Saturday, March 13, 2010

எனது இனத்தின் உரிமைக்காக மறுவாழ்வுக்காக போராட வேண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற வேட்பாளர் : சிவஞானம் - சிறிதரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக களமிறங்கும் சிவஞானம் சிறிதரன் ( B A ) கிளிநொச்சியைப் பூர்வீகமாக் கொண்டவர். வன்னியில் நடந்த உக்கிரமான போரில் இறுதி வரை அகப்படடு பல்வேறு துன்பங்களை அனுபவித்த அவர் பின்னர் தடுப்பு முகாமிற்குள் வாழ்ந்தார். கிளிநொச்சி நகரின் மத்தியில் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயம் என்ற பாடசாலை உட்பட கிளிநொச்சியில் உள்ள பல பாடசாலைகளில் அதிபராக கடமையாற்றியவர். செஞ்சிலுவைச் சங்க தொண்டராகவும் அந்த அமைபில் மாவட்ட தலைமைத்துவ பதவியிலும் இருந்து பணியாற்றியவர். முழுக்க முழுக்க போர் சூழலில் அலலது போராட்ட சூழலில் வாழ்ந்தவர். தமிழ் மக்கள் அடுத்த கட்டம் அரசியல் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கருதி நாடாளமன்றத் தேர்தலில் இறங்கியுள்ள அவரை உன்னதம் இதழுக்காக பிரத்தியேகமாக சந்தித்து இந்த நேர்காணலை செய்திருந்தேன்.


தீபச்செல்வன்:

தொடர்ச்சியாக போராட்ட சூழலில் வாழ்ந்து வந்திருக்கின்றீர்கள். தொடர்ந்து போருக்கு இiராகிய வன்னியில் கிளிநொச்சியில் வாழ்ந்திருக்கிறீர்கள். உங்களது வாழ்வுக்கு போர் எத்தகைய அனுபவங்களை தந்திருக்கின்றன. ஏத்தகைய மாற்றங்களை தந்திருக்கின்றன அடுத்த கட்டத்திற்கு செல்லும் நம்பிக்கையை எப்படி உருவாக்கிக் கொண்டிர்கள்?

சிறீதரன் :

எனக்கு அறிவு தெரிந்த காலத்திலிருந்து ஏறத்தாழ மூன்று தசாப்த காலங்கள் முழுமையான போருக்குள்ளேயே வாழ்ந்து வந்திருக்கின்றேன். தமிழ் மக்கள் மீதான பொருளாதாரத்தடைகள், பாரிய இராணுவத்தாக்குதல்கள், தொடர்ச்சியான ஏதிலி வாழ்க்கை, சொத்துக்களை இழந்து அல்லது சூறையாடப்பட்டு நிராதரவான நிலை, உலகமே எங்களை அநாதைகளாக்கிய நிலை, என்று யோசிக்கும் அளவுக்கு போரின் வடு என்னை புடம்போட்டிருக்கிறது.

கண்ணுக்கு முன்னே கண்ட கொடிய போரின் அவலங்கள் உலகில் எங்குமே நடந்திருக்காது என்றுதான் எண்ணுகிறேன். என்றாலும் எமது உரிமைகளுக்காக நாங்கள் பிறந்து வளர்ந்து அள்ளி விளையாடிய மண்ணுக்காக மரபு வழித் தாயகத்திற்காக இறுதி மூச்சு வரை குரல் கொடுக்க வேண்டும் என்ற பேரவா மனதில் உள்ளது.

நாங்கள் மலைபோல் நம்பியிருந்த போராட்டம், நம்பிக்கைத் துரோகங்களாலும் காட்டிக்கொடுப்புக்களாலும் அழிக்கப்பட்டு தமிழினம் தனக்கென ஒரு தலைமைத்துவம் இல்லாது அரசியல் அனாதைகளாக ஒடுங்கி வாழும் இன்றைய சூழலில் எனது இனத்தின் உரிமைக்காக, மறுவாழ்வுக்காக இயன்றவரை பாடுபட வேண்டும் என்ற எண்ணமே எனது அரசியல் பிரவேசமாகியது.

