Monday, May 17, 2010

கனவிலும் நினைக்க முடியாத அளவுக்கு எங்கள் பாடசாலைச் சூழல் உருக்குலைந்து போயிருந்தது : கிளிநொச்சி மகா வித்தியாலயப் பாடசாலை அதிபர் பங்கயற்செல்வன்


நிர்மூலமான சூழலில் சிதைவடைந்த கட்டிடங்களின் நடுவில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது கிளிநொச்சி மகா வித்தியாலயம். எல்லாவற்றையும் இழந்த பொழுதும் இழக்க முடியாத கல்விக்காய் ஏங்கும் பிள்ளைகளால் இந்தப் பாடசாலை மீண்டும் பொலிவு பெற்று வருகின்றது. தேவைகளும் பிரச்சினைகளும் என்று நாளாந்தம் பல்வேறு நெருக்கடிகளுடன் மனத்தால் சிதைவுகள் காயங்களை உடைய பிள்ளைகளுடன் தனது அடுத்த பயணத்தை தொடங்கியருக்கின்றது இந்தப்பாடசாலை. இந்தப் பாடசாலையின் முதல்வர் திரு பங்கயற்செல்வன், ஆசிரியை சுரமஞ்சரி, பாலேந்திரன், மாணவன் வேலு நிக்ஷன் முதலியவர்களுடன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக இந்த உரையாடலை நடத்தியிருந்தேன்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நடத்திய உரையாடல்

GTN ற்காக தீபச்செல்வன் :

கனவிலும் நினைக்க முடியாதளவுக்கு எங்கள் பாடசாலை உருக்குலைந்து போயிருக்கிறது என்று குறிப்பிடும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் பங்கயற்செல்வன் சிதைவுகளுக்குள்ளான அலுவலகம் ஒன்றுக்குள் இருந்து பேசுகின்றார். கூரையை இழந்து சிதைவின் அடையாளமாக அமைந்திருக்கிறது அவரது அலுவலகம். அருகில் வகுப்புக்கள் நடக்கின்றன. பல பணிகளுடன் அதிபர் பங்கயற்செல்வன் இருந்து கொண்டிருக்க அவரது அலுவலகத்திற்கு சென்று உரையாடத் தொடங்கினேன்.

நாலாம் கட்ட யுத்தத்தின் முன்பான உங்கள் பாடசாலையின் அடைவும் தற்போதைய நிலையும் எப்படி இருக்கிறது?



பங்கயற்செல்வன்:

எங்களுடைய பாடசாலையைப் பொறுத்தவரையில் 80 ஆண்டு வரலாற்றைக் கொண்டது. 80 வருடங்களைக் கொண்ட இந்த வரலாற்றில் சாதனைகளும் பெறுபேறுகளும் என்று வளர்ச்சியான நிலையிலேயே போய்க்கொண்டிருந்தது. இடப்பெயர்வுக்கு முன்னரான காலம் பெற்காலம் என்று நாங்கள் கருதுகிறோம். கிளிநொச்சி மகா வித்தியாலயம் ஒரு தடைவ அல்ல பல தடவைகள் இடப்பெயர்வைச் சந்தித்திருக்கிறது. கிளிநொச்சி நகரின் மத்தியில் இந்தப் பாடசாலை இருப்பதன் காரணமாக கிளிநொச்சி எந்த சந்தர்ப்பத்தில் போருக்கு முகம் கொடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் இந்தப் பாடசாலை இடம்பெயருகின்ற ஒரு நிலமைக்கு தள்ளப்பட்டது. ஒவ்வொரு தடவையும் நாங்கள் இடம்பெயர்ந்து போய் மீண்டும் இந்த வளாகத்திற்கு திரும்பி வரும்பொழுது வெறும் கற்குவியல்களாக இருந்து பின்னர் கட்டி எழுப்பப்ட்ட வரலாறாக இருக்கின்றது.

எங்கள் பாடசாலையில் நாங்கள் இடம்பெயருவதற்கு முற்பட்ட காலம் பெறுபேறுகளிலும் சரி சாதனைகளிலும் சரி பௌதீக வளங்களிலும் நாங்கள் மிக உன்னதமாக இருந்த காலமாக இருந்தது. கா.பொ.த உயர்தர வகுப்புக்களில் மாணவர்கள் சாதாரணமாக 3 ஏ பெறுபெறு எடுக்கின்ற நிலமையும் கா.பொ.த சாதாரண தரத்திலே மாணவர்கள் சாதாரணமாக 10 ஏ பெறுபேறு எடுக்கின்ற நிலமையும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையிலே 25 முதல் 30 வரையான மாணவர்கள் சித்தி எய்துகின்ற நிலமையும் சாதாரணமாக எங்கள் பாடசாலையில் இருந்தது.

எங்களது பாடசாலையில் சாதாரணமான இலகுவான சூழ்நிலையில் மாணவர்கள் பெறுபேற்றைப் பெறுகின்ற அளவுக்கு நிலமைகள் சாதகமாய் இருந்தன. அப்படி ஒரு நிலையை ஆசிரியர்களும் மாணவர்களும் எங்களுடைய சமூகமும் தோற்றுவித்திருந்தது. கல்வியுடன் மட்டுமன்றி கல்வியுடன் இணைந்த புறநிகழ்வுகளிலும் எங்களது பாடசாலை அகில இலங்கை ரீதியாக சாதனைகளை படைத்து நின்றது கடந்த இடப்பெயர்வின் முன்னர். தமிழ்த்தினப்போட்டிகளாயினும் சரி, விளையாட்டுப்போட்டிகளாயினும் சரி நாடளாவிய ரீதியிலான எல்லாப் போட்டிகளிலுமே எங்களது பாடசாலை தனக்கென தனியான அடையாளங்களை பதித்து நின்ற காலம்.

மாணவர்கள் ஏறத்தாழ 2400க்கு மேற்பட்டவர்களும் ஆசிரியர்கள் 74 வரையிலான ஆசிரியர்களும் இடப்பெயர்வின் முன்னர் கல்வி கற்று வந்தார்கள். கல்வி கற்பித்து கொண்டு வந்தார்கள். ஆனால் இடப்பெயர்வு எங்கள் பாடசாலையின் சகல நிலமைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. 2008ஆம் ஆண்டு இரண்டாம் தவனையுடன் எங்கள் பாடசாலை இடம்பெயர்ந்தது. 2008 மூன்றாம் தவணையை தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் நாங்கள் வைத்து மாலைநேரப் பாடசாலையாக இயக்கினோம்.



2009 ஜனவரி தர்மபுரம் மாகா வித்தியாலயத்தில் வைத்து தனித்துவமாக இயக்குவதற்கு முடிவெடுத்தோம். ஆனால் அப்படி இயங்க முடியவில்லை. அன்று முதல் இடம்பெயர்ந்த எமது பாடசாலை தன் செயற்பாடுகளை முழுமையாக இழந்தது. பின்னர் நாங்கள் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து முகாங்களுக்கு சென்று மீண்டும் 2010 ஜனவரி மாதம் எங்களது பாடசாலைக்கு தரும்பிய பொழுது எங்களது பாடசாலை வளாகம் இப்படி இருக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைக்க முடியாத அளவுககு எங்கள் சூழல் உருக்குலைந்து போயிருந்தது.

முதல் முதல் கட்டப்பட்டிருந்த 2 மாடி கட்டிடம் சுக்குநூறாக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்தது. எந்தக் கட்டிடங்களுக்குமே கூரைகள் இருக்கவில்லை. ஆரம்பப் பிரிவு கட்டிடங்களில் ஒரு கட்டிடம்கூட இல்லாத நிலையில் அழிந்து போயிருந்தது. பாடசாலை வளாகத்தில் கால் வைக்க முடியாதளவுக்கு பாடசாலை யுத்தத்தால் மிக பாதிப்படைந்து போயிருந்தது. இப்பொழுது பாடசாலை தொடங்கி நான்கு மாதங்கள் ஆகின்றன. இதற்குள் பாடசாலைக்குள் நடமாடக்கூடியளவிற்கு சூழலை உருவாக்கியிருக்கிறோம். மாணவர்களுடைய எண்ணிக்கையுடன் ஒப்பிடுகின்ற பொழுது கட்டிடங்கள் போதாத நிலையில் இருக்கின்றன. 50 வீத கட்டிட வசதிகூட இல்லாத நிலையில் உள்ளது.



GTN ற்காக தீபச்செல்வன் :

போரினால் உங்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என்ன தாக்கங்களை எதர்ககொண்டுள்ளார்கள்? ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வகுப்பறை செயற்பாடுகள் எப்படி உள்ளன? அது தொடர்பான ஆய்வுகள் எதையாவது செய்திருக்கிறீர்களா?

பங்கயற்செல்வன்:

பாடசாலையில் மாணவர்கள் ஆசிரியர்கள், இறந்துபோனது பாதிக்கப்பட்டது என்ற பார்க்கிற பொழுது நாங்கள் அதிளவு பாதிப்பிற்கு உள்ளாக்கியிருக்கிறோம். மூன்று ஆசிரியர்களும் இரண்டு பணியாளர்கள் இறந்திருக்கிறார்கள். இரண்டு ஆசிரியர்கள் தமது துணைகளை இழந்ததோடு, நான்கு ஆசிரியர்கள் தமது குழந்தைகளை இழந்திருக்கிறார்கள். நாங்கள் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் ஏறத்தாழ 60க்கு மேற்பட்ட மாணவர்கள் போரில் இறந்து போயிருக்கிறார்கள். இது எங்களுக்கு மிக வேதனை தருகின்ற விடயமாகும். கண்பார்வை இழந்த மாணவர்களும் பால் ஒன்றை இழந்த மாணவனும் இருக்கிறார். அதைவிட பலர் காயங்களுடன் இருக்கின்றார்கள்.

ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் மிக நீண்ட காலமாக போருக்கு முகம் கொடுத்தால் எறிகனை ஷெல் பங்கர் வாழ்க்கை விமானக் குண்டு வீச்சின் பாதிப்பில் கூடுதலாக அவர்கள் பாதிக்கப்பட்டதன் காரணமாக இயல்பான கல்வியை அவர்கள் வழங்குவதிலும் மாணவர்கள் அதை பெற்றுக்கொள்வதிலும் இடர்களை நாங்கள் எதிர் கொள்கனிறோம். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாதிப்புகளுக்கு உள்ளானதை நாங்கள் வகுப்பறைகளில் பார்க்க கூடியதாக உள்ளது. அது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்ற சூழலில் ஆசிரியர்கள் இன்னும் நிரந்தரமாக கிளிநொச்சிக்கு திரும்பவில்லை. 30 வீதமான ஆசிரியர்கள் மட்டும் தமது சொந்த இடத்தில் குடியேற வந்திருக்கிறார்கள். ஏனைய ஆசிரியர்கள் வவுனியாவில் இருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாளாந்தம் வந்து செல்கின்றார்கள். அவர்களிடம் முழுமையான செயற்பாடுகளை நாங்கள் எதிர்பார்க்க முடியாத சூழ் நிலை இருக்கின்றது.

ஆனால் ஆசிரியர்களின் மாணவர்களின் தளராத மனம் மாணவர்களுடைய கல்வியை வளம் படுத்தும் என்று நான் நினைக்கின்றேன். முன்பு இந்த ஆசிரியர்கள்தான் எங்கள் பாடசாலையின் உச்ச கட்ட வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள். ஆனால் ஆசிரியர்கள் போரின் தாக்கத்திற்கு உற்பட்டதன் காரணமாக அவர்களிடம் இருந்து முழுமையான செயற்பாட்டை எதிர்பார்க்க முடியாமல் உள்ளது.

GTN ற்காக தீபச்செல்வன் :

இன்றைய சூழலில் பாடசாலையில் என்ன தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன?

பங்கயற்செல்வன்:

இந்தப்பாடசாலையைப்பொறுத்தவரையில் தேவைகளைத்தான் பட்டியல்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன. நிறைவுகள் என்று பார்க்கும்பொழுது அதன் பட்டியல் மிகச் சிறியதாக உள்ளது. பௌPதக ரீதியான தேவைகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் 50 வீதமான தேவையைக்கூட எட்டவில்லை. இரண்டு கட்டிடங்கள் மட்டும் கூரை போடப்பட்டுள்ளது. அதில் ஒன்பது வகுப்பறைகள் இருக்கின்றன. ஒரு மண்டபம் இருக்கின்றது. அந்த மண்டபத்தில் நான்கு வகுப்பறைகள் வைக்ககூடிய சூழ்நிலை இருக்கிறது. ஏறத்தாழ 35 வகுப்பறைகள் தேவையான சூழ்நிலையில் 13 வகுப்பறைகள் மட்டுமே இருக்கின்றன. அதிபர் அலுவலகத்தை நான் கூரையில்லாத ஒரு அலுவலகத்திலேதான் வைத்திருக்கிறேன். மழை பெய்தால் மழைநீர் முழுவதும் அலுவலகத்துக்கும் வரும். மாணவர்கள் படிக்ககூடிய வகுப்பறையை வீணாக்க கூடாது என்ற படியினால்தான் அந்த அலுவலகத்தை கூரையில்லாத மண்டபத்தில் வைத்திருக்கிறேன்.

கட்டிடங்கள் நிறைய தேவைப்படுகின்றன. திருத்தக்கூடிய கட்டிடங்களை திருத்த எங்களிடம் நிதி இல்லை. யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் யுனொப்ஸ் நிறுவனம் அமைத்து தந்த நான்கு கட்டிடங்கள் வெறும் அத்திவாரத்துடனும் கம்பிகளுடனும் காட்சி தருகின்றன. இவற்றை சம்பந்தப்பட்டவர்கள் செய்து தர வேண்டும். தளபாடங்கள் பெரும் பற்றாக்குறையாக உள்ளன. எங்களுடைய தளபாடங்களை தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் கொண்டுபோய் வைத்தோம் அங்கு முழுமையான தளபாடங்கள் இருப்பதாக அவதானிக்க முடியி;;ல்லை. அத்தோடு பொருத்தமற்ற தளவாடங்களில் மாணவர்கள் இருக்கின்ற நிலமையும் காணப்படுகின்றது.




GTN ற்காக தீபச்செல்வன் :

மீண்டும் பாடசாலையை கட்டி எழுப்புவதில் முக்கியமாக யாருடைய பங்கை எதிர்பார்க்கிறீர்கள்?

பங்கயற்செல்வன்:

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஆயிரம் ஆயிரம் மாணவர்கள் உலகம் எங்கும் வியாபித்து இருக்கின்றார்கள். அவர்களிடம் உதவுகின்ற வசதி வாய்ப்புக்கள் இருக்கின்றன. அவர்கள் கல்வி கற்ற இந்தப் பாடசாலையை அவர்கள் நினைக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். அவர்களால் முடிந்த உதவிகளை செய்து இந்தப் பாடசாலையை கட்டி எழுப்ப உத வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

தங்கள் கடினமான உழைப்பில் பெறும் நிதியில் சிறுதொகையை இந்தப் பாடசாலையின் அபிவிருத்திக்கு வழங்கினால் பொரும் உதவியாக இருக்கும். அவர்கள் இதற்காக சிறு சிறு குழுக்களாக சங்கங்களாக இயங்கி இந்த சிறிய சிறிய உதவியை செய்யலாம் என நான்; எதிர்பார்க்கிறேன். அது இந்தப்பாடசாலையை பாரிய அளவில் வளர்க்க உதவும் என்று நம்புகிறேன். எமது பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று மிக நலிவடைந்து போயிருப்பதால் இன்று புலம்பெயர்ந்த எமது பாடசாலையின் பிள்ளைகளிடமும் உறவுகளிடமும் உதவிகளை எதிர்பார்கிறேன்.


GTN ற்காக தீபச்செல்வன் :

காலில் காயமடைந்த ஆசிரியை ஒருவர் ஊன்று கோல்களின் உதவியுடன் வகுப்பறைக்கு சென்று கொண்டிருக்கிறார். உயர்தர மாணவர்கள் ஆர்வமாக இருந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் முகங்கள் மௌனமாக பல செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. ஆரம்ப வகுப்பு ஒன்றில் ஆசிரியை சுரமஞ்சரி பாலேந்திரன் மாணவர்களுடன் கல்விச் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

போரின் பிறகு வகுப்பறையில் சந்திக்கின்ற மாவர்களின் மனநிலை மற்றும் கல்வி நிலை எப்படி இருக்கின்றது. முன்னேற்றகரமான சூழலை உருவாக்க முடிகிறதா?



சுரமஞ்சரி பாலேந்திரன் :

இந்தப்பாடசாலையில் நான் ஒரு ஆரம்பரிவு ஆசிரியராக இருக்கின்றேன். சில விடயங்களை மறக்க வேண்டும். சில விடயங்கள் மறக்க முடியாதவை. சில இன்பமான காரியங்கள், மகிழ்ச்சிகரமான விடயங்கள், கவர்ச்சிகரமானவற்றை நினைவுக்கு கொண்டு வரவேண்டியுள்ளது. ஆரம்ப காலத்தில் மாணவர்கள் மிக விரும்பும் ஒரு சூழலில்தான் இந்த மாணவர்கள் கல்வி கற்று வந்தார்கள். தற்போது போரினால் நாங்கள் மிகுந்த பாதிப்புக்களை எங்களுக்குள்ளே தாங்கிக்கொண்டிருக்கின்றோம். ஆரம்ப பிரிவைச் சேர்ந்த இந்த சிறுவயது மாணவர்கள் பல சூழலில் இருந்து வருகின்றார்கள்.

தாய் தந்தையரை, சகோதரர்களை இழந்திருக்கிறார்கள். பழைய மாணவர்களாக இவர்களைப் பார்த்து கற்பிக்க முடியாதுள்ளது. தவிர அவர்களுக்கு இயல்பாக கல்வி கற்கக்கூடிய இடவசதிகள் மிகப் பற்றாக்குறையாக உள்ளன. 4 வகுப்புக்கள் இருக்க வேண்டிய மண்டபத்தில் 8 வகுப்புக்களை நடத்துகிறோம். இப்படி பல பிரச்சினைகளை எதிர் நோக்கியவர்களாக மாணவர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு மகிழ்வு ஊட்டுகிற கவர்ச்சிகரமான கல்வியை வழங்குவதில் இடநெருக்கடி பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.



முன்பு நாங்கள் பெற்றோர்களின் உதவியுடன் ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு அடைக்கப்பட்ட வகுப்பறை ஒன்றை அமைத்திருந்தோம். அந்த வகுப்பறையில் இரண்டு மாதங்கள் மட்டுமே அந்த அடைக்கப்பட்ட வகுப்பறையில் கல்விச் செயற்பாடுகளல் ஈடுபட்டோம். மிக மகிழ்வுகரமாக கல்வி கற்பித்தோம். அவ்வளவு சொத்துக்களும் அழிக்கப்ட்ட நிலையிலே மீள இங்கு வந்திருக்கிறோம்.

