரு பொழுதும் ஏற்பட்டதில்லை. மேலும் மேலும் துன்பம் விளைந்து கொண்டிருக்கிறது. அப்படி அவர்கள் எழுதுவதை நிறுத்தி விடு என்று கூறுகிறபோது அவர்களது அன்பை கண்டு அக்கரையால் ஆறதலடைகிறேன். மீளவும் மீளவும் கண்களில் காண்பவை எழுவதற்கே தூண்டுகின்றன. ஆனால் போரின் விளைவுகள் nhடர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றை எழுதவேண்டும் என நினைக்கிறேன். நித்தமும் அவற்றை காண நேரிடுகிறது.


எழுதும்பொழுது ஆறுதல் என்பது மக்களை நெருங்கியிருப்பதைத்தான் உணர்த்துகிறது. கனவிற்காக போராடிய மக்களது குரலாக இருக்க வேண்டும் எ;னபதுதான் நிம்மதியை தருகிறது. எங்கள் மக்கள போராட்டம சுருங்கி புலிகளது போராட்டமாக மாறியபோதும் மக்கள் அவற்றை நிமித்தி வைத்திருந்தார்ள். ஒத்துழைத்தார்கள். கனவின் மக்களாக இருந்தார்கள். நிம்மதியான வாழ்வும் தேசமும் கிடைக்கும் என காத்திருந்து பல தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். கடைசியில் நினைத்துப் பார்க்க முடியாத அவலத்திற்கு ஆளாகியிருக்கிறாhகள். எதுவும் அற்ற நிரந்தர அகதிகளாக மாறிவிட்டார்கள். அவர்கள் இன்றைய நாட்களில் அனுபவிக்கிற துன்பங்கள் பல்வேறு விதமானவை. மிக நுட்பமாக ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். கடைசிப்போரின் தீவிரமான கால கட்டத்தில் வன்னியை விட்டு வெளியேறியிருந்தேன். இப்பொழுது அந்த மக்கள் அனுபவித்து வருகிற வாழ்வுடன் சேர்ந்திருப்பதுடன், அதற்கு முடியுமான சில வேலைகளை செய்கிறபோது ஆறுதலா இருக்கிறது. அத்துடன் மக்களது வாழ்வின், அவலத்தின் சொற்களையும் அதற்குள் இருந்து எழுத முடிகிறது. எல்லாவிதமான அச்சுறுத்தல்களையும் மீறி ஆபத்தையும் மறந்து வாழ தூண்டுகிறது. அம்மாவுக்கு தூரத்தில் நான் இருப்பதால்தான் இப்படி இருக்க முடிகிறது. எதையும் அம்மா அறிந்து கொள்ளவில்லை. இதன் பொழுது பெறுகிற ஆறுதலை எழுதவும் வெளிப்படுத்தவும் முடியவில்லை.


போர் தவிர்த்த பிற கவிதைகளில் கூட (பதுங்கு குழியில் பிறந்த குழந்தை தொகுப்பில்) வன்முறையின் சாயல்கள் இருப்பது போல எனக்கு தோன்றியது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ன காரணம்?


போர்க்கவிதைகள் காதல் கவிதைகள் வன்முறை சார்ந்த கவிதைகள் எனப் பிரித்து பார்க்க முடியாது. உலகம் வன்முறையைத்தான் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் எப்பொழுதும் ஏமாந்துகொண்டிருக்கிறார்கள். வன்முறையால் தவிக்கிறார்கள். மனமுரண்பாடுகளின் விளைவாகத்தான் வன்முறை ஏற்படுகிறது. இங்கு வன்முறை என பிரித்து தனியே எதைக் கருதுகிறீர்கள் என எனக்குப் புரியவில்லை.
----------------------------------------

போரும் வாழ்வும்

வலைப்பதிவு பட்டியல்

உன்னதத்திற்கு வழங்கிய நேர்காணல்

-----------------------------------

நிந்தவூர் ஷிப்லிக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த
உரையாடலை வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தமிழ் பத்திரிகையான தினகரன் தணிக்கை செய்து உரையாடலை வெளியிட்டுள்ளது. இது எமது உரையாடலை திசை திருப்ப நடந்த செயலாகும்.
குறிப்பாக தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்தி வருகின்ற அடக்குமுறைகள் யுத்தத்திற்காக அரசு வெலவழிக்கும் பணங்கள் முஸ்லீம்கள் அப்பாவி சிங்கள மக்கள் முதலியோர் பாதிக்கப்படுவது முதலிவை பற்றி பேசிய பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் கேவலமான நடவடிக்கை. இது மாதிரியான செயல்கள் ஊடக சுகந்திரத்திற்கும் உன்மைக்கும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையாகும்.

தீபச்செல்வன்

சித்திராங்கனுக்கு வழங்கிய நேர்காணல்

தளவாய்சுந்தரத்திற்கு வழங்கிய நேர்காணல்