தீபச்செல்வன்:

இறுதிப்போரில் உலகத்தில் நடந்திராத மீறல்களும் கொலைகளும் நடந்திருக்கின்றன. அந்தப் போரில் அகப்பட்டு பல்பேறு துயரங்களை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள். இறுதிப்போரில் நிகழ்ந்த அனுபவங்களை பல்வேறு வகையில் பதிவு செய்து வருகிறார்கள். உங்களது அனுபவங்களை பகிரகூடிய நிலையில் இருக்கிறர்களா? அந்தப் போரையும் அது நிகழ்த்தப்பட்ட முறையையும் எப்படி பொருத்திப் பார்க்க விரும்புகிறீர்கள்?

சிறீதரன் :

மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் வரை தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இறுதிப் போர் என்பது வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. போர் என்பது வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும். இலங்கையின் ஹீறோசிமா, நாகசாகியாக கிளிநெச்சி, முல்லைத்தீவு உள்ளன. 2008ஆம் ஆண்டின் ஆவணி முதல் இலங்கை செஞ்சிலுவைச் சங்க வாகனம் மூலம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான தபால் சேவையை கிளிநொச்சிக் கிளை செய்து வந்தது அதன் செயலாளராக நான் இருந்தேன்.

2009 சனவரி 8ம் திகதி தபால் பொதியுடன் வவுனியா வந்து பின்னர் பாதை மூடப்பபட்டதால் போக
முடியாத சூழலில் வவுனியாவில் தங்கியிருந்தேன். எனது மனைவி தன் வயிற்றிலே 7 மாதங்கள் நிரம்பிய குழந்தைகயுடனும், ஏனைய 4 குழந்தைகளுடனும் யுத்தத்தின் இறுதி வாசல் வரை சென்று பின் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய நலன்புரி முகாமில் வசித்து அங்கிருந்து மே மாதம் வவுனியா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்தார். ஒவ்வொரு தமிழனும் அநுபவித்த மரண வேதனையை எனது குடும்பமும் அநுபவித்தது. தமிழர்களின் உரிமைப்போர் - பயங்கரவாதம் எனும் அர்த்தம் பூசப்பட்டு அவர்கள் வாய்பேசாத ஊமைகளாக்கப்பட்டனர். தமிழர்கள் தமக்கான அதிகாரம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம் பற்றி ஏதும் பேசக்கூடாது என்பதற்காக தமிழர்கள் மீது யுத்தம் ஆக்கிரமிக்கப்பட்டது.

உலகத்தில் எங்குமே நடக்காத ஈவிரக்கமற்ற யுத்தமாகும். கொத்துக்குண்டுகளும் தொடர் செல் மழைகளும் உணவுக்காக, ஒரு நேர கஞ்சிக்காக காத்திருந்த மக்களை அரசு காவுகொணட கோர யுத்தம். இதன் மூலம் அவர்கள் திருப்தி அடைந்தார்கள் என்பதுதான் முக்கிய விடயம்.

தீபச்செல்வன் :

வன்னி மக்கள் பலர் தொடர்ந்தும் தடு;ப்புமுகாமில் தடுக்கப்பட்டுள்ளார்கள். பல மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தடுப்பில் உள்ளார்கள். நீங்கள் தடுப்பு முகாமில் தங்கிருந்த பொழுது ஏற்பட்ட அனுபவங்கள் எப்படி இருக்கின்றன? இன்றைய வாழ்வுச் சூழலில் தடுப்பு முகாம் வாழ்க்கை எத்தகைய நிலையில் இருக்கிறது? முகாமிலிருந்து வெளியில் வரும் பொழுது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?