மாணவர்கள் தங்கள் வலிகளை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தன்னை இருட்டு மயமாக்கி சோகத்தில் இருப்பதை காண்கின்றோம். அவர்களுக்கு ஒரு நெகிழ்ச்சித் தன்மையான கல்வி கற்பிக்கும் முறைதான் தேவைக்கபடுகின்றது. அதற்குரிய வளங்கள் எங்களுக்கு தேவைப்படுகின்றன. அவர்களுக்கு ஒரு சிறுவர் விளையாட்டு பூங்கா இருந்தால் அவர்கள் சோகங்களை மறக்கும் நிமிடங்களை உருவாக்க முடியும். ஆனால் பல விடயங்களுக்கு விடை காண முடியாதவர்களாக எங்கள் நாளாந்த செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.


GTN ற்காக தீபச்செல்வன் :

பாடசாலை வளாகத்தில் ஒற்றைக்காலை இழந்துபோன வேலு நிக்ஷன் என்ற மாணவன் ஊன்று கோல்களின் உதவியுடன் வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தான். எட்டாம் வகுப்பில் படிக்கும் நிக்ஷன் மிக வேகமாக பேசுகின்றான். அவனிடம் ஏதோ ஒரு ஆர்வமும் துடிப்பும் இருக்கிறது. தான் காலை இழந்து போன சம்பவத்தை விபரிக்கும் பொழுது அவனது முகத்தில் அதிர்ச்சியும் வலியும் தெரிகின்றன.

உங்கள் கல்வி நடவடிக்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது? பாடசாலைக்கு வருவதில் எதும் சிரமங்கள் நேர்கின்றனவா?



வேலு நிக்ஷன்

என்னை அம்மா அல்லது அப்பாதான் பாடசாலைக்கு கொண்டு வந்து விடுகின்றார்கள். முதலில் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்து தான் பாடசாலைக்கு வந்தேன். பின்னர் அன்பளிப்பாக எனக்கு ஒரு சைக்கிள் தரப்பட்டது. அதில்தான் என்னை ஏற்றி வந்து விடுகின்றார்கள். இப்பொழுது ஓரளவு பிரச்சினையில்லாது நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆமியிடம் சரணடைய வந்த வேளையில் அந்த இடங்களில் மிதிவெடி இருக்கின்ற என்பதால் திரும்பிச் சென்ற வேளையில் எங்களை தடுத்து இராணுவம் எறிந்த செல்லினால் நான் காயப்பட்டேன். எனது கால் அங்கு சிதைவடைந்தது. அந்த இடத்திலேயே எனது அண்ணா இறந்துபோனான். அம்மாவுக்கு முகம் முழுவதும் காயம். அக்காவுக்கு உடல் எங்கும் காயம்.

பின்னர் நான் கடலால்தான் கொண்டு வரப்பட்டேன். மன்னார், குருநாகல், வவுனியா என்று பல வைத்தியசாலைகளில் எனக்கு சிகிச்சைகள் நடந்தன. பின்னர் காயம் ஆறியதும் முகாமுக்கு என்னை அனுப்பினார்கள்.

(இந்த நேர்காணலை வெளியிடுபவர்கள் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நடத்திய உயைராடல் என்பதை குறிப்பிட்டு வெளியிடலாம்)

எமது பண்பாடு அழிக்கப்படுவதையும் வரலாறு மறைக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது தமிழர் பண்பாட்டு மையத்தின் செயலாளர் வைத்தியக் கலாநிதி எஸ். யமுனாநந்தா


வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த தடயங்கள் கிடக்கின்றன என சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு நோக்கத்தில் கருத்துக்களை பரப்பும் சூழலில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொழுது வரலாற்று, பண்பாட்டு தடயங்களை அழிக்கப்படுகின்றன என்றும் குரல்கள் எழுகின்றன. பண்பாட்டின் வாயிலாகவே அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் வடகிழக்கில் தமிழர்களின் வரலாறு சார்ந்த விடயங்கள் அழிக்கப்பட்டு மறைக்கப்படுவதாகவும் குறிப்பிடும் தமிழர் பண்பாட்டு மையத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி எஸ். யமுனாநந்தா, அதற்கான நடவடிக்கைகளை குறித்த மையம் ஆரம்பித்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார். பிராந்திய சுகாதார பணிமனையின் யாழ் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் கடமையாற்றும் கலாநிதி யமுனாந்தா அவர்களை குளோபல் தமிழ் செய்திகள் வலையமைப்பிற்காக சந்தித்து இந்த நேர்காணலை செய்திருந்தேன்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நடத்திய உரையாடல்

GTN இற்காக தீபச்செல்வன்:


இனரீதியான பண்பாட்டு ரீதியான நெருக்கடிகள் எழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான சூழலில் தமிழர் பாண்பாட்டு மையத்தை உருவக்கியதன் அவசியம் மற்றும் தேவை என்னவாயிருக்கிறது?

Dr. யமுனாநந்தா:


தமிழர்களின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் எமது வரலாற்றை உறுதிப்படுத்துவதன் மூலமே எமது இருப்பை பாதுகாக்கலாம். அதற்காகவே நாங்கள் தமிழர் பண்பாட்டு மையத்தை உருவாக்கினோம்.

கந்தரோடையில் 1918, 1919ம் நூற்றாண்டில் ஒரு அகழ்வாராட்சி நடைபெற்றது. அதில் ஜோண் போல் பீரிஸ் என்பவர் முப்பத்தைந்து நாணயங்களை கண்டெடுத்திருக்கிறார். அதேவேளை வல்லிபுரத்தில் இரண்டு நாணயங்களை அவர் எடுத்துள்ளார். இந்த நாணயங்கள் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள நாணயங்களுடன் ஒத்த இயல்பைக் காட்டுகின்றன. இவை புத்தர் இந்தியாவில் வாழ்ந்த காலத்து நாணயங்கள் அடுத்து இவை திராவிட பண்பாட்டுக்குரிய நாணயங்கள். இதன் மூலம் பண்டைய யாழ்ப்பாணத்து தமிழ் மக்களில் சிலர் பௌத்த தர்மத்தையும் குறிப்பிட்டளவு பின்பற்றியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. ஆனால் இதை சிங்கள பௌத்தர்கள் மறுத்து தங்களது நாகரிகம் இங்கிருந்தது என்ற தவறான ஒரு கருத்தை நிலைநாட்ட வருகிறார்கள்.

இத்தகைய வரலாற்று ஆதாரங்களை வலியுறுத்துவதன் மூலம் தான் எமது இனத்தின் இருப்பை உறுதிப்படுத்த முடியும். இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். கந்தரோடையில் அலெக்ஸ்சாண்டர் மன்னர் காலத்து நாணயங்களும் எடுக்கப்பட்டன. அவர்கள் இதுதங்களுடைய நாடு இது என்று வரவில்லை. இது புவிசார் அரசியலில் பண்டைய காலத்திலும் யாழ்ப்பாணம் முதன்மை பெற்றுள்ளது என்பதனைக் காட்டுகின்றது. தற்காலத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த வருட அழிவிற்குப் பின்பும், எமது பண்பாட்டை உறுதிப்படுத்த வரலாற்று ரீதியாகவும் சமூக விஞ்ஞான ரீதியாகவும் எடுத்துக் கூற வேண்டும் என்பதற்காக தமிழர் பண்பாட்டு மையம் உருவாக்கப்பட்டது.


தமிழர்களுக்கு கற்பிக்கப்படும் வரலாறு தவறானது. தமிழர்களின் உண்மையான வரலாற்றை மானிப்பாய் இந்துக்கல்லூரியின் ஆசிரியர் ஜி.எஸ் நவரட்ணம் 1956இல் எழுதியுள்ளார். அந்த வரலாற்றுப்புத்தகமே உண்மையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தவறான வரலாற்றைக் கற்பித்து கேள்விக்குள்ளாக்கும் தன்மையை நாங்கள் மாற்ற வேண்டும். இலங்கையில வடகிழக்கில் சேர, சோழ, பாண்டியர்களின் நாகரிகங்களுக்கான தடயங்கள் உள்ளன. ஏனென்றால் எங்கள் நாகரிகம் தமிழகத்து நாகரிகத்தோடு தொடர்புடையது. ஆனால்; வட இந்திய அரசாங்கம் தமிழகத்தின் பழைய வரலாற்றை அறிந்திருக்கவில்லை போலுள்ளது. இந்திய இராஜதந்திரம் என்பது தங்களை தாங்களே தின்னும் இராஜதந்திரத்தை கடைப்பிடிக்கின்றது. அவர்கள் தமிழகத்துக்கும் யாழ்ப்பாணத்திற்கும் வடக்கு கிழக்குக்குமிடையிலான தொடர்பை அழிக்கும் விதத்திலேயே நடந்து கொள்கிறார்கள். எங்கள் பண்பாடு சார்ந்த விடயங்களை மாணவர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு, நிர்வாகிகளுக்கு, இராஜதந்திரிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

எங்களுடைய பண்பாட்டில் இரண்டு விதமான குடியிருப்புக்கள் ஏற்பட்டன என்பதற்கு குளங்களை அண்டிய இடங்களில் ஆலயங்களை அமைத்து குடியிருந்திருக்கிறார்கள். முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற ஆலயங்ளை எடுத்துக்கூறலாம். அடுத்து நகரங்களை அண்டிய குடியேற்றங்களாக யாழ்ப்பாண நகரத்தின் மையத்தில் வண்ணை வைத்தீசுவரர் ஆலயம் காணப்படுகிறது. சாவகச்சேரியில் இருந்த ஆலயம் உடைக்கப்பட்டு இப்பொழுது நீதிமன்றக் கட்டிடமாக உள்ளது. பருத்தித்துறையிலும் இவ்வாறு காணப்படுகிறது. இந்தப் பழைய பண்பாடு;களை நாங்கள் எடு;துக் கூற வேண்டியுள்ளது. 1990ல் தொல்பொருள் ஆராட்சியாளர் எச்.பி.பி டெல் பொலநறுவையில் ஒரு நடராஜர் சிலையை எடுத்திருக்கிறார். அது ஒரு வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட சிலை. அது சோழ நாட்டுக்குரியது. அடுத்து திருக்யோணேசுவரர் ஆலயத்தில் காணப்படுகின்ற கல்வெட்டுக்கள் “முன்னை குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை பின்னே பறங்கி பிடிக்கவே மன்னா கேள் பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணன் போன பின் மானே வடுக்காய் விடும்”; என்று இருக்கிறது. அதாவது கோணேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டு இலங்கையை யார் யார் கைப்பற்றுவார்கள் என்று குறிப்பிடுகின்றது. இப்படி வரலாற்று ஆதாரங்களையும் சமகால விடயங்களையும் சேர்த்துப் பார்க்கும் போது எமது வரலாற்றையும் அதன் பண்பாட்டையும் இனங்காணமுடிகிறது. எனவே நாம் இவற்றை வலியுறுத்தவும் முன்னெடுக்கவும் தமிழர் பண்பாட்டு மையத்தை உருவாக்கியிருக்கிறோம்.

GTN இற்காக தீபச்செல்வன்:


தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் பௌத்த பண்பாட்டுக்கான தர்மத்துக்கான தடயங்கள் கிடைப்பதாக சொல்லப்படுகின்றது. அது எந்தளவு உன்மை?

Dr. யமுனாநந்தா:


தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தமிழர்கள் பின்பற்றிய பௌத்த தர்மங்களுக்கான சில தடயங்கள் இருக்கின்றதே தவிர அவை சிங்களவர்களுக்கு உரியதல்ல. இது மிகவும் முக்கியமானது. அதைச் சிங்களவர்கள் தங்களுடையது என்று குறிப்பிடுவது தவறானது இதை நாங்கள் எடுத்துக் கூறவேண்டும். அவர்கள் நில ஆக்கிரமிப்பின் அடிப்படையில் தான் பார்க்கிறார்கள். ஆனால் தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் பௌத்த தர்மம் தமிழ் மக்களாலும் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து தென் இலங்கையில் இருந்து பௌத்தம் இங்கு வந்தது என்று கூறுவது தவறானது.

GTN இற்காக தீபச்செல்வன்:


அண்மைக் காலமாக முப்பது வருட காலப் போராட்டத்தின் தடயங்கள் மர்மமான முறையில்; அழிக்கப்பட்டு வருகின்றன. இறந்தவர்களின் நினைவுத் தூபிகளை, வீடுகளை சிதைப்பது முதலிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அழிப்பு நடவடிக்கைகள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

Dr. யமுனாநந்தா:


எங்களுடைய வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூடியது. சி.எஸ் நவரட்ணம் எழுதியுள்ள இலங்கைத் தமிழர் வரலாறு 1900 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 1950 ஆம் ஆண்டு வரை வந்த வரலாறு ஒரு விதமானது. 1970 இற்கு பின்னர் வந்த எமது வரலாறு மிகவும் வித்தியாசமானது. அந்த போராட்டகால தடயங்களை அழிப்பதன் ஊடாக வரலாற்றை முற்று முழுதாக மாற்ற முடியாது. பழைய கால வரலாறு சார்ந்த விடயங்கள் பதிவுகள் இணையத்தளங்களில் இல்லை. ஆனால் அண்மைய எமது வரலாற்று சம்பவங்கள் எல்லாமே இணையத்தில் தொகுப்பில் உள்ளது. இப்படியான அழிப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளுவது மனித நேயத்திற்கு முரணானது. இப்படி அவர்கள் அழித்தாலும் அண்மைக்கால வரலாற்றை யாரும் ஒளிக்க முடியாது. ஆங்கிலேயர்களின் தொல்பொருள் ஆராட்சிகளில் உள்ள பண்டைய தொல்பொருள் சார்ந்த விடயங்களை எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனொன்றால் வரலாற்றை அடிப்படையாக் கொண்டுதான் ஒரு சமூகத்தின் நிர்வாக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.



GTN இற்காக தீபச்செல்வன்:


வரலாற்று விடயங்கள் மற்றும் தொல்லியல் சார்ந்த விடயங்கள் குறித்து அண்மைக்காலமாக எழுந்திருக்கும் நிகழ்வுகள் குறித்து தொல்லியல் துறை மற்றும் வரலாற்றுத் துறை சார்ந்தவர்கள் நிறுவுகின்ற தன்மைகள் இல்லாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. விஞ்ஞானத்துறை சார்ந்த அடிப்படையில் இவற்றை பாதுகாக்க முற்படும் நீங்கள் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு இதன் அவசியத்தை எப்படி எடுத்துக் கூற முடியும்?

Dr. யமுனாநந்தா:


நாங்கள் வரலாற்று அம்சங்களை பாதுகாக்க உறுதிப்படுத்த சில நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறோம். அவை குறித்து நாங்கள் இப்பொழுது வெளியே குறிப்பிடும் பொழுது அவை தடைப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அது ஒரு ஆபத்தான விடயமாயிருக்கிறது. கல்வித்துறையைச் சார்ந்தவர்கள் எனும் பொழுது யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை பத்தை விட மிக குறைந்து போயுள்ளது. எங்கள் இளம் சமூகம் வரலாறு பண்பாடு மொழி முதலியவற்றை கற்பதன் மூலமே அதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். ஒரு சில பேராசிரியர்கள் எமக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள். பேராசிரியர் குமாரவடிவேல், மற்றும் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் வரலாற்று ஆசிரியர்களுடன் இணைந்துதான் இந்த பண்பாட்டு மையத்தை செயற்படுத்துகிறோம். அதன் மூலம் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எமது மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் வரலாற்றக் கல்வி தவறானது. அதிகாரங்களது செயற்பாடுகளால் வரலாற்றில் தொல்பொருளில் பல திரிபுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றையே மாணவர்கள் கற்கிறார்கள். அதைத்தான் அவர்கள் படிக்கிறார்களே தவிர தமிழர்களின் உண்மையான வரலாற்றை அவர்கள் படிக்கவில்லை என்பதுதான் இங்கு துக்கமான விடயம். அதை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை நாங்கள் பார்க்க வேண்டும். எங்கள் வரலாறு தென்பகுதி வரலாற்று ஆசரியர்கள் கொடுப்பதைத்தான் எமது மாணவர்கள் கற்க வேண்டியுள்ளது. இப்படியானவை எங்களுக்கு சரியான பின்னடைவை தருபவை.


GTN இற்காக தீபச்செல்வன்:


உங்களுடைய திட்டம் பண்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதா அல்லது தொல்லியல் சின்னங்களை சேகரிப்பதா?

Dr. யமுனாநந்தா:


மக்களிடம் பண்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு திட்டம் மற்றது பண்பாட்டு சின்னங்களை பேணுவது இன்னொரு திட்டம். ஏனென்றால் பண்பாட்டு சின்னங்கள் மிகவும் பெறுமதியானவை. விலை மதிக்க முடியாதவை. அவற்றை எந்த விலை கொடுத்தும் நாங்கள் விற்கக் கூடாது. அதை மற்றவர்கள் எடுத்துச் செல்ல விட முடியாது. எடுத்துக் காட்டாக ஒரு இடத்தில் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டால் இன்றைய சூழலில் விரைவாக இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படலாம். இவற்றை விழிப்புணர்வின் மூலம் நாங்கள் தடுக்க முடியும். அடுத்து அரசியல்வாதிகள், தீர்மானம் எடுக்கும் அதிகாரிகள் போன்றவர்களுக்கு எடுத்து கூறுதல் தொல் பொருள் சின்னங்களை பாதுகாக்கும் முறைகளையும் சொல்லுகிறோம். வரலாற்று கல்வியை இளஞ்சமூகத்திற்கு கொடுப்பதற்கான வழிகளையும் செய்கிறோம்.


GTN இற்காக தீபச்செல்வன்:


அபிவிருத்தி செய்யும் பொழுது பண்பாட்டு தடயங்கள் அழிவடைவதற்கு எதிரான குரல்களும் ஒரு புறம் எழுகின்றன. அபிவிருத்திக்காக அவற்றை அழிக்கலாம் என்ற மாற்று குரல்களும் மறுபறும் எழுகின்றன இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

Dr. யமுனாநந்தா:


பண்பாட்டின் ஊடாகத்தான் அபிவிருத்தி ஏற்பட வேண்டும்;. அபிவிருத்தி என்ற போர்வையில் பண்பாட்டு விடயங்களை அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் சேது சமுத்திர திட்டத்தின் போது பல பொருளாதார முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டு தொடங்கப்பட்ட திட்டம் மிகப்பெரிய அளவில் சூழல் மாசுபடும் என்று எதிர்ப்புக்கள் எழுந்த சூழலிலும் முன்னெடுக்கப்பட்ட திட்டம் அங்கு இராமரால் கட்டப்பட்ட பாலம் இருக்கின்றது என்பதற்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. வரலாற்றுச் சின்னங்களை அழிப்பதற்காக திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்பவற்றை நாம் தவிர்க்க வேண்டும்.