சிறீதரன் :

வயல்வளம் அள்ளிக்கொடுக்க, கடல்வளம் கைகொடுக்க தென்னை, மா, பலா, பனையுடன் நாங்கள் கையேந்தாது ஈழத்தின் பல பாகங்களில் வாழ்ந்தவர்களுக்கு அரிசியும் கடலுணவும் கொடுத்து செழிப்போடு வாழ்ந்த மக்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு தமது சொத்துக்களை இழந்து அங்கங்களை இழந்து கூடியிருந்தவர்களின் உயிர்களை இழந்து மனம் பேதலித்தவர்களாக தறப்பாள் கொட்டகைகளில் யாரோ கொடுக்கும் அரிசிக்காகவும,; தண்ணிக்காகவும் எந்தநாளும் வரிசையில் காத்து வாழும் வாழ்க்கை. எப்பொழுது தமது சொந்த வீடுகளில் நிம்மதியாக வாழ்வோம் என்ற ஏக்கப்பெருமூச்சு இதுதான் தடுப்பு முகாமில் தொடரும் வாழ்க்கை.

தீபச்செல்வன் :

போர் அல்லது போராட்டச் சூழல் வாழ்ந்துவிட்டு அரசியலுக்குள் பிரவேசிக்கிறர்கள். நாடாளமன்ற அரசியலில் ஏன் இறங்கத் தீர்மானித்திர்கள்? ஈழத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பளராக இறங்குவது எப்படி முக்கியம் பெறுகிறது?

சிறீதரன் :

இன்று தமிழர்களின் அரசியலகூட தலைமைத்துவம் அழிக்கப்பட்டு அவர்கள் அநாதரவாக்கப்படடுள்ளார்கள். கிளிநொச்சி மாவட்டம் கடந்த 30 வருடங்களாக எந்தவொரு பாரரளுமன்ற பிரிதிநிதித்துவத்தையும் கொண்டிருக்கவில்லை. எமது மாவட்ட மக்களினதும் தமிழ் மக்களினது அரசியல் உரிமைக்காக, வாழ்வுரிமைக்காக குரல் கொடுக்கவேண்டிய தேவை இன்று ஒவ்வொரு தமிழ் புத்திஜீவிகளுக்கும் உண்டு. இந்த நிலையில் காலத்தின் தேவையால் எனது அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.

அதிலும் இன்று தமிழர் உரிமைக்காக விடுதலைப்புலிகளின் காலத்திலிருந்து தராகி டி.சிவராம், ஜோசப்பரராசசிங்கம், சட்டவாளர் ரவிராஜ் போன்றோரின் பெரு முயற்சியாலும் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப்புலிகளால் கட்டிணையாக்கப்பட்ட கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பலரின் தியாகமும் இரத்தமும் வேர்வையும் கலந்து உருவாக்கப்பட்டு தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சி என்பதால் அதன் ஊடாக அரசியலில் களமிறங்கினேன்.

தீபச்செல்வன் :

ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளை அழிக்கவும் ஈழத் தமிழ் அரசியல் வலுவை சிதைக்கவும் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை அல்லது சூழ்ச்சிகளை மேற்கொள்வதை பார்க்க முடிகிறது. இந்த எண்ணத்தை இலகுபடுத்தும் வகையில் சில தமிழ் கட்சிகளும் அரசியல் வாதிகளும் செயற்படுகிறார்கள் போலத் தெரிகிறது. இவை எத்தகைய ஆபத்தை ஈழத் தமிழ் அரசியலில் ஏறபடுத்தும் என கருதுகிறீர்கள்?

சிறீதரன் :

தமிழர்களின் பேரம்பேசும் ஆற்றலை இல்லாதொழிப்பதே இன்று தமிழ் மண்ணில் பல கட்சிகள் சுயேட்சை குழுக்களாக களமிறக்கப்பட்டதன் அர்த்தமாகும். தமிழர்கள் சனாதிபதி தேர்தலில் காட்டிய ஒற்றுமையை இத்தேர்தலில் முழுமையாக காட்டவேண்டும். தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைப்பதென்றால் அது ஒற்றுமையின் கீழேயே கிடைக்கும். படிப்படியாக எங்களுடைய இன அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன.