நகர வீதி அபிவிருத்திகள் என்று சொல்லப்படுகின்றன வீதிகள் அகலமாக்கப்பட வேண்டும் என்பதற்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன. உள் நகரின் வீதிகளை அகலமாக்குவதற்கு பதிலாக புறநகர் ஒன்றை உருவாக்கலாம். யாழ்ப்பாணம் ஆலயமும் ஆலயம் சார்ந்த நகரமுமாக தொன்மைக்காலம் முதல் இருந்து வருகிறது. அபிவிருத்தி என்று சொல்லிக்கொண்டு பருத்தித்துறை வீதியை அகலமாக்கும் போது சங்கிலியன் தொகுப்பு எங்களுக்கு தெரியாமலே அழிந்துவிடும். வீதியை அகலமாக்கும் வர்த்தகர்கள் இலாப நோக்கம் கருதி வரலாற்றை மறைக்க முற்படுகிறார்கள். இதை நாங்கள் முற்றாக எதிர்க்கவேண்டும். அபிவிருத்தி என்பது நாகரிகத்தின் ஊடாகத்தான் செய்யப்பட வேண்டும். உதாரணமாக சீன அரசாங்கம் ஆபிரிக்காவுக்கு சென்று வானளாவிய ரீதியாக கட்டிடங்களைக் கட்டியது. ஆனால் நிலத்துக்கு கீழ் இருந்த எல்லா வளங்களையும் சுரண்டிக்கொண்டு சென்றது. அது போலத்தான் இங்கும் வந்து அபிவிருத்தி என்று சொல்லிக்கொண்டு கட்டிடங்ளைக் கட்டி மரங்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் அழித்து விட்டு சென்றால் பாலைவனமாகிப் போய் விடும்.

அலெக்ஸ்சாண்டர் காலம் முதல் இன்று வரை உலகத்தின் வல்லரசுகளின் ஆதிக்கங்களுக்கு உட்பட்ட போதும் நாங்கள் எங்கள் வரலாறு சார்ந்த விடயங்களை பாதுகாத்ததினால் தான் இன்றும் அடையாளத்துடன் இருக்கிறோம்.

GTN இற்காக தீபச்செல்வன்:


மாறிவரும் உலக சூழலை தமிழர்கள் எப்படி அல்லது நெருங்க வேண்டும் எதிர்கொள்ள வேண்டும்?

Dr. யமுனாநந்தா:


பண்பாடு நிலையானது நாகரிகம் வளர்ந்;து செல்வது. மாறிவரும் உலக சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாம். உதாரணமாக தமிழ்மொழியில் ஆங்கில ஆக்கிரமிப்பை தவிர்க்க வேண்டும். ஆலய கலாசாரம் பாரம்கரியம் போன்றவற்றை பேண வேண்டும். தமிழர்கள் உலக கிராமத்துக்குள் இருக்கிறார்கள். உலகத்தில் பல்வேறு நாடுகளில் இருந்தாலும் தமிழ்மொழி விடயத்தில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும். மாற்றினங்களோடு நாங்கள் சேரும் போது தமிழ் மொழி ஆபத்துக்குள்ளாகின்றது. பெரும் அழிவிற்குப் பிறகும் சமய ஒழுக்கங்களாலேயே எங்கள் வாழ்க்கையையும் அமைதியை
யும் கட்டியெழுப்புகின்றோம். சமூச பண்பாட்டு வன்முறைகளை நாங்கள் தவிர்க்க வேண்டுமாக இருந்தால் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறையாக இருக்க வேண்டும்.

தட்டச்சில் உதவி : ஸ்ரீரமணன்


படங்கள் ‐ நன்றி இலங்கைத் தமிழர் ஓர் இனக்குழு ஆக்கம் பெற்றவரலாறு


குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Saturday, April 24, 2010

இந்தியாவின் யாழ்நகர தூதரகம் சீனாவை கண்காணிக்கவே - சுரேஷ் பிரேமச்சந்திரன்

சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர். பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்ட வேட்பாளராகப் போட்டியிடும் இவரை பொங்கு தமிழ் இணையத்தளத்திற்கென யாழ்ப்பாணத்தில் சந்தித்து உரையாடினார் கவிஞர் தீபச்செல்வன்.

நேர்கணல்: கவிஞர் தீபச்செல்வன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவிற்கான பின்னணி, பொங்குதமிழ் இணையத்தளத்தால் வெளியிடப்பட்ட கூட்டமைப்பின் தீர்வுத்திட்ட முன்மொழிவின் நகல், இந்தியாவுடனான உறவு மற்றும் போரின் பின்னான தற்போதைய அரசியல் சூழல் குறித்த கேள்விகளுக்கு இங்கு வெளிப்படையாகவும் காரசாரமாகவும் பதிலளிக்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

தீபச்செல்வன்:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிளவிற்கு காரணமாக அமைந்த தீர்வுத் திட்டத்தின் நகல் ஒன்று கிடைத்திருப்பதாகக் கூறி பொங்குதமிழ் இணையத்தளம் அதனை கடந்த 14ம் திகதி வெளியிட்டிருந்தது. இந்த நகல் உண்மையில் கூட்டமைப்பினரால் வெளியிடப்பட்ட தீர்வுத் திட்டத்தினுடையதா? நீங்கள் வெளியிட்ட தீர்வுத்திட்டம்தான் தற்போதைய பிளவுக்கு வழிவகுத்ததா? தமிழ் மக்களின் கடந்த கால வாழ்வு, போராட்டங்களின் தொடர்ச்சியாக இந்த தீர்வுத் திட்டம் அமைகிறதா?

சுரேஷ் பிரேமச்சந்திரன்:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு பட்டிருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களது 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் சில பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தாங்களாகவே வெளியேறிச் சென்றவர்கள். சிலர் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் புகுந்து அங்கு வசித்து வருகிறார்கள்.

இதில் பிளவு என்று நீங்கள் சொல்லுவது கஜேந்திரகுமார் மட்டுமே. இவர் கொள்கை முரண்பாடு என்று சொல்லிக்கொண்டு வெளியேறியுள்ளார். கஜேந்திரனுக்கும் பத்மினிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களை கொடுத்திருக்குமாக இருந்தால் இந்தக் கொள்கை முரண்பாடு வந்திருக்குமா என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது. அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தங்களை விலத்தியதாக கூறுகிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களுக்கு இடம் கொடுத்திருக்குமாக இருந்தால் அவர்களுக்கு நிச்சயமாக இந்த கொள்கை முரண்பாடு வந்திருக்காது.

கூட்டமைப்பின் கொள்கையை ஏற்றுக்கொண்டிருந்தால் யாழ் மாவட்டத்தில் தன்னை முதன்மை வேட்பாளராக்கியிருக்கக்கூடும் என்று கஜேந்திரன் சொல்கிறார். அவரது அரசியல் அறிவு அவ்வளவுதான் என்றே நான் நினைக்கிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களுக்கு இரண்டு ஆசனங்களை கொடுக்காமைக்கான காரணம் அவர்களது கடந்த கால நடவடிக்கைகள்தான்.

அரசியல் ரீதியாகவும் ஏனைய வழிகளிலும் அவர்கள் தங்கள் வேலைகளை குறுக்கிக் கொண்டார்கள். கஜேந்திரன் நோர்வேயிலும் பத்மினி லண்டனிலும் மிக நீண்ட காலமாக தங்கியிருந்தார்கள். இவர்கள் புலத்தில் சென்று மக்களைத் தட்டி எழுப்பினார்கள் என்று கூறுகிறார்கள். புலத்தில் இவர்கள் என்ன செய்தார்கள் என்று அங்குள்ளவர்களைக் கேட்டால் தெரியும்.

வன்னிப்போரின் இறுதிக் காலகட்டங்களில் அங்கு பல போராட்டங்கள் நடைபெற்றன. அந்தப் போராட்டங்களில் இவர்கள் தலை காட்டியிருக்கலாம். அந்தப் போராட்டங்களை அங்குள்ளவர்கள் நடத்திய பொழுது ஒரு சில நாட்கள் வெறும் நபர்களாக இவர்கள் கலந்து கொண்டார்களே தவிர அதை இவர்கள் நடத்தவில்லை. இவர்கள் புலத்தில் எதையும் செய்யவில்லை.

இதை யாரும் பிளவு என்று பார்க்கலாமா? இப்படியான இரண்டு பேர் பிரிந்திருக்கிறார்கள். நான் தினமும் தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியில் சென்று வருகிறேன். தமிழ் தேசியத்திற்கான மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் கேட்டார்கள் ஏன் இவர்களை விலக்கினீர்கள் என்று. அவர்களுக்கு தெளிவாகப் பதிலளித்திருக்கிறேன். 22 பேரில் சிலர் இப்படி பிரிந்து செல்வதை நீங்கள் பிளவு என்று குறிப்பிடாதீர்கள். மக்கள், கூட்டமைப்புடன் இருக்கிறார்களா என்பது எதிர்வரும் தேர்தலின் பின்னர், அந்த உண்மை தெளிவாக வெளியில் வரும். தமது சொந்த பிரச்சாரத்திற்காக பிளவுபட்டதாக சொல்கிறார்கள்.