எங்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது. மொழியை மூன்றும் தரத்தில் கூட வைத்து பார்க்;கமாட்டார்கள் போலுள்ளது. மாறி மாறி வரும் சிங்கள அரசுகள் தங்களுக்குள் முரண்படுகள் இருந்தாலும் தமிழர்களை அழிப்பதில் தமிழர்களின் மொழி கலாசாரத்தை சிதைத்து உரிமைக்குரலை நசிக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றன. ஆனால் தமிழர்கள் குறிப்பாக புத்திஜீவிகள் பணத்திற்காக பதவிக்காக இனத்தைக் காட்டிக்கொடுக்கும் இன அடையாளத்தை அழிக்கும் செயற்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதுதான் வேதனை. இந்நேரம் எம் உரிமைகளை வென்றெடுக்க நாம் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். ஒரே அணியின் கீழ் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

தீபச்செல்வன்:

போரின் பிறகு ஈழத்தமிழர்களின் அரசியலில் என்ன ஓட்டம் இருக்கப்போகிறது? கனவுகள் நிறைவோத சூழலில் ஈழப்போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இனி ஈழ அரசியலில் வரும் பிரதிநிதிகள் எத்தகைய பங்கை ஆற்ற வேண்டும்?

சிறீதரன் :

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான ஈழப்போரில் 200000 க்கு மேற்பட்ட மக்களையும் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளையும் இந்த மண்ணில் விதையாக்கியிருக்கிறோம். இன்று தம் பிள்ளைகளுக்கு ஒரு மெழுகுவர்த்தி கொழுத்தி ஆறுதலடையக்கூட அவர்களின் தாய் தந்தை சகோதரங்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அப்பாவி இளைஞர் யுவதிகள் 15000 மேற்பட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள். ஏதுமறியா அந்த அப்பாவிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் மருத்துவர்கள் புனர்வாழ்வு என்ற பெயரில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பல தாய் தந்தையர்களுக்கு தம் பிள்ளைகள் எங்கே இருக்கின்றார்கள் என்பது கூட தெரியாது. அவர்கள் உயிருடன் இருக்ககின்றார்களா? இல்லையா? என்பதைக் கூட அறியமுடியாத சூழல், வன்னியில் முழுச்சொத்துக்களும் சூறையாடப்பட்டுள்ளன. தாங்கள் வசதியாக சந்தோசமாக வாழ்ந்த வீடுகளின் அத்திவாரங்களைக்கூட பாரர்க்கமுடியவில்லை. எல்லாவற்றையும் இழந்து 12 தகரத்திற்குள்ளும் தறப்பாள்களுக்குள்ளும் அடிமைகளாக வெறுமையாக ஒடுங்கிவாழும் வாழ்க்கைதான் கிடைத்திருக்கிறது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி கிழக்கு வவுனியா வடக்கு மன்னாரின் மடுப்பிரதேசம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்களின் துவிச்சக்கர வண்டிகள், மோட்டர் வாகனங்கள், பாரவூர்திகள், சிற்றூர்திகள், பேருந்துகள், உழவு இயந்திரங்கள் இவற்றுக்கு என்ன நடந்தது.

இந்த நிலையில் ஈழ அரசியலில் வரும் பிரதிநிதிகள் எதை முன்வைப்பார்கள் என்பது பிரச்சனைதான். இவ்வளவும் நடந்தும் எந்த தீர்வும் இல்லாமல் பழைய வாழ்க்கைகக்கு போயுள்ள மக்களுக்கு தங்களை தாங்களே நிர்ணயிக்கக்கூடிய சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொடுப்பதே முதல் பணியாகும். புலத்தில் வாழும் தமிழர்களையும் நிலத்தில் வாழும் தமிழர்களையும் இணைத்து மாறிவரும் உலகச்சூழலுக்கேற்ப உலக அரங்கில் எமது உரிமைப்பிரச்சனையை விளக்கி தீர்வு காணப்படவேண்டியது மிக முக்கிமான எமது கடமையாகும்.