அடுத்து தீர்வுத் திட்டம் குறித்துக் கேட்டிருந்தீர்கள். இது இறுதி நகல் அல்ல. ஆனால் அந்த தீர்வுத்திட்டத்தில் முழுமையாக இல்லாவிட்டாலும் சில விடயங்கள் இதில் ஒத்துள்ளன. இந்தத் தீர்வுத் திட்டத்தை வாசிக்க கூடிய யாரும் சொல்லுங்கள், இது தமிழ் தேசியத்தை மறுதலிக்கிறதா? இது தமிழர் தாயகத்தை மறுதலிக்கிறதா? இது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கிறதா? என்பதை இதை வாசித்தவர்கள் சொல்ல வேண்டும். தமிழ் மக்களின் தேசியம், அவர்களின் தாயகம், அவர்களின் தன்னாட்சி உரிமை என்ற சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்தான் இந்தத் தீர்வுதிட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இராணுவ விடயங்களுடன் அரசியல் விடயங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் கையாண்டிருந்தார்கள். அதற்கு பிற்பாடுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதைக் கையாளத் தொடங்கியது. எங்கள் கையில் அப்பொழுதுதான் பொறுப்பு வந்தது. அதற்கு முன்பு நாங்கள் பாராளுமன்றத்திலும் சர்வதேச மட்டங்களிலும் மனிதாபிமானப் பிரச்சினைகள், மனிதப் படுகொலைகள் என்று மனித உரிமை சார்ந்த விடயங்களை எடுத்துரைத்தோம். இனப்பிரச்சினைக்கு தீர்வு கொண்டுவரும் விடயங்கள் குறித்து பேசியிருந்தோம்.

விடுதலைப்புலிகள் ஒரு பலமான அமைப்பாக இருந்தார்கள். அவர்களை அழித்து விட்டார்கள். இன்று எங்களுக்கு இராணுவ பலம் இல்லை. பேரம் பேசுகிற ஆற்றல் இல்லை. மக்களை எப்படியான நிலைக்கு உள்ளாக்கியிருக்கின்றது என்றால் ஒருவரும் இல்லாமல், வேரோடும், வேரடி மண்ணோடும் இடம்பெயர்க்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு அந்த மக்கள் யாருடனும் பேசமுடியாமல், பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் பார்க்க முடியாமல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக, வன்னி முழுக்க முழுக்க இராணுவ இடமாக்கப்பட்டிருக்கிறது. மக்கள் யாரும் இருக்கவில்லை. மக்களின் மனநிலைகளும், மனஉணர்வுகளும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி போகவேண்டும் என்பதும், கால்நடைகளுக்கு என்ன நடந்தது? வீட்டுக்கு என்ன நடந்தது? தங்கள் சொத்து, எதிர்காலம், வாழ்க்கை, பிள்ளைகள் என்ற நெருக்கடி மனஉணர்வு என்பது அவனவனுக்கு ஏற்படும் போதுதான் அதனை புரிந்து கொள்ள முடியும். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு பார்க்க மட்டும்தான் முடியும். வேதனையை அனுபவிக்க முடியாது. என்னுடைய வீடு அழிவடைந்தால்தான் எனக்கு அதன் வலி புரியும். எங்கள் எண்ணத்தின்படி அந்த மக்கள் குடியேற்றப்பட வேண்டும்.

எமது இனப்பிரச்சனைக்கான தீர்வு நோக்கியும் நாங்கள் போக வேண்டும். எங்கள் கைகளில் மக்களைக் குடியேற்றக் கூடிய அந்த அதிகாரம் இருக்குமென்றால் அந்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கொழும்பிடம் கேட்டுக்கொண்டிருக்க தேவையில்லை. நாங்கள் வெளிநாடுகளுடன் பேசலாம். அல்லது வெளிநாட்டிலுள்ள தமிழ் மக்களுடன் பேசலாம்.

மூன்று இலட்சம் மக்கள் என்பது கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வரையான வீடுகளை உள்ளடக்கியது. இவற்றில் பெரும்பான்மையான வீடுகளுக்கு கூரைகள் மற்றும் கதவுகள் மாற்றினால் போதுமானது. சில வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டிருக்கும். ஆகவே இதனை பாகுபடுத்தி ஒவ்வொரு வீட்டிற்கும் எவ்வளவு வழங்குவது என்பதை சொல்வதற்கு எம்மிடம் அந்த அதிகாரம் இருக்க வேண்டும். இந்த அதிகாரம் இப்பொழுது கொழும்பிடம்தான் இருக்கிறது.

இந்த அதிகாரம் ஒரு தீர்வுக்கூடாகத்தான் எங்களிடம் வரலாம். அந்த தீர்வானது குறைந்த பட்சம் ஒரு இடைக்கால தீர்வாகவாவது இருக்கலாம். விடுதலைப் புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான தீர்வை முன்வைக்கும் பொழுது இனப்பிரச்சினை பற்றிய தீர்வுக்கு நீண்டகாலம் எடுக்கலாம், ஆனால் மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றார்கள்.

ஆகவேதான் மக்களை மீளக்குடியேற்ற, புனருத்தாரணம் செய்ய, அபிவிருத்தி வேலைகளைச் செய்ய, இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை என விடுதலைப்புலிகள் அதை முன் வைத்தார்கள். அன்று ஒரு இடைக்கால நிர்வாக சபை தேவையாக இருந்தது. அன்றைய மக்களின் பிரச்சினையை விட பத்து மடங்காக பிரச்சினைகள் இன்று கூடியிருக்கின்றன. இந்த நிலையில் குறைந்த பட்சம் அந்த அதிகாரங்களை கையிலெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டியதன் அடிப்படை- முதலாவது தமிழ் மக்களின் நிலமை. இதைக் கவனத்தில் எடுக்காமல் நாங்கள் தத்துவம் பேசிக்கொண்டிருக்க முடியாது. அதற்காக எதனையும் நாங்கள் விட்டுக்கொடுத்து அந்த தீர்வுத்திட்டத்தை கொண்டு வர முடியாது. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினையை வைத்துக்கொண்டு, அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுகின்றதோ என்னவோ, முதலில் அதற்கு சர்வதேச ஆதரவை திரட்ட வேண்டும்.

சர்வதேச சமூகம் இன்றுவரை தனிநாடு என்ற தீர்வை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை நாங்கள் கேட்கிற பொழுது நிறைய நாடுகள் அதற்கு ஒத்துழைக்க சந்தர்ப்பம் இருக்கின்றது. உதாரணமாக சமஷ்டி அமைப்பு முறை. அது அமெரிக்காவில் இருக்கிறது. அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் உள்ளது. இந்தியாவில் அரைகுறை நிலையில் உள்ளது.

நாங்கள் சமஷ்டி முறையிலான தீர்வை முன்வைக்கும் பொழுது அதை யாரும் பிழை என்று குறிப்பிட முடியாது. அப்படியென்றால் அவர்களது நாட்டில் அது இருக்க முடியாது. அரசாங்கம் அதை தர மறுத்தால் அதன்மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும். நிர்ப்பந்திக்கப்படும். நாங்கள் தனி நாட்டுக்கு குறைவான ஒரு விடயத்தைதான் கேட்கிறோம். ஏற்கனவே விடுதலைப் புலிகள் பேசிய விடயங்களை எல்லாம் கவனத்தில் எடுத்து, 2005 இல் சந்திரிகா முன் வைத்த அறிக்கை. ஒஸ்லோவில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஏற்பட்ட உடன்பாடு. இதை பிரபாகரன் எற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னாலும் அதற்கு முன் வந்த மூன்று மாவீரர் தின உரைகளில் அவர் இதைப்பற்றி பேசி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அந்த அடிப்படையிலேதான் இந்த தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்வுத்திட்டம் என்பது தீர்வை நோக்கி நாங்கள் இராணுவ ரீதியான ஆற்றல் எதுவும் இல்லாமல், பேரம் பேசக்கூடிய சக்தி எதுவும் இல்லாமல், முழு மக்களும் வீதியில் கொண்டு வந்து அடைக்கப்பட்ட சூழலில் சர்வதேச ஆதரவுகளை எடுக்க கூடிய வழிமுறைகள் ஆராயப்பட்டுத்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சில வரிகளை மட்டும் வைத்துக்கொண்டு இது பற்றி பேச முடியாது. இந்தத் தீர்வுத் திட்டம் ஏன் வந்தது. எப்படியான காலத்தில் வந்தது. இவை எல்லாம் கவனத்தில் எடுத்தால்தான் அதற்கான கருத்தை ஒழுங்கான முறையில் கொடுக்க முடியும். கருப்பு வெள்ளைத் தாளில் வரும் பிரதிக்கு யாரும் வியாக்கியானம் சொல்லலாம். யாரும் தத்துவ விளக்கங்கள் சொல்லலாம். யாரும் சரி என்று சொல்லலாம். யாரும் பிழை என்று சொல்லலாம். அது அவர்களது ஜனநாயக உரிமை மாத்திரமல்ல. அதை விளக்கத்திற்கும் உட்படுத்தலாம். உண்மையில் அது அந்த கால கட்டத்துடனும் தேவைகளுடனும் இதைப் பொருத்தி பார்க்க வேண்டும்.

தீபச்செல்வன்:

உங்களுக்குள் ஏற்பட்ட பிளவு அல்லது முரண்பாட்டுக்கு வேறு என்ன காரணம் இருக்கிறது? அவர்கள் விலகினார்களா? அல்லது விலக்கப்பட்டார்களா?


சுரேஷ் பிரேமச்சந்திரன்:

அதை முரண்பாடு என்று சொல்ல முடியாது. அதைப் பற்றி அவருடன் மணித்தியாலக் கணக்காக உரையாடியிருக்கிறோம். நாங்கள் அடிப்படையில் எதையும் விட்டுக் கொடுத்ததாக இல்லை. நாங்கள் விட்டுக்கொடுத்திருக்கிறோம் என்று அவர் கூறுகிறார். அதை நாங்கள் தொடர்ச்சியான விவாதத்திற்கு உட்படுத்தலாம். எங்களுடைய நிலைப்பாட்டையும் அவர்களுடைய நிலைப்பாட்டையும் விவாதத்திற்கு உள்ளாக்கலாம். அதற்கு மேலாக அவர்கள் சில சட்டத்தரணிகளை அழைத்துக் கொண்டு வந்தார்கள். ஒரு பொது இணக்கப்பாட்டை காண்பதற்காகவும் கூட்டை உடைக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த தீர்வுத் திட்டத்தை கூட நாங்கள் கைவிடுவதாக சொல்லியிருந்தோம்.

தேர்தலிற்கு பிற்பாடு எல்லோருடைய இணக்கப்பாட்டுடன் தீர்வுத்திட்டம் தயாரிக்க வேண்டும் என்றார். தனக்கு இணக்கப்பாடு இல்லை என்று கூறிவிட்டு லண்டன் போய்விடுவார். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இது ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதுபோல. அப்படியொரு அதிகாரத்தை அவருக்கு தர முடியாது என்று நாங்கள் கூறினோம்.

எந்த விடயத்திலும் பெரும்பான்மை முடிவுகளை அங்கீகரிக்கப் பழக வேண்டும். நாங்கள் இயன்ற வரையில் ஏகமனதாக இணக்கப்பாடுகளை உருவாக்குவது சரி. விட்டுக் கொடுப்புக்கள் செய்யாமல் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றும் செய்ய முடியாது. இதைத்தான் அவருக்கு நாங்கள் சொன்னோம். அதை ஏற்றுக்கொண்டு எழுத்து மூலமாக புதிய தீர்வுத் திட்டம் ஒன்றை அடுத்த தேர்தலில் பின்னர் புதிய உறுப்பினர்களுடன் தயாரிக்கலாம் என்று கூறியிருந்தோம்.

அவரை நாங்கள் வெளியேற்றவில்லை. அவருக்கு வீட்டோ அதிகாரத்தை கொடுக்கவில்லை என்பதற்காக அவர் தானாக வெளியேறினார். இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்புதான் லண்டனிலிருந்து வந்தார். வந்தவுடன் விலத்திப் போவதற்கான சந்தர்ப்பத்தை பார்த்தாரே தவிர கூட்டமைப்பில் வேலை செய்வதற்கான சந்தர்ப்பத்தை பார்க்கவில்லை.

தீபச்செல்வன்:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. உங்களது நிகழ்ச்சி நிரல் என்ன?

சுரேஷ் பிரேமச்சந்திரன்:

நூற்றுக்கு நூறு வீதம் இது பிழையான கருத்து. பதினெட்டு வருடத்திற்கு பிற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு இணங்கத்தான் நாங்கள் டெல்லியை சந்தித்தோம். இந்திய பிரதமருடன் ஒரு சுற்றுப் பேச்சு வார்த்தையை நடத்தினோம். இந்த விஜயம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்கப்பட்டது. டெல்லியுடன் நெருக்கமான உறவை பேண வேண்டும் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் விருப்பமாக இருந்தது. அதற்கு ஏற்ப டெல்லியுடன் பேசுமாறு எங்களுக்கு சொல்லப்பட்டது. அதனால் நாங்கள் தொடர்ந்து பேசி வந்தோம்.

டெல்லிக்கு இலங்கை தொடர்பாகவோ, தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகவோ, ஈழத் தமிழர் தொடர்பாகவோ வேறுபட்ட நிகழ்ச்சி நிரல் இருக்கலாம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் பேரம் பேசும் ஆற்றல். தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் இல்லாமல் போகும் என்றால் எங்களுக்கு பேரம் பேசும் ஆற்றல் இல்லை. ஆகவே இராணுவ பலத்தை வைத்திருக்க வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரே கருத்தைதான் கொண்டிருந்தது.

ஓவ்வொரு முறையும் பேசும் பொழுது விடுதலைப்புலிகளுடன் பேசுங்கள். அவர்களை ஜனநாயகப் பாதைக்கு கொண்டு வர முடியும் என்று எடுத்துச் சொன்னோம். புலிகளின் அழிவுக்கு, இலங்கை அரசுகூட சொல்கிறது இந்தியாவின் ஒப்புதலுடன்தான் யுத்தம் புரிந்தாக சொல்கிறது. இந்தியாவின் அனுசரணை இல்லாமல் இலங்கை இந்த யுத்தத்தில் வென்றிருக்க முடியாது. அதை இலங்கை ஜனாதிபதியும் சொல்கிறார்.

தங்களைப் பற்றி மோசமான கருத்தை தமிழ் மக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பது இந்தியாவுக்கு தெரியும். எங்களுக்கு ஒரு தீர்வு தேவை என்றால் யார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இந்தியாவின் பங்களிப்பு வந்தேயாகும். தனது நாட்டுக்கு குந்தகமான தீர்வென்றால் இந்தியாவுக்கு அதைக் குழப்பக் கூடிய வல்லமையும் உண்டு. அதுதான் இலங்கைக்கும் பிடிக்கும்.

அண்மைக்காலமாக இந்தியா எங்களுடைய எதிர் சக்தியாக நடவடிக்கைகளில் இறங்கயிருந்தாலும் எங்களுடைய நட்பு சக்தியாக அதை மாற்ற வேண்டும். அவர்களை வைத்துக்கொண்டுதான் இலங்கை அரசாங்கம் இந்த யுத்தத்தை நடத்தி முடித்திருக்கிறது. அதே இந்தியாவைத்தான், இந்திய இராணுவம் வருவதற்கு முன்பாக, ஐக்கிய நாடுகள் சபையிலும் வேறு பல இடங்களிலும் இலங்கையில் இன அழிப்பு நடக்கிறது என்று இந்திரா காந்தி பேச வைத்திருந்தார்.

இலங்கை இனப் பிரச்சினையை உலகம் முழுக்க கொண்டு போக இந்தியா பெரிய பங்கு வகித்தது. ராஜிவ் காந்தியின் கொலைக்கு பிறகு அதில் பெரிய மாற்றங்கள் வந்திருந்தன. பின்னர் இலங்கை அரசுக்கு சார்பாக இந்தியா மாறியிருந்தது. இலங்கை அரசாங்கம் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது. இந்த யுத்தத்தில்கூட இலங்கைக்கு சார்பாக இந்தியா நடந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது.

ஆனால் இன்று இனப் பிரச்சனைக்குரிய தீர்வை காண்பதில் இந்தியாவை நட்பு சக்தியாக்க வேண்டிய தேவையுள்ளது. உலகத்தில் இன்று எங்கு பேசினாலும் அமெரிக்காவுடன் பேசினாலும் நோர்வேயுடன் பேசினாலும் அவர்கள் இந்தியாவுடன் பேசுங்கள் என்றே சொல்லுகிறார்கள். அவர்கள் 90 வீதமான பங்கை வகிக்கின்றார்கள். இந்தியாவிற்கு பின்னால் நாம் நிற்போம் என்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவுடன் பேசக் கூடாது இந்தியாவுக்கு கிட்ட போகக்கூடாது என்றால் இந்த பிரச்சினைக்கு வேறு என்னதான் வழி?

இலங்கையிலிருந்து 18 கிலோ மீற்றர் தூரத்தில்தான் இந்தியா இருக்கிறது. இலங்கையில் நடக்கக்கூடிய விடயங்கள் இந்தியாவின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். இந்தியாவின் பொருளாதார நலன்களுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். இன்று பருத்தித்துறையில் வீதிகளை திருத்த சீன அரசு வந்திருக்கிறது. இந்தியா இன்று சொல்லுகிறது, யாழ்ப்பாணத்தில் தான் ஒரு துணைத் தூதுவராலயம் போடப் போவதாக. அவர்கள் தமிழ் மக்களுக்கு விசாக் கொடுக்கும் ஆசையிலா திறக்கிறார்கள்?

இங்கு சீனாக்காரர்கள் வந்து விட்டார்கள். அவர்களை கண்காணிக்க அவர்களுக்கு ஒரு அலுவலகம் தேவைப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் துணைத் தூதுவராலயம் அமைக்க இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் போடத்தான் போகிறார்கள். எங்களைக் கேட்டா போடப் போகிறார்கள்.

இதனால் அவர்களை எங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வர வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நிகழ்ச்சி நிரலுக்குள் அவர்களை கொண்டு வர வேண்டும். எங்களது அடிப்படை விடயங்களை விட்டுக்கொடுக்காமல் அவர்களை அந்த தீர்வுக்கு கொண்டு வரப் பார்க்கலாம். இந்தியாவுடன் பேசுவதால் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் போவதா? இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவதால் அவரது நிகழ்ச்சி நிரலுக்குள் போவதா? அது ஒரு சிறு பிள்ளைத்தனமான கருத்து அதில் எந்தவித அர்த்தமும் இல்லை.

தீபச்செல்வன்:

கடந்த காலத்தில் அரச தரப்பை குற்றம் சாட்டி அவர்களிடமிருந்து வாக்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற வகையில் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றன. கூட்டமைப்புக்குள் இருந்தவர்களின் மீதே சேறு பூசும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழ் மக்களை பொறுத்த வரையில் இது மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை என்றே நான் நினைக்கிறேன். இந்த நிலை உங்களுக்கு எப்படியுள்ளது.

சுரேஷ் பிரேமச்சந்திரன்:

நீங்கள் குறிப்பிடும் விடயம் நிச்சயமாக நடைபெறுகிறது. அரசாங்கத்திற்கு ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது. விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்வது. அது முடிந்து விட்டது. இப்பொழுது இரண்டாவது பிரச்சினை இருக்கிறது. தமிழ் மக்களுக்காக பேசக் கூடிய ஆற்றல் யாருக்கு உண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரமே. தமிழ் தேசியக் கூட்டமைப்பை சின்னாபின்னப்படுத்த வேண்டும், சிதறடிக்க வேண்டும், தமிழ் மக்கள் மத்தியில் அதற்குள்ள மரியாதையை இல்லாமல் செய்ய வேண்டும் என்பது அரசாங்கம் விரும்புகிற விடயம். இந்த விடயத்தை நிறைவேற்றுவது யார்? ஒன்று இந்த தேர்;தலை பயன்படுத்தும் சுயேச்சை குழுக்கள் என்று நிறைய வந்துள்ளன. அத்துடன் ஆளும் கட்சி இருக்கின்றது. ஆளும் கட்சிக்கு சாதகமான சுயேச்சை கட்சிகள் இருக்கின்றன. எங்களில் இருந்து பிரிந்து சென்றவர்களும் அதே காரியத்தைதான் செய்கிறார்கள்.