தீபச்செல்வன் :

இந்தத் தேர்தலில் உங்களது வாக்குறுதிகள் எப்படி அமைகின்றன? அவை எந்தளவு ஈழ மக்களின் வாழ்வு, கனவு, நம்பிக்கை, ஏக்கம் என்பனவற்றில் பொருந்தி நிற்கின்றன? அவற்றை எப்படி சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

சிறீதரன் :

எமது மக்களுக்கான உரிமைகளுக்காக படிப்படியாக எல்லோரையும் இணைத்து தமிழர்கள் ஓரணியாகி விடுதலைக்காக நிம்மதியான வாழ்வுக்காக எமது அடையாளத்தை காப்பதற்காக குரல் கொடுத்து தீர்வு ஒன்றை விரைவாக அடையவேண்டும். எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் - தலைமைத்துவம் சிதறடிக்கப்பட்டு வெறுப்பு விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு நீதியான வாழ்வுக்கு உதவவேண்டும் என்பதே எனது நோக்கம்.

தீபச்செல்வன் :

ஈழ மக்கள் சார்பாக உன்னதம் இதழ் ஊடாக தமிழக மக்களுடன் வேறு எதையாவது பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா?

சிறீதரன் :

காலம் காலமாக எமது தாயக மக்களுக்காக உயிர்த்தியாகம் கூட செய்தவர்கள் தமிழகமக்கள். எங்கள் மக்களின் உரிமைக்காக உணர்வு ரீதியாக என்றும் குரல் கொடுத்து வருகிறார்கள். நாம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவதற்கு தமிழக மக்களின் பங்கு மிக முக்கியமானது. இந்தியா எங்கள் ஈழப்போராட்டத்தை அழித்தாலும் தமிழக மக்கள் அதற்கு உயிரூட்டுகிறார்கள். எங்களை அரசியல் அநாதைகள் ஆக்கி எந்த தீர்வும் இல்லாமல் செய்து எமது உறுதியான தலைமைத்துவத்தை அழித்து எங்களை தொடர் அகதிகளாக்கி இந்திய மக்களின் நன்கொடை என்ற தகரங்களை வழங்கி எமது மக்களை அவலத்துடன் அழகுபார்க்கிறது இந்திய அரசு. இந்நிலையிலும் தமிழக மக்களின் பங்களிப்பு கிடைத்து வருகிறது.

நேர்காணல் : தீபச்செல்வன்

தட்டச்சு உதவி : ரமணன்

நன்றி : உன்னதம் மார்ச் 2010

போரும் வாழ்வும்

வலைப்பதிவு பட்டியல்

உன்னதத்திற்கு வழங்கிய நேர்காணல்

-----------------------------------

நிந்தவூர் ஷிப்லிக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த
உரையாடலை வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தமிழ் பத்திரிகையான தினகரன் தணிக்கை செய்து உரையாடலை வெளியிட்டுள்ளது. இது எமது உரையாடலை திசை திருப்ப நடந்த செயலாகும்.
குறிப்பாக தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்தி வருகின்ற அடக்குமுறைகள் யுத்தத்திற்காக அரசு வெலவழிக்கும் பணங்கள் முஸ்லீம்கள் அப்பாவி சிங்கள மக்கள் முதலியோர் பாதிக்கப்படுவது முதலிவை பற்றி பேசிய பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் கேவலமான நடவடிக்கை. இது மாதிரியான செயல்கள் ஊடக சுகந்திரத்திற்கும் உன்மைக்கும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையாகும்.

தீபச்செல்வன்

சித்திராங்கனுக்கு வழங்கிய நேர்காணல்

தளவாய்சுந்தரத்திற்கு வழங்கிய நேர்காணல்