திருகோணமலையிலிருந்து சம்பந்தரை தோற்கடிக்க வேண்டும். யாழ்பாணத்தில் சுரேஸையும் மாவையையும் தோற்கடிக்க வேண்டும் என்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து அரசு சார்பாக போனாலும்கூட யாராவது தமிழர்கள்தான் போக வேண்டும். ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் ஒரே ஒரு ஆசனம்தான் தமிழர்களுக்கு கிடைக்கும். கொஞ்ச வாக்கு அதிகமாக கிடைத்தால் ஒரு போனஸ் ஆசனம் கிடைக்கும். அங்கு ஒரே ஒரு தமிழ் பிரதிநிதிதான் வரப் போகிறார். அங்கு தமிழ் பிரதிநிதி வராவிட்டால் அங்கு சிங்களப் பிரதிநிதிதான் வரப்போகிறார். அப்படியானால் அங்கு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமே இல்லாமல் போய்விடும்.

வடகிழக்கின் தலை நகரமாக கருதும் திருகோணமலையில் இருக்கும் ஒரு ஆசனத்தை இழக்கும் நிலமையை எங்களில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் அவர்களுக்கு தேசியத்தைப் பற்றி என்ன தெரியும்? அல்லது வடகிழக்கு இணைப்பைப் பற்றி என்ன தெரியும்? நீங்கள் தாயகம் என்று எதைக் கூறுகிறீர்கள்? இது எல்லாவற்றுக்குமான சுயநிர்ணய உரிமை பற்றி நீங்கள் என்ன பேசுகிறீர்கள்?

இது வெறும் சேறடிப்பு மாத்திரமல்ல. அரசாங்கம் சம்பந்தரை அரசியலில் இருந்து இல்லாமல் செய்ய விரும்புகிறது. இதனால் தமிழ் தேசிய தலமையை முற்று முழுதாக அழித்து விடலாம் என்று அரசாங்கம் நினைக்கிறது. அந்த விருப்பத்தை இன்று ஈடேற்றுவது யார்? எங்களில் இருந்து பிரிந்து சென்ற கஜேந்;திரகுமார் பொன்னம்பலம். அவர்தான் சம்பந்தர் தோற்கடிக்கப்பட வேண்டும் என நூற்றுக்கு நூறு வீதம் ஈடுபாட்டுடன் இருக்கிறார்.

சம்பந்தர் தமிழ் தேசியத்தை கைவிட்டவர் என்ற அவருடைய வாதம் முதலில் பிழையானது என்பதற்கு அப்பால் வடக்கையும் கிழக்கையும் இணைக்கிற தலைநகர் திருகோணமலையின் பிரதிநிதித்துவத்தையே இல்லாமல் செய்ய வேண்டும் என சொல்லக் கூடிய ஒருவர் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கப் போகிறேன் என்று சொன்னால் எப்படி சரியாக இருக்கும்? இது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? அவர் தெரிந்தோ தெரியாமலோ அரசாங்கத்தினுடைய அந்த நிகழ்ச்சி நிரலுக்குள் ஆட்பட்டிருக்கிறார். இது சேறுபூசுதல் என்பதற்கப்பால் தமிழ் தேசியத்தை அழிக்கிற வேலையைதான் செய்கிறது.

தீபச்செல்வன்:

கடந்த காலத்தில் தமிழ் கட்சிகள் ஒன்று பட வேண்டும் என்பதை பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் வலியுறுத்தி வந்தார்கள். தமிழ் காங்கிரஸ் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் கூட்டமைப்பின் தலைவர் முதலியவர்கள் பிரிந்து சென்றவர்கள் வந்து இணைய வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்கள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறர்கள்?

சுரேஷ் பிரேமச்சந்திரன்:

நிச்சயமாக, என்னைப் பொறுத்தவரை அடிப்படையில் முரண்பாடு என்பது பிழையானது. அவர்கள் தாங்கள் அறிந்த வகையில் தமது கருத்துக்களை கூறுகின்றார்கள். எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இதற்காக சித்தார்தனைக்கூட நாங்கள் இணைத்துக் கொள்ள விரும்பினோம். சித்தார்த்தன் கடைசி வரை பார்க்கலாம் பார்க்கலாம் என கூறியிருந்தார். கடைசியில் அவர் வரவில்லை. ஆனந்தசங்கரியுடனும் பேசினோம். அவர் தனக்கு யாழ்ப்பாணத்தில் ஆறு ஆசனம் கேட்டார். அதனால்தான் எங்களுக்கு அவருடன் ஓர் இணக்கப்பாட்டிற்கு வர முடியவில்லை. நாங்கள் எல்லோருமே ஒர் அணியில் வருவதற்கான முயற்சியை மேற் கொண்டோம். அந்த வகையில் கஜேந்திரகுமாரை மீண்டும் வந்து இணைய நாங்கள் அழைப்பு விடுகிறோம்.

தீபச்செல்வன்:

தொடக்க காலத்தில் சாத்வீகப் போராட்டம் பிறகு ஆயுதப் போராட்டம் தற்பொழுது அரசியல் ரீதியான ஒரு போராட்டமென தமிழ் மக்களுக்கு முன்னால் விரிந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதை எப்படி கையாளுகிறது? தமிழ் மக்களை இதற்காக எப்படி அணி திரட்ட முடியும்?

சுரேஷ் பிரேமச்சந்திரன்:

ஆயுதப் போராட்டத்தையோ சாத்வீகபோராட்டத்தையோ நடத்த முயலும் பொழுது மக்களுடைய மன உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பயந்து போயிருக்கிறார்கள். மக்கள் சுட்டு வீதிகளில் வீசப்பட்ட, இராணுவ ஆட்சிக்குள்தான் இன்னும் இருக்கிறார்கள். மக்களுக்கு முன்னாலும் பின்னாலும் இராணுவம்தான். மக்கள் கூட்டத்திற்கு வரப் பயப்பிடுகிறார்கள். மக்கள் வாக்களிக்க பயப்படுகிறார்;கள். இப்படியான நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். இந்த நிலமையில் எங்களுக்கு இருக்கும் பலம் என்னவென்றால் இனப்பிரச்சினை தீர்வுக்கு சர்வதேச ரீதியாக ஒரு சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதுதான்.

அந்த சாதகமான சூழலை மையப்படுத்தி அதன் ஊடாக ஒரு தீர்வை நோக்கி போவது எப்படி? அப்படியான தீர்வை நோக்கி செல்லும் பொழுது இலங்கை அரசாங்கம் அதற்கு ஒத்து வராமல் இருக்குமாக இருந்தால் நிச்சயமாக சர்வதேச சமூகம் எங்கள் பக்கம் இருக்கும். சர்வதேச சமூகம் எங்களுடன் நிற்கும் அந்தக் கால கட்டத்தில் மக்களை திரட்டி தீர்வுத் திட்டத்தை கொண்டு வர சாத்வீகமான போராட்டத்தை நடத்த முடியும். அதற்கு முன்பாக மக்களுக்கு தைரியம் அளித்து அவர்களை மீளக் குடியேற்றி அந்த மக்கள் தங்கள் கால்களில் நிற்கும் ஒரு நிலை வந்தால்தான் மக்கள் சிந்திப்பதற்கான சூழல் தோன்றும்.

சுற்றி வர இராணுவம். வெளியில் போவதற்கும் மலசலம் கழிப்பதற்கும் வழியில்லாமல் வேறு விடயங்களை பேச முடியாது. அந்த மக்களுக்கு பாதுகாப்பான வாழ்வு வேண்டும். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். தொழிலை தொடங்க வேண்டும். எங்கள் சனம் பிச்சைக்காரராக இருந்த சமூகம் அல்ல. இன்று மிக மோசமான பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். அந்த வழி முறையில் போனால்தான் நிச்சயமாக இந்த பேராட்டத்தை கொண்டு செல்ல முடியும்.

தட்டச்சில் உதவி: காந்தீபன்

நன்றி : பொங்குதமிழ்

போரும் வாழ்வும்

வலைப்பதிவு பட்டியல்

உன்னதத்திற்கு வழங்கிய நேர்காணல்

-----------------------------------

நிந்தவூர் ஷிப்லிக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த
உரையாடலை வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தமிழ் பத்திரிகையான தினகரன் தணிக்கை செய்து உரையாடலை வெளியிட்டுள்ளது. இது எமது உரையாடலை திசை திருப்ப நடந்த செயலாகும்.
குறிப்பாக தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்தி வருகின்ற அடக்குமுறைகள் யுத்தத்திற்காக அரசு வெலவழிக்கும் பணங்கள் முஸ்லீம்கள் அப்பாவி சிங்கள மக்கள் முதலியோர் பாதிக்கப்படுவது முதலிவை பற்றி பேசிய பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் கேவலமான நடவடிக்கை. இது மாதிரியான செயல்கள் ஊடக சுகந்திரத்திற்கும் உன்மைக்கும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையாகும்.

தீபச்செல்வன்

சித்திராங்கனுக்கு வழங்கிய நேர்காணல்

தளவாய்சுந்தரத்திற்கு வழங்கிய நேர்காணல்